Published : 10 Aug 2017 12:00 PM
Last Updated : 10 Aug 2017 12:00 PM

முதுமலையை ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் விஷச் செடிகள்: உணவு பற்றாக்குறையால் தவிக்கும் விலங்குகள்

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்று சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதுமலை புலிகள் காப்பகத்தை பார்த்தீனியம் விஷச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றின் வளர்ச்சி வனத்துறைக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.

சர்வதேச அளவில் பிரசித்த பெற்றது முதுமலை சரணாலயம். மொத்தம் 321 சதுர கி.மீட்டர் பரபரப் பளவு கொண்ட இந்த சரணாலயம் கடந்த 2007-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

சிறிய பரப்பளவுடைய முதுமலை யில் தமிழகத்திலேயே அதிக அளவிலான புலிகள் வசிக்கின்றன. 321 சதுர கி.மீட்டரில் சுமார் 125 புலிகள் உள்ளன. பிற புலிகள் காப்பகங்களில் சுமார் 40 சதுர கி.மீட்டரில் ஒரு புலி வசிக்கும் நிலையில், முதுமலையில் 7 சதுர கி.மீட்டரில் ஒரு புலி வசிக்கிறது.

முதுமலையை ஆக்கிரமித் துள்ள களைச்செடிகளே வன விலங்குகளுக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது இயற்கை ஆர்வலர் களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.செல்வராஜ் கூறியதாவது: முதுமலையை தேக்கு மரங்கள் மற்றும் களைச்செடிகளான லெண்டனா, உபோடோரியம், பார்த்தீனியம் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன. முதுமலையில் உள்ள தேக்கு மரங்களின் கீழ் எந்த தாவரமும் வளராது. அதன் விதைகளையும் பறவைகள் உண்ணாது.

புல்வெளிகளில் வேட்டையாடும் புலிகளுக்கு தேக்கு மரங்கள் தடையாக உள்ளதால், அவை ஓடி தனது இரையை வேட்டையாட முடியாமல் போகிறது. இதனால், விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவை மக்கள் குடியிருப்பு பகுதிகளை தேடி வருகின்றன. இதன் காரணமாக மனித-விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது என்றார்.

தாவரவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் வி.ராம்சுந்தர் கூறியதாவது: லெண்டனா, உபோடோரியம் செடிகளைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள், ஒரே பகுதியில் இருந்து வேருடன் அகற்றினால் மட்டுமே, அது தொடர்ந்து வளராமல் இருக்கும். ஓராண்டு எடுத்த பின், அடுத்த ஆண்டு அகற்றவில்லை எனில், மீண்டும் அதிகளவில் வளரத் தொடங்கும்.

அதுமட்டுமல்லாமல், அதன் விதைகள் காற்றில் பரவி பிற இடங்களிலும் வளரத் தொடங்கும். இதனால், நிச்சயம் வன விலங்குகளுக்கான, உணவு தாவரங்கள் முழுமையாக அழிய வாய்ப்புள்ளது. இதை தவிர, விலங்குகளுக்கு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றார்.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனவாச ஆர்.ரெட்டி கூறும்போது, ‘காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பார்த்தீனியம் செடிகள் பரவியுள்ளன. இவற்றை அகற்றும் பணி சவாலானது. தீ வைத்தால் பல இடங்களுக்கு பரவி விடும். உப்பு தெளித்தால் செடிகள் கருகி விடும்.

ஆனால் உப்பு சுவை விலங்குகளுக்கு பிடித்தமானதால் விஷத் தன்மையுள்ள இந்தச் செடிகளை விலங்குகள் உண்டால் பாதிப்புக்கு உள்ளாகும். புலிகள் காப்பகத்தில் இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது. இதனால், முதுமலையை ஆக்கிரமித்துள்ள களைச்செடிகளை அகற்றுவதில் ஆதிவாசிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் இப்பணி நடக்கிறது. இதனால், பழங்குடியினருக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x