Published : 20 Aug 2017 09:28 AM
Last Updated : 20 Aug 2017 09:28 AM
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூரிய ஒளி மின் விளக்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. இதன்படி, சென்னை உள்ளிட்ட 31 அஞ்சல் நிலையங்களில் இந்த மின் விளக்குகள் நாளை (ஆக.21) முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, அஞ்சல் துறைத் தலைவர் (மெயில் மற்றும் வர்த்தக வளர்ச்சி) ஜே.டி.வெங்கடேஸ்வரலு ‘தி இந்து’விடம் கூறியதாவது: அஞ்சல் உறைகள், இன்லேன்ட் லெட்டர்கள், ஸ்டாம்ப்புகள்மட்டுமே விற்பனை செய்து வந்த அஞ்சல் துறை தற்போது பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 2.32 கோடி குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 15.31 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு கிடைத்துள்ளது. 13.66 லட்சம் குடும்பங்கள்மண்ணெண்ணை விளக்குகளைப் பயன்படுத்தி வருகின்றன.
மத்திய, மாநில அரசுகள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்த அதிகளவில் ஊக்கப்படுத்தி வருகின்றன. சன் கிங் சோலார் புராடெக்ட்ஸ் என்ற பெயரில் ரூ.499,ரூ.1,199, ரூ.1,899 என மூன்று வித விலையில் இந்த மின் விளக்குகள் விற்பனை செய்யப்படும். இந்த மின் விளக்குகளுக்கு 2 ஆண்டுகள் வாரன்டியும் வழங்கப்படுகிறது. இதன் விற்பனை வரும் 21-ம் தேதி தொடங்கப்படுகிறது. ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட சூரிய ஒளி மின் விளக்குகள் ஒரு மாடல் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தற்போது 3 மாடல்களில் விற்பனை செய்யப்பட உள்ளன.
முதற்கட்டமாக, சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகம், கடற்கரைச் சாலை யில் உள்ள ஜி.பி.ஓ. அலுவலகத்திலும், திருச்சி மற்றும் கோவை சர்க்கிளில் தலா 4 தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மதுரை தலைமை அஞ்சல் நிலையத்தில் உள்ள போஸ்ட் ஷாப்பி என்ற கடைகளில் விற்பனை செய்யப்படும். இதைத் தவிர, 20 அஞ்சல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும். சூரிய ஒளி மின் விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு வெங்கடேஸ்வரலு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT