Published : 15 Aug 2017 12:53 PM
Last Updated : 15 Aug 2017 12:53 PM
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்து கிடந்த தடுப்பணையை சீரமைத்து 3 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பராமரித்து வருகின்றனர் ராஜபாளையம் அருகே உள்ள கிராம மக்கள்.
வறட்சி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகரில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நீராதாரங்களாக விளங்கக் கூடிய ஆறுகளோ, ஏரிகளோ இல்லை.
இந்நிலையில், 3 கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளனர் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்காபுரம் கிராமத்தினர். சொக்கலிங்காபுரம்- மீனாட்சிபுரம் கிராமங்களுக்கு இடையே வடிகால் ஓடை உள்ளது.
கானாங்குளம் பகுதியிலிருந்து சங்கரபாண்டியபுரம் கண்மாய் வரை செல்லும் இந்த ஓடையின் நடுவே சொக்கலிங்காபுரம் அருகில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை சுமார் 25 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் மழை நீர் வீணாகி வந்தது.
தற்போது தொடர் வறட்சியால் சொக்கலிங்காபுரம், மீனாட்சிபுரம் மற்றும் கலங்காபேரி கிராமத்தில் விவசாயம் பொய்த்தது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில், சொக்கலிங்காபுரம் கிராம மக்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பராமரிப்பின்றி கிடந்த தடுப்பணையை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்காக இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மழைநீர் வரத்துக் கால்வாய்களில் உள்ள முட்புதர்களை அகற்றி சீர் செய்து, நீர்பிடிப்பு பகுதியை ஆழப்படுத்தி, தடுப்பணையை கட்டியுள்ளனர். இதன் மூலம் சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கிவைத்து 3 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த இளைஞரும் முன்னாள் ராணுவ வீரருமான ஏ.ஜி.முத்துக்குமார் கூறியதாவது: இந்த தடுப்பணை 25 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்த நிலையில் இருந்தது. ராஜபாளையத்தில் உள்ள துளி அமைப்பை தொடர்பு கொண்டு உதவி கோரினோம். அவர்களின் முயற்சியால் தடுப்பணையை சீரமைக்க அனுமதி கிடைத்தது. அதன்பின் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நண்பர்களிடமும், ஊர் பொதுமக்களிடமும் ரூ.1 லட்சம் நிதி வசூல் செய்து கடந்த 19-ம் தேதி பராமரிப்பு பணிகளை தொடங்கினோம். நீர் வரும் பாதை மற்றும் கரை முழுவதும் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றினோம். பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட அடுத்த நாளே இயற்கையின் கருணையால் மழை பெய்ய தொடங்கியது. ஒரே நாளில் தடுப்பணை நிரம்பியது.
நிதியுதவி அளித்த இளைஞர்களுக்கும், கிராம மக்களுக்கும் அதன் பயன் கிடைக்கத் தொடங்கிவிட்டது என பெருமிதத்தோடு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT