Published : 11 Aug 2017 09:41 AM
Last Updated : 11 Aug 2017 09:41 AM

நலம்.. நலமறிய நைஜில்..! விலங்குகள் நேசிக்கும் விநோத மனிதர்

வீ

ட்டில், யாருக்காவது உடம்பு சரியில்லை என்றாலே மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல அலுத்துக் கொள்கிறோம். ஆனால், எங்கோ சாலையோரத்தில் அடிபட்டுக்கிடக்கும் விலங்குகளை எல்லாம் மீட்டுச் சிகிச்சையளிப்பதுடன் அவைகளை தன்னுடன் வைத்துப் பராமரித்தும் வருகிறார் நைஜில் ஓட்டர். நீலகிரி மாவட்டத்தில் எங்காவது மிருகவதை நடப்பதாக தனக்குத் தகவல் வந்தால், மேனகா காந்தியே முதலில் இவரைத்தான் தேடுகிறார்!

இருபது வருடங்களாக..

நீலகிரி மாவட்டம் மாவனல்லா கிராமத்தில் இருக்கிறது நைஜில் ஓட்டரின் திறந்தவெளி விலங்குகள் காப்பகம். எட்டு ஏக்கரில் விரியும் இந்தக் காப்பகத்தில், உடல் நலிந்த, விபத்துக்களில் அடிபட்ட 105 கழுதைகள், 35 குதிரைகள், 30 தெரு நாய்கள், 20 மாடுகள், 9 வெள்ளாடுகள், 6 செம்மறி ஆடுகள் - இத்தனையும் இப்போது அடைக்கலமாகி உள்ளன. இவைகளை தன்னோடு தங்கவைத்து சிகிச்சையும் உணவும் அளித்து வருகிறார் நைஜில். இன்றைக்கு நேற்றல்ல.. கடந்த இருபது வருடங்களாக, இப்படி விலங்குகளைப் பராமரிப்பதையும் குணமானதும் காட்டில் கொண்டுபோய் விடுவதையும் சேவையாகச் செய்துகொண்டிருக்கிறார் இவர்.

இவர் ஜாகைக்குள் நுழைவதைக் கண்டதும் காப்பகத்தில் உள்ள குதிரைகள் கனைத்துப் பேசுகின்றன. கழுதைகள் கத்தி வரவேற்கின்றன். இவரிடம் ஓடி வந்து நாக்கால் வருடி நல்வரவு சொல்கின்றன நாய்கள். அத்தனைக்கும் முத்தம் கொடுத்து அவைகளின் அன்பான வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார் நைஜில்.

விலங்குகளின் நேசரானார்

“கைகால் உடைந்து காயம்பட்ட அஞ்சு குரங்குகளை கொண்டுவந்து, வனத்துறையினர் என்கிட்டத்தான் சிகிச்சைக்கு விட்டாங்க. ஆறுமாசம் இங்க வெச்சு சிகிச்சை செஞ்சு குணப்படுத்தி, காட்டுல கோண்டுபோய் விட்டேன். அதுக இப்ப இருந்துருந்தா தலை, தோள், முதுகுன்னு ஏறி உட்காந்துட்டு ஆட்டம் காண்பிச்சிருக்கும்” என்று சொல்லிச் சிரிக்கிறார் நைஜில்.

58 வயதான நைஜில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் புளிஞ்சூரைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே நீலகிரிக்கு இடம் பெயர்ந்த இவருக்கு அப்போதிருந்தே விலங்குகள் மீது கொள்ளைப் பிரியம். பள்ளிக்குச் செல்லும் வழியிலிருந்த கால்நடை மருத்துவரின் வைத்திய சாலையில் போய் அடிக்கடி உட்கார்ந்து கொள்வார். அங்கே சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் விலங்குகளைப் பார்த்தும், அவை களின் நிலைகண்டு பரிதாபப்பட்டுமே இவர் விலங்குகளின் நேசர் ஆகிப்போனார்.

ரொம்பப் பதறிடுவேன்

இப்போதைய தனது சேவைகுறித்து அவரே விவரித்தார். “முனிசிப்பாலிட்டிக்காரங்க நாய் புடிக்கிறதை பார்த்தா நான் ரொம்பப் பதறிடுவேன். சின்ன வயசுல, பூனைய கொல்றது, நாயை அடிக்கிறதுன்னு இருக்கிறவங்க, பிற்காலத்துல சமூக விரோதியாவோ திருடனவோ போயிருவாங்கன்னு படிச்சிருக்கேன். இதையெல்லாம் எடுத்துச் சொல்லி என்னோட நண்பர்களுக்கு நான் கிளாஸ் எடுப்பேன். எந்த மிருகமா இருந்தாலும் துன்புறுத்தாதீங்க. என்கிட்ட கொண்டு வந்து விடுங்கன்னு சொல்வேன். ஊருக்குள்ள எந்த மிருகம் அடிபட்டு அவஸ்தைப்பட்டாலும் அதை நாங்க இங்க தூக்கிட்டு வந்துருவோம். ஃபாரஸ்ட்டுக்காரங்களும் வனமிருகங்கள இங்கேதான் தூக்கிட்டு வருவாங்க. அப்படி வந்ததுதான் இதுவெல்லாம்!” என்கிறார் நைஜில்.

தொடக்கத்தில், விலங்குகள் மீது நைஜில் காட்டும் பரிவைத் தொடர்ந்து கவனித்துவந்த வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர், நெகிழ்ந்துபோய், தமது நாட்டில் நடத்திவந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் பொருளாதார உதவிகளைச் செய்தார். அந்த உதவி தந்த ஊக்கமே, 1997-ல், ‘இபான்’ (IPAN- India Project for Animals and Nature) என்ற அறக்கட்டளையை உருவாக்கியது. இதன் நிர்வாக அறங்காவலர் நைஜில். பாதிக்கப்பட்ட விலங்குகளை பராமரிக்க மட்டுமே, மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்கிறது ’இபான்’. தற்போது, இந்தியா முழுவதும் தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதில் கவனம் செலுத்திவரும் நைஜில், இதுவரை 40 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்திருப்பதாகச் சொல்லி வியப்பூட்டுகிறார்.

மேனகா காந்தியின் நண்பர்

மத்திய அமைச்சர் மேனகா காந்தியுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பில் இருக்கிறார் நைஜில். நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எங்காவது மிருகங்கள் அடிபட்டுக் கிடப்பதாக தனக்கு ‘வாட்ஸ் அப்’ தகவல் வந்தால் உடனே நைஜிலை அழைத்து அந்த விலங்கை மீட்டுவரச் சொல்வாராம் மேனகா.

“அப்படித்தான் ஒருமுறை, ஊட்டியில் யாரோ ஒரு டூரிஸ்ட், 2 குதிரைகளுக்கு கால் நகங்கள் பெரிதாக வளர்ந்து நடக்க முடியாமல் கஷ்டப்படுவதைப் படம் பிடித்து மேனகா காந்திக்கு ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பிட்டார். மேனகா உடனே அந்தக் தகவலை எனக்கு அனுப்பீட்டாங்க. குதிரைகளுக்கு நகங்களை வெட்டி அவைகளை நடக்க வைக்கிற வரைக்கும் அவங்க என்னை விடவில்லை. 15 வருஷத்துக்கு முந்தி, இங்கவந்த மேனகா காந்தி, மிருகங்களை நாங்க பராமரிக்கிற விதங்களைப் பார்த்துட்டு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை குடுத்துட்டுப் போனாங்க.” என்கிறார் நைஜில்.

நைஜிலின் இந்த மையத்தை பார்வையிட பின்லாந்தின் கால்நடை மருத்துவ பெண்மணி ஒருவர் வந்தார். மையத்திலேயே தங்கியிருந்து விலங்குகளுக்குச் சிகிச்சையளித்த அவர், பிற்பாடு நைஜிலையே காதலித்துக் கரம்பிடித்து இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x