Published : 04 Aug 2017 09:36 AM
Last Updated : 04 Aug 2017 09:36 AM
டெல்லியில் இருந்து கும்பலாக வரும் கொள்ளையர்கள் சென்னையில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபடு கிறார்கள். கணிசமாக நகைகள் திருடியதும் விமானம் அல்லது விரைவு ரயில்களில் ஏறி டெல்லிக்கு தப்பிவிடுகின்றனர். மீண்டும் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர் என்ற பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த கும்பலைப் பிடிக்க தனிப்படை டெல்லிக்கு விரைந்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இவர்கள் ஊடுருவியுள்ளனரா என்றும் தீவிர தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
தமிழகத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதுவும் பைக்கில் சென்று செயின் பறிப்பதுதான் அதிக அளவில் நடக்கின்றன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இத்தகைய செயின் பறிப்பு காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.
தமிழகம் முழுவதும் கடந்த 2014 முதல் 2016 வரையிலான 3 ஆண்டுகளில் 5,412 வழிப்பறி, 14,932 களவு, 35,293 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வராக கே.பழனிசாமி பதவியேற்ற பின்னரும் செயின் பறிப்புகள் கட்டுக்குள் வரவில்லை. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியான டி.கே.ராஜேந்திரன் கடும் நடவடிக்கை எடுத்தும்கூட, செயின் பறிப்புகள் முற்றிலுமாக கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டிப்டாப் உடையணிந்த இளைஞர்கள் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் வயதான பெண்களின் கவனத்தை திசைதிருப்பி நகையை பறித்துச் சென்றனர்.
அவர்கள் பல மொழிகள் தெரிந்த ஈரான் கொள்ளையர்கள். தென் மாநிலங்கள் முழுவதும் கைவரிசை காட்டி வருகின்றனர். புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களைத் தொடர்ந்து தேடி வருகிறோம் என்று போலீஸார் கூறினர். இதேபோல, தனியாக நடந்துசெல்லும் நடுத்தர வயது பெண்களிடம் வடமாநில மற்றும் தமிழக கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.
சென்னையில் இச்சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து செயின் பறிப்பு திருடர்கள் பட்டியல்
சேகரிக்கப்பட்டது. இதில் 2012-ல் 450 செயின் பறிப்பு திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர். 2013-ல் 300 பேர், 2014-ல் 300 பேர், 2015-ல் 400 பேர், 2016-ல் 375 பேர் செயின் பறிப்பு குற்றவாளிகள் பட்டியலில் இருந்தனர். இதுபோக, வெளியூரைச் சேர்ந்த 150 முதல் 200 பேர் வரை சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் செயின் பறிப்பு திருடர்களை வேட்டையாட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 2 இணை ஆணையர்கள் மேற்பார்வையில் 12 துணை ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது.
கடந்த 1-ம் தேதி இரவு பெரியமேடு பகுதியில் பைக்கில் சென்ற 2 இளைஞர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். இதில், அவர்கள் வடமேற்கு டெல்லியின் கிராவி சுலைமான் நகரை சேர்ந்த சந்தீப் (30), புதுடெல்லி ஹர்சி விகாப் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற விஜய் (40) என்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது கூட்டாளிகள் 2 பேர் டெல்லிக்கு தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் களைக் கைது செய்ய தனிப்படையினர் டெல்லி விரைந்துள்ளனர். இந்த டெல்லி கும்பல் தமிழகத்தில் நகை பறிப்பில் ஈடுபட்டு, விமானம், ரயில் மூலமாக இதுவரை 300 பவுனுக்கும் மேல் டெல்லிக்கு அனுப்பிவைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களது கூட்டாளிகள் மேலும் சிலர் இன்னமும் தமிழகத்தில் இருப்ப தும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து துணை ஆணையர்கள் மேலும் கூறியதாவது:
பிடிபட்ட 2 பேரும் கடந்த ஜூலை 19-ம் தேதி டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளனர். சவுகார்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் பழைய பைக் ஒன்றை வாங்கி, அதில் சென்றுதான் செயின்களைப் பறித்துள்ளனர். ஓரளவு நகைகள் தேறியதும், விமானம் அல்லது ரயிலில் டெல்லிக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்து நகை பறிப்பில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இவர்கள் ஓரிருவர் மட்டுமே அல்ல; 10 பேர் வரை கொண்ட பெரிய குழுவாகச் செயல்படக்கூடியவர்கள். அதில் 2 பேர் சிக்கி யுள்ளனர். 2 பேர் டெல்லியில் உள்ளனர். மற்ற கூட்டாளிகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கைவரிசை காட்ட ஊடுருவியுள்ளனரா என தீவிரமாக விசாரித்து வருகிறோம். பிடிபட்ட வர்களிடம் இருந்து ரயில், விமான டிக்கெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை எத்தனை பேரிடம், எவ்வளவு நகைகள் பறித்துள்ளனர் என்று விசாரணை நடக்கிறது. அவர்களுக்கு இந்தி மட்டுமே தெரிகிறது. எனவே, இந்தி தெரிந்த அதிகாரிகளை வைத்து தகவல்களை சேகரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செயின் பறிப்பது யார் யார்?
சென்னையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 190 செயின் பறிப்புகள், 160 செல்போன் பறிப்புகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோக 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. செல்போன் பறிப்பில் 17 28 வயது இளைஞர்களும், செயின் பறிப்பில் 19 32 வயது இளைஞர்களே அதிகம் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து இணை ஆணையர் ஒருவர் மேலும் கூறியதாவது:
ரவுடிகள், தொடர் குற்ற செயல்கள் செய்பவர்கள் மட்டுமின்றி, படித்த இளைஞர்கள் சிலரும் செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர். குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு செயின் பறிப்பில் இறங்குகின்றனர். சிக்கவில்லை என்ற தைரியம் வந்ததும் அதையே வழக்கமாகக் கொள்கின்றனர். அதில் கிடைக்கும் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். சிக்கினால் தங்களது எதிர்காலம் வீணாகிவிடுமே என்பதை அவர்கள் உணர்வதில்லை.
எங்கும் வேலை கிடைக்காது!
குற்ற வழக்குகள் இருந்தால், அவர்களது படிப்பு எதற்கும் பயன்படாது. மத்திய, மாநில அரசு வேலைக்குச் செல்ல முடியாது. தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால்கூட, தங்கள் மீது குற்ற வழக்குகள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இதையெல்லாம் உணர்ந்து, இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
காதலி கேட்ட அதிக விலையுள்ள பரிசுப் பொருட்கள், ஸ்மார்ட்போன் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதற்காக செயின் பறித்தவர்களும் உண்டு. இந்த வகையில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள், வடமாநிலத்தவர்
15, 16, 17 வயது சிறுவர்கள் சிலரும் இவ்வாறு செய்கின்றனர். இவர்கள் பயந்துகொண்டு நேரடியாக செயின் பறிப்பில் ஈடுபடுவதில்லை. ஆனால், செயின் பறிக்கும் இளைஞர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர். பணம் கிடைத்ததும் ஜாலியாக செலவு செய்கின்றனர். பிடிபடும் சிறுவர்களை எச்சரித்து அனுப்புவோம். தொடர்ந்து இச்செயல்களில் ஈடுபட்டால், கைது செய்ய நேரிடுகிறது.
பிழைப்புக்காக சென்னைக்கு வரும் வடமாநில இளைஞர்கள் சிலரும் உழைக்க மனமின்றி செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர். பறித்த நகைகளை விற்றோ, அடமானம் வைத்தோ சொந்த மாநிலத்துக்குச் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களை அடையாளம் காண்பது சற்று சிரமம்.
துணையின்றி செல்லாதீர்கள்
காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள், மாலை, இரவில் தனியாகச் செல்லும் மூதாட்டிகள், பெண்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் செயின் பறிப்புக்கு இலக்காகின்றனர். கணவன், தந்தை, நண்பர்கள் என ஆண் துணையுடன் செல்லும் பெண்களை திருடர்கள் நெருங்குவதில்லை.
எப்படி நகையை பறிக்கின்றனர்?
பைக்கில் வரும் செயின் திருடர்கள் உடனடியாக செயினை பறித்துவிடுவது இல்லை. யாரிடம் பறிப்பது என தீர்மானித்த பிறகு, நன்கு நோட்டமிடுகின்றனர். அவர் செல்லும் இடத்தை ஊகிக்கின்றனர். செயின் வெளியே தெரிகிறதா? எளிதாகப் பறிக்க இயலுமா? சம்பந்தப்பட்டவர் எந்த வகை காலணி அணிந்திருக்கிறார்? அவர் எந்த இடத்தில் செல்லும்போது நகையைப் பறிக்கலாம்? என்பதை எல்லாம் கண்காணித்த பிறகே செயினை பறிக்கின்றனர். புடவைத் தலைப்பு, துப்பட்டாவால் செயினை மறைத்துச் செல்பவர்களிடம் செயினை பறிப்பது இல்லை. டவரை வைத்து போலீஸார் பிடித்துவிடக்கூடும் என்பதால், செயின் பறிக்கச் செல்லும்போது அவர்கள் செல்போன் பயன்படுத்துவது இல்லை.
துப்பு கிடைப்பது எப்படி?
திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம்தான் போலீஸாரின் முதல் இலக்கு. அதன் பதிவெண் குறித்து முதலில் விசாரிக்கின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள், சம்பந்தப்பட்ட இடத்தின் செல்போன் டவர் இணைப்பில் பதிவான அழைப்புகள், நேரில் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர் கூறும் அங்க அடையாளங்கள், குற்றவாளிகளின் பழைய பட்டியல் உள்ளிட்ட அனைத்தையும் ஒருசேர விசாரிப்பார்கள். இவற்றில் ஏதாவது ஒரு துப்பு கட்டாயம் சிக்கும். தொடர் விசாரணையில் குற்றவாளிகளும் சிக்குவார்கள் என்கின்றனர் சைபர் கிரைம் போலீஸார்.
விழிப்போடு இருங்கள்
அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் ஓய்வுபெற்ற மனநல மருத்துவர் டாக்டர் சந்திரலேகா கூறியதாவது: அதிகம் நகைகள் அணிந்து செல்லக்கூடாது, செல்போனில் பேசிக்கொண்டே நடந்துசெல்லக் கூடாது என்று தெரிந்தும், மீறுகிறோம். இதுதான் செயின் பறிப்பவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. மக்களுக்கு இந்த விழிப்புணர்வு வேண்டும். குறுக்குவழியில் சென்றால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம், இளைஞர்களுக்கு வரக்கூடாது என்றார்.
இணைந்து செயல்பட்டால் பிடிப்பது எளிது
ஆர். ஷபிமுன்னா
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்ட எஸ்எஸ்பியான தமிழகத்தை சேர்ந்த முனிராஜ் ஐபிஎஸ், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
டெல்லி மட்டுமல்லாது, உ.பி.யில் இருந்தும் சில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டுவிட்டு, தப்பிவிடுவது வழக்கம். டெல்லியில் பிறந்து வளர்ந்த தென் மாநிலத்தை சேர்ந்த 20 பேர் கொண்ட ஒரு கும்பலும் டெல்லியில் செயல்படுகிறது. தென் மாநில மொழிகளையும் அறிந்து வைத்துள்ள இவர்கள் அந்த மாநிலங்களின் தலைநகரங்களில் அதிகம் கைவரிசை காட்டுகின்றனர். இவர்கள் அங்கு திருடிவிட்டு விமானம் அல்லது விரைவு ரயில்களில் ஏறி மீண்டும் டெல்லிக்கு வந்துவிடுவார்கள்.
திருட்டின்போது தாங்கள் சம்பவ இடத்தில் இல்லை என்று காட்டிக்கொள்வதற்காக, செல்போன்களை டெல்லியில் வைத்துவிட்டுச் செல்வார்கள். இதுபோல, கர்நாடகாவில் திருடிய 2 பேர் கடந்த வாரம் புலந்த்ஷஹரில் சிக்கினர். கவனத்தை திசைதிருப்பிக் கொள்ளையடிக்கும் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்களையும் இங்கு சமீபத்தில் கைது செய்தோம்.
உ.பி. கொள்ளையர்கள் ஓடும் ரயில்களில் திருடுவதில் அனுபவம் மிக்கவர்கள். தென் மாநில ரயில்களில் கொள்ளையடித்துவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்பிவிடுகின்றனர். மினி கேஸ்கட்டர் இயந்திரம் மூலம் இரும்புக் கதவுகளை வெட்டி வங்கியின் லாக்கரில் திருடுவதில் உ.பி. மேற்குப்பகுதி கொள்ளையர்கள் கில்லாடிகள். வட மாநில காவல் துறையுடன் ஒருங்கிணைந்து தமிழக போலீஸார் செயல்பட்டால் இவர்களை எளிதாக பிடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிக சுதந்திரம் ஆபத்தானது : இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன்
கா.இசக்கிமுத்து
கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞன் ஒருவன் செயின் பறிப்பில் ஈடுபடுவது, அவனையும், அவனது குடும்பத்தையும் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை மையக் கருத்தாகக் கொண்டு கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘மெட்ரோ’. ஆனந்த் கிருஷ்ணன் இயக்கிய இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
செயின் பறிப்பு குற்றங்கள் குறித்து இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் கூறியதாவது: ஒருநாள் காரில் போகும்போது, எதேச்சையாக அந்த சம்பவத்தைப் பார்த்தேன். பைக்கில் 2 பையன்கள் வருகின்றனர். ஒரு பெண்ணின் செயினை பறிக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களால் செயினை பறிக்க முடியவில்லை. கூட்டம் கூடுவதற்குள் பைக்கில் ஏறிப் பறந்துவிட்டார்கள். ஏன் அவர்களால் பறிக்க முடியவில்லை என்று யோசித்தேன். கழுத்தைச் சுற்றி புடவைத் தலைப்பை போட்டிருந்தார். தவிர, கூந்தல் அதிகம் இருந்ததால், செயின் வெளியே தெரியவும் இல்லை. இதுதான் காரணம் என்று தெரிந்துகொண்டேன்.
செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் தங்களது அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதால்தான் ஹெல்மெட் அணிகின்றனர். அதேபோல, அவர்களது தேவை செயின் மட்டுமே. வன்முறையோ, தாக்குதலோ அல்ல. செயினை பறித்தோமா, விற்று பணமாக்கினோமா, செலவழித்தோமா என்று இருப்பார்கள்.
திடீரென கிளம்பி செயின் பறிக்கச் சென்றவர்களும் உண்டு. நன்கு நோட்டமிட்டுச் செல்பவர்களும் உண்டு. பெண்ணைப் பார்த்து பின்தொடர்ந்து, எங்கெல்லாம் செல்கிறார், எவ்வளவு செயின் அணிந்துள்ளார், காய்கறி வாங்கச் செல்லும்போது எப்படி உடையணிகிறார், என்ன செருப்பு போடுகிறார் என்பது உட்பட அனைத்தையும் நோட்டமிடுவார்கள்.
இதுவரை நடந்த எல்லா செயின் பறிப்பு சம்பவங்களையும் பார்த்தால், எளிதாக யாரிடம் பறிக்க முடியுமோ அவர்களிடம் மட்டுமே பறித்துள்ளனர். ஆண்கள் சற்று பலசாலிகள். தவிர, காலர் வைத்த சட்டை போடுபவர்கள் என்பதால் அவர்களிடம் செல்போனை பறிப்பார்களே தவிர, செயின் பறிக்கும் முயற்சியில் ஈடுபடமாட்டார்கள்.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஒரே வகை குற்றங்களில் தான் ஈடுபடுவார்கள். செயின் பறிப்பும் அப்படித்தான். செயின் பறிப்பின்போது பயன்படுத்தும் பைக், அதன் பிக்கப் ஸ்பீடு ஆகியவையும் இதில் முக்கியம். பின்னால் உட்கார்ந்திருப்பவன், செயினில் கை வைத்த கணமே, ஓட்டுகிறவன் பைக்கை வேகமாக எடுப்பான். அந்த வேகத்தில்தான் செயின் அறுகிறதே தவிர, கையால் பிடித்தெல்லாம் இழுக்க மாட்டார்கள். சற்று தடுமாறினாலும் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு, அடி, உதை வாங்கி சிறைக்குச் செல்ல நேரிடும். தணிக்கை சிக்கல் காரணமாக, இவ்வளவு விவரமாக ‘மெட்ரோ’ படத்தில் காட்ட இயலவில்லை.
தமிழகத்தில் செயின் அணியாத பெண்கள் குறைவு. அதனால், வெளியூர் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுவிட்டு, ஒரே நாளில் திரும்பிவிடுகின்றனர். பெரும்பாலும் இதில் ஈடுபடுவது நடுத்தரக் குடும்பத்து பசங்க. கெத்தாக, ஆடம்பரமாக இருக்க விரும்புகிறார்கள். அது வீட்டில் கிடைக்காததால், வெளியே தேடுகிறார்கள். குறுக்கு வழியை நாடுகிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் நடத்தை விதிமுறைகளை மாற்ற வேண்டும். அவர்களது நடவடிக்கைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிக சுதந்திரம் கொடுப்பதுதான் பல சூழலில் ஆபத்தாக மாறுகிறது. வீட்டுக்குள் பிரச்சினைகளைக் குறைத்தாலே, இதுபோன்ற பல சமூகப் பிரச்சினைகள், குற்றங்கள் குறைந்துவிடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT