Published : 18 Aug 2017 11:18 AM
Last Updated : 18 Aug 2017 11:18 AM

செல்வமகள் ஆன 71 பழங்குடி குழந்தைகள்: கொடை தந்த கோவை அஞ்சல் ஊழியர்கள்!

நேகமாக இந்தியாவில் வேறெங்கும் இப்படி நடந்திருக்காது. அதனால்தான், கோவை கோட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் செய்திருக்கும் இந்த நல்ல காரியம் பாராளுமன்றம் வரைக்கும் பேசப்பட்டுள்ளது.

இவர்கள் அப்படி என்ன நல்ல காரியம் செய்துவிட் டார்கள்? 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழங்குடியின குழந்தைகளில் 71 (வருங்கால) செல்வ மகள்களை உருவாக்கி இருப்பதுதான் இவர்கள் செய்திருக்கும் அந்த நல்ல காரியம். கோவை ஆனைகட்டியைச் சுற்றி தூமனூர், சேம்புக்கரை, பனப்பள்ளி உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பழங்குடி மக்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிப் படிப்புக்கூட இல்லாதவர்கள்.

selvamakal_4.jpg ஜெயராஜ் right

தற்போதைய தலைமுறையினர் மட்டுமே ஓரளவுக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், காடுகளில் பொருள் தேடுவதும், செங்கல் சூளைகளுக்கு வேலைக்குப் போவதுமாய் இருக்கிறார்கள். சரியான போக்குவரத்து வசதிகூட இல்லாத இதுபோன்ற மலை கிராமங்களின் மக்களுக்குத்தான் நேசக்கரம் நீட்டியிருக்கிறது கோவை கோட்ட அஞ்சல் துறை ஊழியர் சங்கம்.

இங்குள்ள பழங்குடியின குழந்தைகளில் பத்து வயதுக்குட்பட்ட 71 பெண் குழந்தைகளைச் தேர்வு செய்து அவர்களை மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்த்திருக்கும் இந்த சங்கத்தினர், அவர்களுக்கு முதல் தவணையாகக் கட்ட வேண்டிய தலா ஆயிரம் ரூபாயை தாங்களே செலுத்தியிருக்கிறார்கள். சுதந்திர தினத்தன்று நடைபெற்ற இதே நிகழ்வு கடந்த ஆண்டும் நடந்தது. அப்போது, சிறுவாணி மலையடிவாரத்தைச் சேர்ந்த 43 குழந்தைகளுக்கு இதுபோல் உதவப்பட்டு, அது பாராளுமன்றம் வரைக்கும் பேசப் பட்டது

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை வடக்கு உபகோட்ட அஞ்சல் உதவி கண்காணிப்பாளர் ஜெயராஜ், “மத்திய அரசின் செல்வமகள் திட்டத்தில் சேர்ந்தால் முதலில் 1000 ரூபாயும் அதன் பிறகு ஆண்டுக்கு 1000 ரூபாய் வீதம் மொத்தமாக 21 ஆண்டுகள் செலுத்த வேண்டும். செலுத்தும் பணத்துக்கு வட்டியும் உண்டு. அந்தக் குழந்தைக்கு 17 வயதாகும்போது படிப்புக்காக 50 சதவீதமும், பிறகு திருமணத்துக்காக எஞ்சிய தொகையும் வழங்கப்படும்.

செயலில் இறங்கினோம்

இவ்வளவு சிறப்பான இந்தத் திட்டத்தை கூலித் தொழிலாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. எனவேதான், முன்பு கோவையில் அஞ்சல் துறை தலைவராக இருந்த மஞ்சுப்பிள்ளை இந்தத் திட்டத்தை ஏழை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்க ஏதாவது செய்யலாமே என்று சொன்னார். அதன்படி தான், செல்வமகள் திட்டத்தில் சேரும் குழந்தைகளுக்கான முதல் தவணையை அஞ்சல் துறை ஊழியர் சங்கத்தினரே செலுத்த முன்வந்தார்கள்.

முதல் தவணையைச் செலுத்தி கணக்குப் புத்தகத்தைக் கையில் கொடுத்துவிட்டால், சம்பந்தப் பட்டவர்கள், மாதா மாதம் 100 ரூபாய் செலுத்தியாவது திட்டத்தை உயிர்ப்பித்துக் கொள்வார்கள். இந்த யோசனைப்படிதான் கடந்த ஆண்டு செயலில் இறங்கினோம்.

selvamakal_3.jpg சுமலதா

ஏழ்மை நிலையில் இருக்கும் பழங்குடி மக்களுக்கு உதவ வேண்டும் என்பது எங்களின் இலக்கு. அதன்படியே இந்த ஆண்டும் 71 குழந்தைகளைத் தேர்வு செய்வதற்கு எங்கள் அலுவலர்கள் மலை கிராமங்களில் அலைந்து, பழங்குடி மக்களிடம் இத்திட்டம் குறித்து புரியவைத்து குழந்தைகளின் பட்டியலை தயாரித்து முடித்தார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஆனைகட்டி துணை அஞ்சல் நிலைய அலுவலர் சுமலதா, “நானும் இதே ஊர்தான் என்பதால் இந்தப் பகுதியிலுள்ள பழங்குடி மக்களில் பெரும்பகுதியினரை எனக்குத் தெரியும்.

அந்த அறிமுகத்தை வைத்து, அவர்களை என்னிடத்துக்கு வரவைத்தும் அவர்களின் இருப்பிடத்துக்குச் சென்றும் தகவல்களை திரட்டுவது எளிதாக இருந்தது.

கொஞ்சம் சிரமமான காரியம் தான் என்றாலும் உண்மையான ஏழைகளுக்கு உதவிய மன நிறைவு இருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x