Published : 11 Apr 2014 12:00 AM
Last Updated : 11 Apr 2014 12:00 AM
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம் 21 கிலோ மீட்டர் நீளத்துக்கு பறக்கும் பாதை அமைக்கும் பணியும், மற்றொருபுறம் 24 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 13 இடங்களில் பறக்கும் ரயில் நிலையங்களும், 19 இடங்களில் சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும் கட்டப்படுகின்றன.
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அதிநவீன குடியிருப்பும், கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில், கீழ்நிலை பணியாளர்களுக்கான குடியிருப் பும் கட்டப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சென்னை நந்தனத்தில் ரூ.100 கோடி செலவில் “மெட்ரோ பவன்” என்ற பெயரில் பிரம்மாண்டமான குடியிருப்பை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் நேரத்தில், அதாவது 2016-ம் ஆண்டுவாக்கில் மெட்ரோ பவன் கட்டி முடிக்கப்படும்.
கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில், மெட்ரோ ரயில் டிரைவர்கள், கட்டுப்பாட்டு மைய கண்காணிப்பாளர்கள் உள்ளிட் டோருக்கு 100 வீடுகள் கொண்ட குடியிருப்பு ரூ.30 கோடியில் கட்டப்படவுள்ளது.
சென்னை கோபாலபுரம், கான்ரான் சுமித் சாலையில் உள்ள “ஹரிணி டவர்ஸில்” செயல்படும் மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகமும், ராஜா அண்ணாமலைபுரம், சி.பி.ராமசாமி சாலையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்கான ஆலோசனை மையமும், அடுத்த மாதம் கோயம்பேடு பணிமனையில் 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் இயக்க கட்டுப்பாட்டு மையத்துக்கு மாற்றப்படுகின்றன.
இதன்மூலம் மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகம் மற்றும் ஆலோசனை மையத்தில் பணிபுரியும் சுமார் 400 அதிகாரிகள், நிபுணர்கள், பணியாளர்கள் வாடகைக் கட்டிடங் களில் இருந்து சொந்த இடத்துக்கு இடம்பெயர்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT