Published : 31 Aug 2017 11:15 AM
Last Updated : 31 Aug 2017 11:15 AM
பாளையங்கோட்டை அருகே மகிழ்ச்சி நகரில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவால் கடந்த 3 ஆண்டுகளாக தினமும் 5 ஆயிரம் லிட்டருக்குமேல் குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. குளமாக அப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரி, லாரிகள் கழுவவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் சிலர் பயன்படுத்துகின்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள 55 வார்டுகளிலும் உள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி இருக்கிறது.
12 நீரேற்று நிலையங்கள்
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கொண்டாநகரம், சுத்தமல்லி, குறுக்குத்துறை, மணப்படைவீடு, திருமலைக்கொழுந்துபுரம், தீப்பாச்சியம்மன்கோயில், கருப்பந்துறை ஆகிய இடங்களில் உள்ள 12 தலைமை நீரேற்று நிலையங்களில் உள்ள 46 நீர் உறிஞ்சு கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேர்க்கப்படுகிறது.
அங்கிருந்து மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கொண்டாநகரத்திலிருந்து பிரதான குழாய் மூலம் மகிழ்ச்சி நகரிலுள்ள 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் பிரதான குழாயில்தான் கடந்த 3 ஆண்டுகளாகவே கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதுதான் மகிழ்ச்சிநகரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள பிரச்சினை.
வற்றாத குளம்
திருநெல்வேலி மாநகரின் விரிவாக்க பகுதியான மகிழ்ச்சி நகர், பாளையங்கோட்டையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியிலிருந்து ரெட்டியார்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையின் வடபுறம் இருக்கிறது.
இந்த சாலையிலிருந்து மகிழ்ச்சி நகருக்குள் நுழையும்போதே பெரிய மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியிருப்பதையும், தாழ்வான பகுதிகளை நோக்கி தண்ணீர் வழிவதையும் காணமுடிகிறது. வறட்சியால் இப்பகுதியில் புல்பூண்டுகளையே பார்க்க முடியாத நிலையில் இப்பகுதியில் மட்டும் பச்சைபசேலென்று புல்பூண்டுகளும், செடி கொடிகளும் வளர்ந்திருக்கின்றன.
இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அடுத்து, ரெட்டியார்பட்டி சாலையின் அருகே பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவால் தண்ணீர் பொங்கி வீணாவதைப் பார்க்க முடிகிறது. இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக 24 மணிநேரமும் தண்ணீர் பொங்கி வழிவதாகவும், இதனால் இப்பகுதி மைதானத்தில் பெருமளவு தண்ணீர் எப்போதும் தேங்கியிருக்கிறது என்றும், இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மக்களின் கவலை
தண்ணீர் வீணாவது ஒருபுறம் இருக்க, இதனால் இப்பகுதி மக்கள் சந்திக்கும் இன்னும் பல பிரச்சினைகளும் இருக்கின்றன. இது தொடர்பாக இங்கு பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களின் கருத்துகள்:
ஐயப்பன்: கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சினையால் அவதிப்படுகிறோம். தினமும் 5 ஆயிரம் லிட்டருக்குமேல் குடிநீர் வீணாவதை பார்க்க மனம்பொறுக்கவில்லை. தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு தண்ணீர் வீணாவதை குறித்து மாநகராட்சியில், கவுன்சிலர்கள் பொறுப்பில் இருக்கும்போதே புகார் தெரிவித்திருந்தோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கொசு உற்பத்தி
பவானி: இங்கு சுத்தமான தண்ணீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இப்பகுதியில் வீணாகும் தண்ணீரை பெரும்பள்ளத்தில் சேகரித்து அதை டிரம்களில் பிடித்து கட்டுமான பணிகளுக்கு கொண்டு செல்கின்றனர். மகிழ்ச்சி நகரிலுள்ள சாலைகளை உடைத்து, பள்ளங்கள் தோண்டி ராட்சத குழாய்களை பதித்தனர்.
அப்பணிகள் நடைபெறும்போது எங்களது வீடுகளில் இருந்த செப்டிங் டேங்குகள் உடைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் கிடைக்கப்போகிறதே என்று அதையும் சகித்து கொண்டோம். எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சொந்த செலவில் சரிசெய்து கொண்டோம். ஆனால் இந்த தண்ணீர் கசிவை தடுக்க முடியாமல் தவிக்கிறோம்.
துணி துவைக்க வசதி
ஆர்.இசக்கிமுத்து: ரெட்டியார்பட்டி பகுதியிலுள்ளவர்கள் சிலர் துணிமூட்டைகளுடன் வந்து இந்த தண்ணீரை பிடித்து துணிகளை துவைத்துவிட்டு செல்கிறார்கள். ஆடுகளை மேய்ப்போர் பலர் ஆடுகளை இப்பகுதிக்கு அழைத்து வந்து தண்ணீர் குடிக்க வைத்து, குள்ப்பாட்ட்சி செல்கிறார்கள்.
தேங்கியிருக்கும் தண்ணீரில் பன்றிகளும் தஞ்சம் புகுந்துவிடுவதால் சுகாதார சீர்கேட்டுக்கு பஞ்சமில்லை. பாம்புகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. பலர் தங்கள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள், லாரிகளையும் இந்த தண்ணீரில் கழுவுகிறார்கள்.
650 அடியில் நிலத்தடி நீர்
கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியாகும் இடத்திலுள்ள பள்ளத்தில் இப்பகுதியிலுள்ள 3 வயது சிறுவன் ஒருவன் சிக்கினான். அவனை இப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டனர். கடந்த சில நாட்களுக்குமுன் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் வந்த தம்பதியர் தண்ணீர் தேக்கத்தில் சிக்கி விழுந்தனர்.
பர்வதம்: இப்பிரச்சினை குறித்து திருநெல்வேலி மாநகராட்சி மேயராக விஜிலா சத்தியானந்த் இருந்தபோதே, இப்பகுதி மக்கள் திரண்டு சென்று புகார் மனு அளித்தோம். ஆனால், குழாய் உடைப்பு சரிசெய்யப்படவில்லை. ஏற்கெனவே இருந்ததைவிட அதிகளவில் தண்ணீர் வீணாகிறது.
நடவடிக்கைக்கு உறுதி
திருநெல்வேலி மாநகராட்சி பொறியாளர் நாராயணன் நாயரிடம் கேட்டபோது, இது குறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாகவும், பிரச்சினைக்குரிய இடத்துக்கு அலுவலர்களை அனுப்பி உடைப்பை சரி செய்வதாகவும் தெரிவித்தார். அவருக்குகீழ் செயல்படும் அதிகாரிகளும் ஓரிரு நாட்களில் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக `தி இந்து’ வை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT