Published : 29 Aug 2017 12:13 PM
Last Updated : 29 Aug 2017 12:13 PM
டிடிவி.தினகரனை நேற்று முன்தினம் காலை சந்தித்து ஆதரவு தெரிவித்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ், மாலை எடப்பாடி பழனிசாமிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த நிலையில், தற்போது கட்சிக்கு சசிகலாவையும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 8 அதிமுக எம்எல்ஏ-க்களும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக உள்ளனர். இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மட்டும் மேலூரில் நடந்த டிடிவி. தினகரன் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் செல்லவில்லை. அவரையும், மேலும், 2 எம்எல்ஏ-க்களையும் உள்ளூர் அமைச்சர் ஒருவர் கடத்தியதாக மேலூர் பொதுக்கூட்ட மேடையிலேயே டிடிவி. தினகரன் குற்றம் சாட்டினார். அதற்கு ஏ.கே.போஸ், தன்னை யாரும் கடத்தவில்லை என பதில் அளித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் தேனிக்கு சென்று டிடிவி.தினகரனை நேரில் சந்தித்து, அவருக்கு ஆதரவாக பேட்டிக் கொடுத்த ஏ.கே. போஸ், அன்று மாலையே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று சென்னையில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் சார்பில் நடந்த எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏ.கே.போஸ் கலந்து கொண்டார்.
அதனால், ஏ.கே.போஸ் கடைசி வரை தங்கள் அணியில் இருப்பாரா? என்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியினரே கலக்கம் அடைந்துள்ளனர். மற்றொருபுறம் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு மீண்டும் தன்னுடைய நிலைப்பாட்டை சில மணி நேரங்களில் மாற்றியதால் ஏ.கே.போஸ் மீது டிடிவி.தினகரன் அணியினரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
உடல்நிலை சரியில்லை
இதுகுறித்து ஏ.கே.போஸிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நான் எனது நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறேன். மற்றவர்கள்தான் குழம்பி போய் உள்ளனர். தற்போதைய நிலையில் ஆட்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு. கட்சிக்கு சசிகலாவுக்கு ஆதரவு. இதில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்று முன்தினம் நான் தேனிக்குச் சென்று டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். நண்பர், துணை பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் அவரை சந்தித்து வாழ்த்தினேன்.
கட்சியில் புல்லுருவிகள்
ஆனால், அது அவருக்கு ஆதரவு தெரிவித்தாக பரவியது. அதற்கு மறுப்பு அறிக்கை விட சொன்னார்கள். அதற்காக மறுப்பு பேட்டிக் கொடுத்தேன். நான் எடப்பாடி பழனிசாமியையும், சசிகலாவையும் நேசிக்கிறேன்.
எங்கள் கட்சியிலேயே சில புல்லுருவிகள் உள்ளனர். அவர்கள் என் மீது தவறான விமர்சனங்களை பரப்புகின்றனர். என்னால் நடக்க முடியவில்லை. அறுவைச் சிகிச்சை செய்ய உள்ளேன்.
அதனால், டிடிவி. தினகரன் அறிவித்த பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. அது அவருக்கே தெரியும். அறுவை சிகிச்சை முடிந்ததும் திடகாத்திரமாகி விடுவேன். அதன்பிறகு கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT