Published : 22 Aug 2017 04:58 PM
Last Updated : 22 Aug 2017 04:58 PM
தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில் தினகரன் தரப்பினரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் ஆட்சியைக் கவிழ்ப்பார்களா? முதல்வரை மாற்றுவார்களா? என்ற கேள்வி தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
அதிமுகவில் அரசியல் குழப்பம் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓபிஎஸ்ஸை அகற்றிய பின்னர் , ஒட்டுமொத்த அதிமுக அணியினர் சந்தித்த பிரச்சினைகளை விட தற்போது ஓபிஎஸ், எடப்பாடி அணியினர் அதிகம் சந்திக்கின்றனர்.
ஓபிஎஸ், எடப்பாடி அணியினர் இணைப்பு பின்னணியில் முக்கிய நிபந்தனை சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்ட வேண்டும் என்ற கோரிக்கையே. ஆனால் அது எதிர்பார்த்த அளவு அவ்வளவு சாதாரணமாக இருக்காது என்பதை தற்போது நடக்கும் நிகழ்வுகள் அதிமுக அணியினருக்கு தெளிவாகவே காட்டுகிறது.
தினகரன் தரப்பில் 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரைப் பார்த்ததும், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்ற கோரிக்கையை வைத்ததும் ஜாக்கிரதையான நகர்வாக அரசியல் நோக்கர்கள் கவனிக்கின்றனர். மறுபுறம் ஆளுநரிடம் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் வைத்த கோரிக்கை அடிப்படை அற்றது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள் இதற்கு அவர்கள் கூறும் காரணம், முதலில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டை வைத்து அதன் பின்னர் கோரிக்கை வைக்க வேண்டும்.
முதல்வரைப் பிடிக்கவில்லை என்றால் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தானே வைக்க வேண்டும். ஆனால் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் வைப்பது ஒரு எச்சரிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது என்கின்றனர்.
தற்போது உள்ள எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல மேலும் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் வெளியே வருவார்கள் என்று தெரிவித்த தினகரன் ஆதரவாளர் ஒருவர் போகப் போக அடுத்த நகர்வைப் பாருங்கள் என தெரிவித்தார்.
தற்போது உள்ள நிலையில் ஆட்சிக்கு பங்கம் வராமல் ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவரும் வேலையில் தினகரன் தரப்பினர் இறங்கி உள்ளனர். கட்சியில் உள்ள தங்களது பிடிப்பை விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதையே மேற்கண்ட நடவடிக்கைகள் காட்டுகின்றன.
ஆனால் இதைப்பற்றிய கவலை இல்லாமல் நாளை அரியலூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தங்கள் முழு கவனத்தை ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் செலுத்தி வருகின்றனர். நாளை நடைபெறும் கூட்டத்தில் அதிக அளவில் தொண்டர்களை திரட்டி கூட்டாக தங்கள் பலத்தை காட்ட உத்தேசித்துள்ளனர்.
இந்த பிரச்சினை குறித்து அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வியை அரசியல் நோக்கர் ஒருவரிடம் வைத்த போது அவர் கூறியது , ஆளுநரிடம் இவர்கள் வைத்த கோரிக்கையிலேயே உறுதியில்லை ஆகவே சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரும் அவசியம் ஆளுநருக்கு இல்லை என்றார்.
மேலும் தமிழகத்துக்கு என்று தனி ஆளுநர் இல்லாத நிலையில் இவர் சென்னை வந்தால் தான் மற்ற விஷயங்களைப் பேச முடியும். எதிர்க்கட்சி திமுக எந்த அளவுக்கு இதில் அழுத்தம் கொடுக்கிறதோ அதை பொறுத்துதான் ஆளுநரின் செயல்பாடும் அமையும் , ஆகவே தினகரன் தரப்பினர் மிரட்டலை உட்கட்சி பிரச்சினை போன்றுதான் அவர்கள் பார்ப்பார்கள் என்றார்.
மேலும் மீண்டுமொரு தேர்தலை உடனடியாக சந்திக்க யாரும் தயாராக இல்லாத நிலையில் இது போன்ற செயல்பாடுகள் எந்தவித தாக்கத்தையும் அதிமுக ஆட்சிக்கு ஏற்படுத்தாது என்று தெரிவித்த அவர் தினகரன் தரப்பு தங்கள் முடிவை தெளிவாக எடுக்காதவரை அது எதிர் தரப்பினருக்கு சாதகமே என்று முடித்துக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT