Published : 21 Apr 2014 04:00 PM
Last Updated : 21 Apr 2014 04:00 PM
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக ஒரு சமூகத்தினர் துண்டறிக்கை அச்சிட்டு அதை ரகசியமாக விநியோகித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை தேர்தல் விதிகளுக்கு முரண்பட்டது என்பதால் இதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சிவகங்கை தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் திருமயம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதியில் துண்டறிக்கை 4 பக்கத்தில் அச்சிடப்பட்டு ரகசியமாக விநியோகிக்கப்படுகிறது.
இதற்கு சிவகங்கைத் தொகுதியில் அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள எங்கள் சமூகத்தில் இருந்து எந்தக் கட்சியினரும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதால் அனைத்துக் கட்சியினர் மீதும் அதிருப்தியில் இருந்தோம். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவராக நியமித்திருப்பதுடன், சமூகத்தைப் பற்றியும் பல்வேறு கூட்டங்களில் பேசிவருகிறார்.
அரிமளம் அருகே முத்தரையர் சிலை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆகவே, அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றும், எல்லோரும் இத்தொகுதி வேட்பாளர் தோற்றுவிடுவார் என்று விமர்சிப்பதால் நம் சமூகத்தினர் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால்தான் நமதுபலம் மற்றவர்களுக்குத் தெரியும் என்றும் அதில் பஞ்ச் வைத்துள்ளனர். இதை அந்தச் சமூகத்தின் இளைஞர்கள் சார்பில் அச்சிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய துண்டறிக்கையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளான அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கைகளின் எண்ணிக்கை, அச்சடிக்கப்பட்ட இடம், யாரால் அச்சடிக்கப்பட்டது, தொடர்பு எண் என எந்த விவரமும் இல்லை. இதனை ரகசியமாக மக்கள் கூடும் இடங்களில் வீசிச் செல்கின்றனர்.
இதுகுறித்து அந்த சமூகத்தைச்சேர்ந்த சிலர் கூறியது:
“எங்கள் சமூகத்தின் சார்பில் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் இருந்தாலும் பெரிய அளவில் பேசப்படக்கூடிய திருச்சியை மையமாக வைத்து இயங்கும் இரு சங்கங்களில் ஒன்று அதிமுகவுக்கும், மற்றொன்று திமுகவுக்கும் ஆதரவு அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
சில அமைப்புகள் பல தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாகவும் தெரிகிறது. அப்படி இருக்கையில் இந்த சமூகத்தில் இருந்து இதுவரை எந்த சங்கமும் பகிரங்கமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்கவில்லை.
அப்படியே ஒரு சங்கம் ஆதரவளிக்க முன்வந்தால் அவர்களது கொள்கைகளை மக்களைச் சந்தித்து துண்டறிக்கையாக கொடுக்கலாம், பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அதைவிடுத்து இவ்வாறு ரகசியமாக வீசிச் செல்வது காங்கிரஸ் கட்சியினர் எங்கள் சமூகத்தினரின் வாக்குகளைக் கவரவேண்டுமென்ற ராஜதந்திரமாக இருக்கலாம் அல்லது தேர்தல் நேரத்தில் வருவாயை குறிவைத்து முளைக்கும் சங்கங்களைப் போன்று இதுவும் ஒன்றாக இருக்கலாம்” என்றனர்.
எப்படியோ, ஜாதி சங்கங்கள் பெரும்பாலும் தேர்தல் நேரத்தில் துளிர்விடுவதும் பின்னர் தளர்வடைவதும் இயல்புதான் என்பார்களே, அதுபோலதான் இதுவும் இருக்கலாம். இவ்வாறு அனுமதி இல்லாமல் விதிகளுக்குப் புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் கண்காணிப்பு மற்றும் காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT