Published : 29 Aug 2017 08:52 AM
Last Updated : 29 Aug 2017 08:52 AM
அதிமுக பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்ததன் மூலம், தென்மாவட்டங்களில் வலுவாக காலூன்றும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.
தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 2014 தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தனது பலத்தை நிரூபித்திருக்கும் பாஜகவுக்கு அடுத்து வரவுள்ள மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட செல்வாக்குள்ள நபர்கள் தேவைப்படுகிறார்கள்.
இதற்காக கட்சி அளவிலும், சமுதாய அளவிலும் பிரபலமானவர்களை பாஜகவுக்குள் இழுக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாகவே மேற்கொள்ளப்பட்டு, அதில் படிப்படியாக வெற்றி கிடைத்து வருகிறது.
தென்மாவட்டங்களில் அதிகளவில் உள்ள நாடார் சமுதாய மக்கள் ஆதரவை பெறும்நோக்கில் தேமுதிகவில் அதிருப்தியில் இருந்த கணேஷ்குமார் ஆதித்தனை பாஜக பக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் வரவழைத்தனர்.
இதுபோல், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பெறும்நோக்கிலும், அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை பாஜக வசம் கொண்டுவந்துள்ளனர். அவருக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கி, தென்மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தவும், தமிழக அளவில் அவரது ஆதரவாளர்களை இழுக்கவும் அடுத்தடுத்த நாட்களில் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
அதிமுக கட்சிக்குள் நடைபெறும் குழப்பங்களை பாஜக தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதன் வெளிப்பாடுதான், நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது என்பது அரசியல் நோக்கர்கள் கருத்து.
இது தொடர்பாக அதிமுக தரப்பிலும் எந்த எதிர்வினையும் இல்லை. அவருக்குப் பின்னால் எந்த அதிமுக தொண்டரும் பாஜக பக்கம் செல்லமாட்டார்கள் என்று திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் உறுதிபட தெரிவித்தார்.
ஆனால்,அதிமுகவில் நிலவும் உச்ச கட்ட குழப்பங்கள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தபின் அதிமுக பிரமுகர்கள் பலரும் பாஜக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதற்கான வேலைகளில் பாஜகவும் இறங்கியிருப்பதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
சமுதாய தலைவர்கள்
தென்மாவட்டத்தில் சமுதாய ரீதியில் கட்சிகளை நடத்தும் தலைவர்களுக்கும், அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏற்கெனவே பாஜக டெல்லி தலைமையிடத்தில் இருந்து தூண்டில்கள் வீசப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில் திருநெல்வேலியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய கட்சி நிறுவனர் தலைவர் ஒருவர் விரைவில் பாஜகவில் ஐக்கியமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல் தென்மாவட்ட அளவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பலமுள்ள கட்சியின் தலைவர் ஒருவருடனும் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அமித்ஷா வரும் முன்
பாஜக தலைவர் அமித்ஷா தமிழக வருகைக்கு முன்னதாக பல முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள் அக் கட்சியில் இணைய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. இதன்மூலம் தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் காலூன்றுவது, அதன் தொடர்ச்சியாக தமிழக அளவில் கட்சியை பலமாக்குவது என்ற உத்தியில் பாஜக காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறும்போது, ‘தமிழகத்தில் பாஜக அரசு அமைய வேண்டும். அதற்கு அக்கட்சி தொண்டர்களைப்போல் நானும் உழைப்பேன். அதிமுக தளர்ந்திருக்கிறதோ இல்லையோ, பாஜக வளர்ந்திருக்கிறது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT