Published : 25 Aug 2017 03:05 PM
Last Updated : 25 Aug 2017 03:05 PM

கின்னஸ் சாதனை படைக்க ஒரு லட்சம் விநாயகர் உருவ பொருட்களை சேகரிக்க முயற்சி: தீவிர லட்சியத்தில் உதகை நிஷாலி

நீலகிரி மாவட்டம் உதகை விஜயநகரில் வசிக்கும் நிஷாலி மஞ்சுபாஷினியின் வீட்டுக்குள் நுழைந்தால், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் விதவிதமான வடிவங்களில் விநாயகர் காட்சி தருகிறார். வீடு முழுவதும் பல்வேறு பொருட்களாலான விநாயகர் உருவம் ஆக்கிரமித்துள்ளதால், சதுர்த்தி விழா கொண்டாட அக்கம் பக்கத்து வீட்டாரும் தயாராகி வருகின்றனர்.

காகிதம் முதல் தங்கம் வரை அனைத்துப் பொருட்களிலும் விநாயகர் உருவம் மிளிர்கிறது. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை சேகரித்துள்ளார் நிஷாலி. ஒரு லட்சம் விநாயகர் உருவம் பதித்த பொருட்களை சேகரித்து, கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, ‘காகிதம், பலவகை உலோகங்கள், பீங்கான், தேங்காய் நார் என ஏராளமான பொருட்களில் கீ செயின், மோதிரங்கள், டாலர்கள், திரைச் சீலைகள், விளக்குகள் என பலவித வடிவங்களில் பொருட்களை சேகரித்து வருகிறேன். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் உருவங்களிலால் ஆன சிலைகள் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், 80 ஆயிரம் விநாயகர் சிலைகளை 60 ஆண்டுகளாக சேகரித்திருக்கிறார். இதை முறியடித்து, ஒரு லட்சம் விநாயகர் சிலைகளைச் சேகரித்து கின்னஸ் சாதனை படைப்பதே லட்சியம்’ என்றார்.

பாக்கு விநாயகர்

பாக்கில் உருவாக்கப்பட்ட விநாயகர் அரிதானது. சேகரிப்பு குறித்து நேரடியாகவும், முகநூல் வாயிலாகவும் அறிந்தவர்கள், பல்வேறு விநாயகர்களை சிலைகளை வாங்கி அனுப்பியுள்ளனர். துபாயில் இருந்து, ஒருவர் மண்ணால் ஆன பாம்பு வகை விநாயகர் சிலையை அனுப்பியுள்ளார். உலகிலேயே முதன் முறையாக விநாயகர் உருவம் பதித்த புடவையைத் தன்வசமாக்கியுள்ளதாக பெருமை கொள்கிறார் நிஷாலி.

இதற்காக தனியாக ஓர் அறையை ஒதுக்கி, பல்வேறு பொருட்களிலாலான விநாயகர் உருவங்களையும் காட்சிப்படுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x