Published : 26 Aug 2017 09:42 AM
Last Updated : 26 Aug 2017 09:42 AM

தொடர்ந்து 10 ஆண்டுகளாக விநாயகர் சிலை கண்காட்சி நடத்தும் பொறியாளர்

நாடு முழுவதும் சேகரித்த 9,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, ஆண்டுதோறும் இலவசக் கண்காட்சி நடத்தி வருகிறார் குரோம்பேட்டையைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் சீனிவாசன்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன், ஒரு பொறியியல் பட்டதாரி. கடந்த 2002-ம் ஆண்டு பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தனது வலது கை விரல்களை இழந்தார். இதனால், தனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று எண்ணிய அவருக்கு விநாயகர் மீது பக்தி ஏற்பட்டது.

அந்த பக்தியினால், சீனிவாசனின் வாழ்க்கையே மாறிவிட்டது. அன்று முதல் இன்று வரை, விநாயகர் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரிக்கத் தொடங்கினார். நாடு முழுவதும் சேகரித்த விநாயகர் சிலைகளை வைத்து, சுமார் 10 ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது, இலவசக் கண்காட்சியை 10 நாட்களுக்கு நடத்தி வருகிறார்.

விதவிதமான விநாயகர்

இந்தக் கண்காட்சியில் கிருஷ்ண விநாயகர், கயிலை விநாயகர், ரயில் ஓட்டும் விநாயகர், விளையாட்டு விநாயகர், யோகாசனங்கள் செய்யும் விநாயகர் என்பது உட்பட பல்வேறு விதமான சிலைகளை வைத்துள்ளார்.

கண்காட்சி குறித்து சீனிவாசன், ‘தி இந்து’விடம் கூறியதாவது: நான் விபத்தில் சிக்கிய பிறகு, அந்த இக்கட்டான தருணத்தில் எனக்கு துணையாகவும் ஆறுதலாகவும் இருந்தவர், விநாயகர் மட்டுமே. பிறகு விநாயகர் பெயரில் தொழில் தொடங்கினேன். நல்ல வளர்ச்சி அடைந்தேன்.

இதைத்தொடர்ந்து, விநாயகர் பெயரில் பல்வேறு உதவிகளை என்னால் முடிந்தவரை செய்தேன். அதன்பின், என்னுடைய பயணங்களில், விதவிதமான விநாயகர் சிலைகள் வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

விநாயகர் சதுர்த்தியன்று 108 விநாயகருக்கும் மேல் நாம் கண்டு தரிசனம் செய்தால், பல கோடி புண்ணியம் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அதுபோல், நான் பெற்ற புது வாழ்வைப் பிறரும் பெறவேண்டும் என்று எண்ணி கடந்த 2006-ம் ஆண்டு முதல் நான் வாங்கி வந்த விநாயகர் சிலைகளைக் கொண்டு, விநாயகர் சதுர்த்தியன்று சிறிய அளவிலான கண்காட்சியை அமைத்தேன். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்புதான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்தக் கண்காட்சியை நடத்தும் உற்சாகத்தைக் கொடுத்தது. கண்காட்சியில் களி மண் சிலைகள், தங்கம், வெள்ளிஉட்பட பல்வேறு வகைகளிலும் சிலைகள் இடம்பெறும்.

மேலும் தற்போது இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 3-ம் தேதி வரை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஸ்ரீ பத்மராம் கணேஷ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x