Published : 07 Aug 2017 10:01 AM
Last Updated : 07 Aug 2017 10:01 AM

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிணறு பிரச்சினை: தொடர் போராட்டத்தை தொடங்கிய லெட்சுமிபுரம் கிராம மக்கள்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சினைக்குரிய கிணற்றை ஊராட்சி வசம் ஒப்படைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ள லெட்சுமிபுரம் கிராம மக்கள், நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள லெட்சுமிபுரம் ஊராட்சியின் குடிநீர் ஆதாரமான பொதுக் கிணறு வறண்டது. இதற்கு, பொதுக் கிணறு அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான இடத்தில் மெகா கிணறு தோண்டியதுதான் காரணம் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால், சம்பந்தப்பட்ட கிணற்றை ஊராட்சி நிர்வாகத்துக்கு தரவேண்டும் என லெட்சுமிபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கிணறு சுப்புராஜ் என்பவருக்கு விற்கப்பட்டது. கிராமத்துக்கு விற்பனை செய்வதாக கூறிவிட்டு தனியாருக்கு ஓ.பன்னீர்செல்வம் கிணற்றை விற்றதாக குற்றம்சாட்டி மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.

இதையடுத்து கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டதாக கிராம கமிட்டியினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கிணற்றுக்கு மின் இணைப்பு தந்ததில் முறைகேடு நடந்ததாக கூறி உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் கிராமத்துக்கு கிணற்றை பத்திரப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே பேச்சுவார்த்தையில் கூறியபடி லெட்சுமிபுரத்துக்கென புதிதாக ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் 2 நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டன.

தாமதப்படுத்துவதாக புகார்

இந்நிலையில், கிணற்றை ஊராட்சிக்கு பத்திரப் பதிவு செய்து தருவதை தாமதப்படுத்துவதாக கண்டனம் தெரிவித்து கிராம மக்கள் நேற்று தொடர் போராட்டத்தை தொடங்கினர். பெண்கள் அதிகளவில் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக கிராம கமிட்டியினர் கூறும்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து தொடர்ந்து கிராம மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

பிரச்சினைக்குரிய கிணற்றை ஊராட்சி வசம் ஒப்படைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சினையில் தீர்வு கிடைக்கும் வரை பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x