Published : 25 Apr 2017 12:52 PM
Last Updated : 25 Apr 2017 12:52 PM
ஆளும் அதிமுக அம்மா அணி மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அணி ஆகியவற்றின் இணைப்பு குறித்த சிக்கல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் தி இந்து ஆங்கிலத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
ஜெயலலிதா மரணத்தின் மீதான விசாரணை, சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து நீக்கம். இவையே உங்களின் கோரிக்கைகளாக இருந்தன. இதில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?
ஆரம்பத்தில் இருந்தே அணிகள் இணைப்பு பற்றிய பேச்சு துவங்கிய நாளில் இருந்து, இந்த இரண்டு கோரிக்கைகளையே முன்வைத்தோம். அவர்களின் மேலிருந்த நம்பிக்கையில் எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்த, குழு ஒன்றையும் அமைத்தோம். ஆனால் சில அமைச்சர்கள் அனைத்து விதமாகவும் பேசுகிறார்கள். குறிப்பாக இழிவுபடுத்தும் தொனியில்.
நிதியமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்ஸுக்கு தனது பதவியை விட்டுத் தருவதாகச் சொல்கிறார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தைக்கு முறையாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிறார். மற்றொருவரோ கழகத்தின் கதவுகள் எந்த நேரத்திலும் எங்களுக்காகத் திறந்தே இருக்கும் என்கிறார்.
அவர்கள் ஊடகங்களில் தேவையில்லாத கருத்துகளைக் கூறி சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர். இதிலிருந்தே அவர்கள் பேச்சுவார்த்தையில் ஆர்வமாக இல்லை எனத் தெரிகிறது. குழப்பமான நிலையில் இருக்கும் அவர்கள், முறையான பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.
சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்களே...
ஆம், அவர்களோ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் பொது நல வழக்கு குறித்தே பேசிவருகிறார்கள். அது முதலில் தீர்க்கப்படவேண்டுமாம். ஆனால் எங்களுக்குத் தேவை, ஜெ. மரணம் மீதான சிபிஐ விசாரணை. அது தொடர்பாக மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தல். இதனால் நிச்சயம் நீதித்துறை விசாரணை பாதிக்கப்படாது.
சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டதாக கட்சியின் அதிகாரபூர்வ கடிதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டுமா?
இத்தகைய கோரிக்கை அர்த்தமற்றது. அவைத் தலைவர் மதுசூதனன், சசிகலா மற்றும் தினகரன் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். அதை அவர்கள் (ஈபிஎஸ் தரப்பு) ஒப்புக்கொண்டாலே போதும்.
சசிகலா குடும்பத்தினர் ஒதுக்கப்படுவார்கள் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு என்ன செய்வார்கள்? அதை யாரும் தெளிவாகக் கூறவில்லை. எனவே அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சசிகலா குடும்பத்தை நீக்கியதை அவர்கள் ஒப்புக்கொண்டால் போதும்.
ஆனால் அதைச் செய்ய அவர்கள் விரும்புவது போலத் தெரியவில்லை. கழகத்தின் நமது எம்ஜிஆர் பத்திரிகையில் சசிகலா, தினகரன் பெயர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கட்சியில் இருந்து அவர்களை ஒட்டுமொத்தமாக நீக்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அணிகள் இணைப்புக்கு ஓபிஎஸ்ஸுக்கு முதல்வர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகள் அளிக்கப்படவேண்டும் அல்லது ஈபிஎஸ் முதல்வர், ஓபிஎஸ் பொதுச்செயலாளர் என்ற கோரிக்கைகள் இருக்கிறதா?
இவ்வளவு முன்கூட்டியே இவை அனைத்தையும் பேச வேண்டுமா? எதிரணியுடன் இதுவரை நாங்கள் பேசவே ஆரம்பிக்கவில்லை. ஆரம்ப கட்ட கோரிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். சிறப்பான முறையில் பேச்சுவார்த்தை தொடங்கட்டும். பிறகு எதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.
அணி இணைப்பில் நீடிக்கும் இக்கட்டான நிலை இனியும் தொடருமா?
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். எங்கள் பக்கத்தில் இருந்து நிறைய செயல்பாடுகளைக் காணப் போகிறீர்கள். நாங்கள் உண்மையான அதிமுகவாக செயல்படுவோம். மக்களிடம் செல்வோம். அவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்.
எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு வருகிறோம். வளர்ச்சி மற்றும் போராட்ட அரசியலை நாங்கள் முன்னெடுப்போம். கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களில் 95% பேர் எங்களுடனேயே இருக்கிறார்கள்.
தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT