Published : 26 Aug 2017 05:31 PM
Last Updated : 26 Aug 2017 05:31 PM

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: சாத்தியமா? சங்கடமா?

விபத்துக்களை தடுக்க வரும் செப்டம்பர் 1 முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சாத்தியமாகுமா? என்பது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினோம்.

அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துப் பேசியதாவது:

சாலை விபத்துகள் அதிகரித்து வருவதும், வாகன திருட்டுகள், குற்றச்செயலில் ஈடுபடுவோர் திருட்டு வாகனங்களை பயன்படுத்துவது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது போன்ற நடைமுறை சிக்கல்களை களைய இனி வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் செப்.1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இது பொதுமக்களிடையே அச்சத்தையும், சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. பொதுவாக ஒரு சட்டம் அமல் படுத்தும்போது அதற்கு எதிர்ப்பு வருவது இயற்கையே ஆனால் பொதுமக்கள் அச்சத்தையும் சந்தேகத்தையும் போக்குவது அரசுக்கு உள்ள கடமை என்ற அடிப்படை உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சிலரிடம் கருத்துகள் கேட்டோம்.

ஐடி ஊழியர் அருள்: இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று, ஏற்கெனவே போக்குவரத்து போலீஸார் சாலைகளில் மடக்கி மோட்டார் சைக்கிள் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு அலைய விடுகின்றனர். அசல் ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த உத்தரவு மேலும் வாகன ஓட்டிகளுக்கு தொல்லையாகத்தான் அமையும்.

கல்லூரி மாணவர் மணி: இரவில் சினிமாவுக்கு சென்றுவிட்டு வந்தால் எல்லா ஆவணங்களும் இருந்தாலும் மடக்கி அதைக் கொடு இதைக்கொடு என்பவர்களுக்கு அசல் ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு மூலம் லைசென்ஸை பிடுங்கி வைத்துக் கொண்டு அலைய வைக்கும் நிலைதான் ஏற்படும்.

வாடகை வாகன ஓட்டுநர் நட்ராஜ்: எந்த ஒரு சட்டம் போட்டாலும் அதை நடைமுறைப்படுத்துபவர்கள் அதிகாரிகள்தான். பொதுமக்கள் அரசின் அறிவிப்பை ஏற்று ஒழுங்காக நடக்கும் போது அதிகாரிகள் அவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது. ஆனால் நடைமுறையில் நடப்பது அனைத்து ஆவணங்களைக் காட்டிய பின்னரும் எதாவது ஒரு காரணத்தை சொல்லி வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தால் எப்படி கடைபிடிக்க முடியும்?

ஆட்டோ ஓட்டுநர் ஜெரோம்: லைசென்ஸ் கொடுத்தால்தான் ஆட்டோவை உரிமையாளர் ஆட்டோவை வாடகைக்கு கொடுப்பார். அப்படி இருக்கும் போது ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருக்கணும் என்றால் யார் ஆட்டோ தருவார், நான் எப்படி பிழைக்க முடியும்?

காவல்துறை தரப்பில் இது குறித்து விசாரித்த போது அவர்கள் கூறியது சமீபத்தில் அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு, செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்றவை நடக்கிறது. இவைகளை தடுக்க இது போன்ற அறிவிப்புகள் வரும்போது லைசென்ஸ் இல்லாதவர்கள் வாகனத்தை இயக்குவது குறைந்துவிடும் என்கின்றனர்.

தற்போதுள்ள நவீன டெக்னாலஜி வரவுகளில் ஒருவரின் லைசென்ஸை போட்டோஷாப் மூலம் வேறு ஒருவர் போட்டோ பெயர் போட்டு மாற்றி ஜெராக்ஸ் போன்று வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் போலி ஆட்கள் வாகனங்களை இயக்குகிறார்கள். இவையெல்லாம் இதன் மூலம் தடுக்க முடியும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்க மாநில நிர்வாகி அ.சவுந்தரராஜன்: இதை நாங்கள் எதிர்க்கிறோம், இது போன்ற அறிவிப்புகள் மக்கள் மீது, தொழில் புரிவோர் மீது மேலும் சுமையைத்தான் ஏற்றும். ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? தவறு செய்தால் அவருக்கு போலீஸ் நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதிக்கப்போகிறார்கள், லைசென்ஸ் வேண்டுமென்றால் நாளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒரிஜினல் லைசென்ஸை கொண்டு வந்து காட்டுங்கள் என்றால் மறுக்கவா போகிறார்கள். விபத்து ஏற்படுத்தியவர்களே மறுநாள் தான் லைசென்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள்.

ஒரிஜினல் லைசென்ஸை கையில் வைத்திருக்கும் போது அது தொலைந்து போனால் மீண்டும் லைசென்ஸ் எடுக்கும் வரை அது பிரச்சினை. ஆட்டோ, லாரி, வேன் போன்ற வாடகை வாகனங்களை ஓட்டுபவர்கள் லைசென்ஸை தொலைத்துவிட்டால் அவர்களுக்கு அது பிழைப்புக்கே பிரச்சனையாக மாறும் ஆகவே இது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்தார்.

மணல் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில நிர்வாகி யுவராஜ்: ஓவர் லோடு அதன் மூலம் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க ஓவர் லோடு ஏற்றினால் லைசென்ஸ் பறிமுதல் என்று அறிவித்தார்கள், அதை நாங்கள் வரவேற்றோம். ஆனால் நடைமுறையில் அதிகாரிகள் அதை ஒழுங்காக அமல் படுத்தாமல் வேறு நோக்கத்துடன் செயல்படுவதால் இன்றும் ஓவர்லோடு பிரச்சினை தீரவில்லை.

ஒரிஜினல் லைசென்ஸ் விஷயத்திலும் அதுதான் நடக்கும். இதனால் எந்த பயனும் இல்லை. லாரி உரிமையாளர்கள் டிரைவரிடம் லாரியை ஒப்படைப்பதே லைசென்ஸ் தங்கள் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான். லைசென்ஸை அவர்கள் கையில் வைத்திருக்கவேண்டும் என்றால் விபத்து எதாவது நடந்தால் ஓட்டுநர்கள் தலைமறைவாகிவிடுவார்கள் நாங்கள் எங்கே அவர்களை தேடி கண்டுபிடிப்பது.

ஹெவி லைசென்ஸ் கையில் வைத்திருக்கும் போது தொலைந்தால் மீண்டும் எடுக்க அதிக செலவாகும். மேலும் போலீஸார் லைசென்ஸை பிடுங்கி வைத்துக்கொண்டு அலைக்கழிக்கும் சம்பபவங்களும் நடக்கும் இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளை சந்திக்க உள்ளோம் என்றார்.

இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறோம். லைசென்ஸ் ஒரிஜினல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை.

லைசென்ஸ் ஒரிஜினல் தொலைந்து போனால் அது இன்னொரு பிரச்சினையை கொண்டு வரும் என்று லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவிக்கிறார்களே?

அதையெல்லாம் எளிதாக்குகிறோம், முதலில் உள்ளது போல் இருக்காது இதற்காக இரண்டு மூன்று கூட்டங்கள் நடத்தப் போகிறோம். அனைத்தையும் ஆன்லைன் முறையாக்க போகிறோம். இனி எஃப்.ஐ.ஆர் முறை இருக்காது. கூட்டம் முடிந்தவுடன் அது பற்றி சொல்வோம்.

டிஜிலாக்கர் என்ற ஒரு முறை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதே அதில் ஒரிஜினல் ஆவணங்களை இணைக்கும் முறை மூலம் இதை தவிர்க்கலாமே?

லைசென்ஸ்  ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாறப் போகிறது அது வந்துவிட்டால் இவையெல்லாம் எளிதான நடைமுறையாகிவிடும். அது பற்றிய ஆலோசனை நடக்கிறது. அது முடிந்தவுடன் அறிவிக்க உள்ளோம்.

டிஜிலாக்கர் முறை எளிதானது, அதை ஊக்கப்படுத்தும் திட்டம் கொண்டு வரலாமே?

தமிழ்நாட்டின் பயன்பாட்டாளர்கள் தான் அதிகம் உள்ளனர். தமிழகத்தில் ஸ்மார்ட் போன் வசதி அனைவருக்கும் இருக்கிறதா என்பது ஒரு நடைமுறை சிக்கல் , ஆனாலும் டிஜிலாக்கர் முறையைப்பற்றியும் பரிசீலிக்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

எந்த வளர்ச்சியும் எளிதாக பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் அமைய வேண்டும். தமிழக அரசு டிஜிலாக்கர் முறைக்கு மாறினால் தான் மக்களும் மாறுவார்கள் என்பது தகவல் தொழில் நுட்பத்தை அறிந்தவர்கள் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x