Last Updated : 09 Aug, 2017 12:32 PM

 

Published : 09 Aug 2017 12:32 PM
Last Updated : 09 Aug 2017 12:32 PM

பாலியல் பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

பாலியல் பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

குழந்தைகள் தான் இந்த சமுதாயத்தின் எதிர்காலம் என நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று. பாலியல் சீண்டல்கள் காரணமாக, சில நேரங்களில் தற்கொலை செய்யும் நிலைக்கும் பள்ளி மாணவிகள் தள்ளப்படுகின்றனர்.

குழந்தைகளுக்கான உதவி மற்றும் புகாருக்காக சைல்டு லைன் அமைப்பிற்கு (தொலைபேசி எண் 1098) மதுரையில் மட்டும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை 532 அழைப்புகள் வந்தன.

அதில் 5 பாலியல் வன்முறை புகார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை 153 அழைப்புகள் வந்தன. அதில் 8 வழக்குகள் பாலியல் வன்முறை தொடர்பான புகார்கள்.

இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பின் இயக்குநர் ஜிம் ஜேசுதாஸ் கூறியதாவது: படிப்பை மட்டுமே முதன்மைப்படுத்துவதால் பல நேரங்களில் குழந்தைகள் தனியாகவே உள்ளனர். பெற்றோரும் அதிக நேரங்களை குழந்தைகளுடன் செலவழிக்க முடியவில்லை.

தனிமையாக இருப்பதால் இயல்பாகவே குழந்தைகளுக்கு தவறான சிந்தனைகள் உருவாகிவிடுகின்றன. பெற்றோர் காலை, மாலை நேரங்களை தங்கள் குழந்தைகளோடு செலவழிக்க வேண்டும்.

வீடு, பள்ளி மற்றும் வெளியிடங்களில் குழந்தைகளுக்கு உடல், உணர்வு ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூக அக்கறை கொண்டோருக்கு குழந்தைகளை நல்ல தலைமுறையாக உருவாக்க வேண்டிய கடமை உண்டு. விஜிலென்ஸ் அமைப்பை ஏற்படுத்தி பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை சுற்றி காவல்துறையினர் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும்.

இன்று இணையம் என்பது மலிவான விஷயமாகிவிட்டது. அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. ஆபாச படங்களை எளிதில் காணும் வாய்ப்புகள் உள்ளன. அவையும் குழந்தைகள் தவறான வழிக்குச் செல்லவும், பாலியல் சீண்டலுக்கு ஆளாவதற்கும் ஓர் காரணம். எனவே, இணையத்தை கையாளும் முறை குறித்து பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும்.

பின்னர் குழந்தைகளுக்கும் அவற்றை எடுத்துக்கூற வேண்டும். பதின் பருவத்தில் பாலியல் குறித்து அறிந்து கொள்ள மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். ஆனால் பள்ளிகளில் பாலியல் கல்வி இல்லை. குட் டச் (சரியான தொடுதல்), பேட் டச் (தவறான தொடுதல்) குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். பாலியல் கல்வியின் மூலம் அறிவியல் பூர்வமான தகவல்களை குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியும்.

பள்ளிகளில் நன்னெறி கதைகள் கற்றுத்தரப்பட்ட நிலை மாறி இன்று பாடத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கும் நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். நாளொன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும்.

ஓடியாடி விளையாடுவதால் வேறு சிந்தனைகள் ஏற்படாது. குழுவாக இணைந்து விளையாடும் போது குழந்தைகளுக்கு நல்ல சிந்தனை உருவாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x