Published : 21 Aug 2017 12:09 PM
Last Updated : 21 Aug 2017 12:09 PM
நவீன கலாச்சாரம், மாறி வரும் உணவு பழக்க வழக்கத்தால் தற்போது பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. மருத்துவ உலகம், புதிதாக பரவும் நோய்களை கண்டறிந்து அதை குணப்படுத்தும் மருந்துகளை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் புதிய மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் நோய் கிருமிகள் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகின்றன. அதை தடுப்பதற்கான மருந்துகள் சிலவற்றால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறைக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.
அவ்வாறான மாற்று சிகிச்சை முறைகளில் ஒன்றுதான் செல்லப்பிராணிகள் உதவியுடன் கூடிய சிகிச்சையாகும். இந்த முறை சிகிச்சை வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளது. தமிழகத்தில் தற்போதுதான் இந்த சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த சிகிச்சையில் பொதுவாக வீட்டு விலங்குகளான நாய், பூனை, குதிரை, முயல்கள், பறவைகள், வளர்ப்பு மீன்கள், சில நேரங்களில் கடல்வாழ் உயிரினங்களான டால்பின்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்கள் விலங்குகளுடன் பழகுவதன் மூலம், மனிதன் மற்றும் தோழமை விலங்குகள் இடையே ஓர் வலுவான பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. அதனால், சிகிச்சைப்பெறும் தனி நபர்களின் உடல் நலம் மற்றும் உளவியல் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படுவதால் அவர்களின் உணர்வாற்றல், அறிவாற்றல் ஆகியவை மேம்படும் என்பதே இதன் அடிப்படையாகும்.
இது தொடர்பாக மதுரையை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவரும், செல்லப்பிராணிகள் சிறப்பு மருத்துவருமான சி.மெரில்ராஜ் கூறியதாவது: இந்த சிகிச்சை முறையில், மனிதர்களுடன் மிகுந்த நட்புடன் பழகும் தன்மை கொண்ட கோல்டன் ரீட்ரைவர் வகையை சேர்ந்த நாய்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பூனைகள், மிக குறைந்த அளவிலேயே இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
குதிரைகள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறைக்கு ஹிப்பா தெரபி என்று பெயர். இம்முறையால் சிகிச்சை பெறும் நபர்கள் குதிரைகள் மீது சவாரி செய்வது, உணவு வழங்குவது, பராமரித்தல் மற்றும் தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
பொதுவாக இந்த வகை சிகிச்சை மன நோயாளிகளுக்கும், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கும் ஏற்றது. டால்பின் சிகிச்சையானது, ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமானது. இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்கள் டால்பின்களுடன் நீந்துவதற்கும், பழகுவதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வகை டால்பின்கள் இதற்கென பிரத்யேகமான செயற்கை முறையில் வடிவமைக்கப்பட்ட நீர்நிலைகளில் பராமரிக்கப்படுகின்றன.
இந்த சிகிச்சை முறை, குழந்தைகளில் காணப்படும் ஆட்டிசம் குறைபாடுகள் மற்றும் டவுன் சிண்ட்ரோம் எனும் மரபணு குறைபாடுகளை சரிசெய்ய உகந்தது.
தொடர்ச்சியாக இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது நோயாளிகளின் உடல் இயக்கங்கள், கூர்ந்து கவனிக்கும் திறன், பேச்சு மற்றும் மொழி நடை அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாய்களின் மூலம் வழங்கும் சிகிச்சையால் நோயாளியின் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, நரம்பு சம்பந்தப்பட்ட ஹார்மோன்களின் அளவு சீரடைவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
வயதான நோயாளிகளில் சிலர் தனிமை, மன அழுத்தம், சோர்வுடன் காணப்படுவார்கள். ஆனால், இந்த சிகிச்சை மூலம் அவர்களின் மனச்சோர்வு, படிப்படியாக குறைந்துவிடும். நோயாளிகள் செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது, அவற்றை குளிப்பாட்டி உணவு மற்றும் தண்ணீர் அளித்து பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதால், அவர்களின் உடல் இயக்கங்கள் சீரடைந்து நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கிறது.
குழந்தைகள் செல்லப்பிராணிகளுடன் தொட்டு விளையாடுவதாலும், அன்பு பாராட்டி உணவு மற்றும் தண்ணீர் வழங்கி பராமரிப்பதாலும் அவர்களிடம் பொறுமையுடன் கூடிய நட்புணர்வு அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT