Published : 10 Aug 2017 09:48 AM
Last Updated : 10 Aug 2017 09:48 AM
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, ஓராண்டுக்குள் ரூ.350 கோடியில் 75 தடுப்பணைகள், 10 சிறிய அணைக்கட்டுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது உபரிநீரைத் தேக்கி வைக்க ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என்று விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்து வரும் 3 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி சட்டப்பேரவையி்ல் அறிவித்திருந்தார். அதன்படி, ஓர் ஆண்டுக்குள் (2017 ஆகஸ்ட் முதல் 2018 ஜூலை வரை) ரூ.350 கோடியில் 75 தடுப்பணைகள், 10 சிறிய அணைக்கட்டுகள் கட்டப் படவுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எல்லா மாவட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு வீதம் தடுப்பணைகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு அருகே அகரம் குடியிருப்பு, வைகை அணை அருகே, வைகை ஆற்றில் மதுரைக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம், வைப்பாற்றில் வேம்பார் அருகே, பாலாற்றில் செய்யாறு அருகே தெள்ளூர், பொன்னேரி அருகே புதுக்குப்பத்திலும் தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. இவை 100 மீட்டர் முதல் 300 மீட்டர் நீளத்திலும், ஒன்றரை மீட்டர் ஆழத்திலும் இருக்கும். தடுப்பணையின் நீளத்துக்கு ஏற்ப ரூ.3 கோடி, ரூ.6 கோடி, ரூ.9 கோடி, ரூ.12 வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டத்தை மேம் படுத்துவதே தடுப்பணைகளின் முக்கிய நோக்கமாகும். தடுப்பணைகளைக் கட்டுவதால் அதைச் சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும். நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும். மேலும் 10 சிறிய அணைக்கட்டுகள் (வைகுண்டம் அணைகட்டு போல) கட்டப்படவுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே சிறிய அணைக்கட்டு கட்டப்படுகிறது. அணைக்கட்டுகள் மூலம் அருகில் உள்ள பாசன ஏரிகளுக்கு நீர் திருப்பிவிடப்படும்.
ஆறுகளுக்குள் தடுப்பணை கள், சிறிய அணைக்கட்டுகள் கட்டுவதால் நிலம் கையகப் படுத்துவது போன்ற பிரச்சினைகள் இருக்காது. எனவே, குறிப்பிட்ட காலத்தில் பணியைத் தொடங்கி முடிக்க முடியும். இவ்வாறு நீர்நிலைகள் கட்டப்படும்போது மழைக்காலத்தில் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு, கோடை காலத்தில் பயன்படுத்தப் படும்.
தடுப்பணைகளில் குறைந்த பட்சம் 50 மில்லியன் கனஅடி முதல் 300 மில்லியன் கனஅடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். கொள்ளிடம் ஆற்றில் கதவணை ஒன்று கட்டப்படுகிறது. ஒருபுறம் நாகை மாவட்டத்திலும் மறுபுறம் கடலூர் மாவட்டத்திலும் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் குமாரமங்கலம் என்ற இடத்தில் கட்டப்படும் இந்த கதவணையில் 750 மில்லியன் கனஅடி அளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.
ஆறுகளில் ஐந்து கிலோ மீட்டருக்கு தலா ஒரு தடுப்பணை கட்டி தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாயில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 400 தடுப்பணைகள் வரை கட்டப்படும் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT