Published : 14 Aug 2017 09:48 AM
Last Updated : 14 Aug 2017 09:48 AM
வகுப்பறைகளில் நடைபெறும் சரளமான ஆங்கில உரையாடல்கள்; நடுத்தர குடும்பங்களின் குழந்தைகளும் நிறைந்துள்ள வகுப்பறைகள்; அரசுப் பள்ளிகளில் தரமான ஆங்கில வழிக் கல்வி கிடைக்குமானால், தனியார் பள்ளிகளை விடவும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி.
இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் செயல்படுகின்றன. பெயரளவில் இல்லாமல் முழுமையான ஆங்கில வழி வகுப்புகள் செயல்படுவது வகுப்பறை நடவடிக்கைகளை பார்க்கும்போது தெரிகிறது. தனியார் பள்ளிகளை விடவும் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் தரமான ஆங்கில வழிக் கல்வியை அளிக்க முடியும் என இந்தப் பள்ளி ஆசிரியர்கள் நிரூபித்து வருகின்றனர். ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்கவும், எழுதவும், உரையாடவும் முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ளனர். ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழிலும் பிழையின்றி வாசிக்கவும், எழுதவும், உரையாடவும் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதிலும், அவர்களிடம் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதிலும் ஆசிரியர்கள் காட்டும் ஆர்வமும், அக்கறையும் பள்ளி வளர்ச்சிக்கு பிரதான காரணமாக திகழ்கிறது. மாணவர்களை உளவியல் ரீதியாக அணுகுவதில் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் நன்றாகவே பயிற்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு வரை தனியார் பள்ளியில் படித்தவர் அ.அமத்சியா பாருக். தற்போது 5-ம் வகுப்பில் இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார். இங்கு சேர்ந்த முதல் நாளிலிருந்து அந்த மாணவரின் முகத்தில் எப்போதும் உற்காசமும், மகிழ்ச்சியும் காணப்படுவதாக வகுப்பாசிரியர் கூறுகிறார்.
“இதற்கு முன் படித்த பள்ளியில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. இங்கு முதல் நாளிலேயே பல நண்பர்கள் கிடைத்தார்கள். இவ்வளவு அன்பான ஆசிரியர்களை இதற்கு முன் பார்த்ததில்லை. வீட்டுப் பாடமாக அவ்வப்போது பல ப்ராஜக்ட் பணி கொடுப்பார்கள். அந்த ப்ராஜக்ட் அழகாக, நேர்த்தியாக செய்திருக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பார்கள். மாணவர்களால் அவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான ப்ராஜக்ட் பெற்றோர்களால்தான் செய்யப்படும்.
ஆனால், இந்தப் பள்ளியில் சேர்ந்தவுடன், எவ்வளவு மோசமாக இருந்தாலும் ப்ராஜக்ட் பணி என்பது மாணவர்களால்தான் செய்யப்பட வேண்டும் என்று எனது புதிய ஆசிரியர் கூறியது மிகவும் வியப்பாக இருந்தது. எனது ப்ராஜக்ட் பணியை இப்போது நானே மகிழ்ச்சியாக செய்கிறேன். முன்பைவிட இப்போது நன்றாகப் படிப்பதாக நானே உணர்கிறேன். இங்குள்ள பரந்த திடலில் நிறைய நேரம் விளையாட அனுமதிக்கிறார்கள். இந்தப் பள்ளியில் சேர்ந்ததில் இருந்து நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என தனது மகிழ்ச்சிக்கான காரணங்கள் பற்றி கூறுகிறார் பாருக்.
வயதுக்கேற்ற மன வளர்ச்சி இல்லாத சிறப்புக் குழந்தை பெனாசிர் பேகம். தனியார் பள்ளியில் படித்து வந்தாள். எனினும் தமது குழந்தைக்கு ஆசிரியர்களின் கூடுதல் கவனம் தேவை என கருதிய அவரது பெற்றோர் கடந்த ஆண்டு வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சேர்த்தனர். நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட சிலரைத் தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் கூட சிரமப்படும் குழந்தை, கடந்த ஆண்டு பள்ளி ஆண்டு விழா மேடையில் நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். தங்கள் குழந்தையிடம் மறைந்திருந்த திறமையை இப்பள்ளி ஆசிரியர்கள்தான் கண்டுபிடித்து, வெளிக்கொண்டு வந்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.
இத்தகைய ஆற்றல் மிகுந்த ஆசிரியர்கள் பணியாற்றும் இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 120 மாணவர்கள் பயின்றனர். இந்த ஆண்டு 184 ஆக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பள்ளியின் வளர்ச்சிப் போக்கு பற்றி தலைமை ஆசிரியர் தே.எஸ்தர் வேணி கூறியதாவது:
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2009-ம் ஆண்டு நான் பொறுப்பேற்றேன். தனியார் பள்ளிகளின் செல்வாக்கால் மற்ற பள்ளிகளைப் போலவே எங்கள் பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. சுற்றியுள்ள பகுதிகளை விட பள்ளி வளாகம் தாழ்வாக இருந்ததால் மழைக் காலங்களில் தண்ணீர் பெருகி விடும். முழங்கால் அளவுக்கு மேல் தேங்கும் மழை நீர் வடிய பத்து நாள் கூட ஆகும். இதுவும் மாணவர் எண்ணிக்கை குறைய காரணமாக இருந்தது. 2011-12ல் 75 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டது.
இது பற்றி நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டோம். 2013-14ம் கல்வியாண்டின்போது, பள்ளி வளாகத்தை நகராட்சி நிர்வாகத்தினர் மேடுபடுத்தினார்கள். பள்ளி மைதானம் முழுவதும் அழகான கற்களை பதித்தார்கள். சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஏற்கெனவே மரங்கள் நிறைந்து காணப்படும் எங்கள் பள்ளி வளாகம், இந்த புதிய வசதிகளால் பொலிவு பெற்றது. 2012-13ம் கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்கினோம்.
இதற்கிடையே எங்கள் பள்ளியில் அளிக்கப்படும் கல்வி பற்றி ராமநாதபுரம் நகரம் முழுவதும் எங்கள் ஆசிரியர்கள் பிரச்சாரம் செய்தனர். எங்கள் ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்கள். மே மாதத்தில் முதல் பத்து நாட்கள் மட்டுமே கோடை விடுமுறையை செலவிடும் ஆசிரியர்கள் மீதம் 20 நாட்களும் தினமும் பள்ளிக்கு வந்து விடுவார்கள். மாலை 3 மணி தொடங்கி இரவு 7 மணி வரை நகரின் ஒவ்வொரு வீடாகச் சென்று எங்கள் பள்ளியின் சிறப்பு பற்றி எடுத்து கூறுவோம். எங்கள் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன்களை தனியார் பள்ளி மாணவர்களோடு பெற்றோர்களே ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினர். இதனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 77 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாள், புதிய மாணவர்கள் அனைவரையும் நகரின் முக்கிய வீதிகள் வழியே மேள, தாளங்கள் முழங்க, மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தோம். இதுபோன்ற காரணங்களால் எங்கள் பள்ளி நாளுக்கு நாள் பிரபலமடைகிறது. இனி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை கட்டாயம் அதிகரிக்கும். இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறுகிறார்.
இப்பள்ளிக்கு மேலும் பல வசதிகள் தேவைப்படுகின்றன. தற்போது பல அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை வசதி இந்தப் பள்ளிக்கும் கிடைத்தால், மாணவர்களின் கற்றல் திறனை இன்னும் அதிகப்படுத்த முடியும். மாணவர்களுக்கான இருக்கை வசதிகள் அதிகம் தேவைப்படுகிறது. அரசு அதிகாரிகளிடம் இது பற்றி முறையிட்டுள்ள ஆசிரியர்கள், நல்லெண்ணம் கொண்ட நன்கொடையாளர்களின் உதவி கிடைக்குமா என்றும் தேடி வருகிறார்கள்.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 82202 77641.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT