Published : 12 Aug 2017 08:38 PM
Last Updated : 12 Aug 2017 08:38 PM
ரஜினி, கமல், அஜித் என்று நடிகர்களுக்கும், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் என அரசியல்வாதிகளுக்கும் பேனர்கள் கட்டி ஏதாவது ஒரு வகையில் அரசியல், வர்த்தக லாபம் காணுவது பலரது வழக்கம். அப்படிப்பட்ட உலகில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வாழ்ந்த 270 சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களை ஃபிளக்ஸ் பேனர்களாக்கி கண்காட்சியில் வைத்து அன்றைய சுதந்திர வேட்கையை இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வூட்டிக் கொண்டிருக்கிறார் கோவையை சேர்ந்த முத்துவேல்.
40 வயதாகும் இவர் கடந்த வருடம் சுதந்திர தினத்தன்று கோவை மாவட்டத்தை சேர்ந்த தியாகிகள் 240 பேரின் உருவப்படத்தை பேனர்களாக்கி வைத்து அசத்தியிருந்தார். எப்படி சேகரித்தார் இத்தனை படங்களை? எப்படி வந்தது இந்த எண்ணம். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேனிலைப்பள்ளியில் இந்த சுதந்திர தினக்கண்காட்சிக்காக பேனர்களை அடுக்கிக் கொண்டிருந்தவர் 'தி இந்து'விடம் கூறியதாவது.
''பள்ளிப்படிப்பு கூட எனக்கு சுத்தமாக கிடையாது. பெயின்டிங் கூலி வேலை. வாரத்தில் 3 நாள் வேலை இருக்கும். மற்ற நாள் வேலை கிடைக்காது. அப்படியிருக்க 17 வருஷங்களுக்கு முன் சுதந்திர போராட்டத்தியாகிகளின் மீது ஈடுபாடு கொண்டு வ.உ.சி நற்பணி மன்றம் ஒன்றை நண்பர்கள் சிலருடன் ஆரம்பித்தோம். வ.உ.சி இழுத்த செக்கு கோவை சிறையில் உள்ளது. அதற்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாலையிட்டு மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தோம். அந்த நிலையில்தான் சுதந்திர போராட்ட தியாகிகள் படத்தை சேகரித்து பேனர்களாக வைக்கலாம் என்று யோசனை வந்தது.
அதற்கு போத்தனூரை சேர்ந்த வாத்தியார் ஒருவர் 100 படங்கள் வரை கொடுத்து உதவினார். அதை மட்டும் வைக்காமல் பல தியாகிகள் வீடு தேடிச் சென்று புகைப்படங்கள் சேகரித்தேன். அதைத்தான் சென்ற ஆண்டு கண்காட்சியில் வைத்தேன். இந்த ஆண்டு திருப்பூர் மாவட்ட தியாகிகளையும் சேர்த்தி வைக்க ஆவல் கொண்டு தேடினேன். இந்த அளவுக்கு சேர்த்த முடிந்தது. இப்போது நடக்கும் 3 நாள் கண்காட்சியில் வைக்கிறேன்!'' என தெரிவித்தார்.
முத்துவேலுக்கு இரண்டு குழந்தைகள். பெண் ப்ளஸ்டூவும்,பையன் 6வதும் படிக்கிறார்கள். மனைவி 10-வது படித்துள்ளார். அவர் கொடுத்த ஊக்கமே இந்த புகைப்படங்கள் சேகரிப்பு என்று சொல்லும் இவர் இந்த புகைப்படங்கள் சேகரிப்பதில் உள்ள சிரமங்களையும் தெரிவித்தார்.
ஒரு தியாகி வீட்டிற்கு சென்ற போது அவர் புகைப்படம் இருக்கிறது. ஆனால் தேட நேரமில்லை எனச் சொல்லியே 10 நாட்கள் அலைக்கழித்தார்களாம். இறுதியில், 'நீயும் 10 நாளா நடக்கறே. ஆனா படம் அட்டாலியில் இருக்கும். தேடி எடுத்துக்க!' என்றனராம்.
இவரும் ஏணியை வைத்து தேடி உளுத்துப்போன சட்டங்களுக்கு மத்தியில் பல மணிநேரம் தேடி எடுத்தாராம். ஆட்சியர் அலுவலகத்தில் அணுகி புகைப்படங்கள் கேட்டபோது, அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டனராம். முகவரியும், சுதந்திர போராட்ட பென்சன் வாங்குவோர் பட்டியலும் கேட்டபோது, 'அவர்கள் எல்லோருமே செத்துப்போனாங்க!' என்று பதில் கிடைத்ததாம்.
பிறகு கொஞ்சம் தேடியலைந்ததில் 6 மாதங்கள் முன்பு நண்பர் ஒருவர் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துசாமி என்ற தியாகியை சந்தித்து அவரிடம் புகைப்படம் வாங்கினாராம். ''எனக்குத் தெரிந்து இந்த புகைப்படங்களில் உள்ள 270 தியாகிகளில் அவர் ஒருவர்தான் தற்போது உயிருடன் இருக்கிறார் என நினைக்கிறேன். அவருக்கும் இப்போது வயசு 100க்கு கிட்டத்தட்ட இருக்கும்!'' என்கிறார் முத்துவேல்.
2 ஆண்டுகளில் 2 மாவட்ட தியாகிகள் புகைப்படங்களை தேடிப்பிடித்து கண்காட்சியை நடத்தும் இவருக்கு வரும் காலத்தில் ஆண்டுக்கு 2 மாவட்டத் தியாகிகள் புகைப்படங்களை தேடிப்பிடித்து சேர்த்து 5 வருடத்தில் தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத் தியாகிகளின் படங்கள் அத்தனையும் சேகரித்து வெளியிடுவதே லட்சியமாம். இந்த பேனர்கள் தயாரிப்பதற்கு ரூ.80 ஆயிரம் செலவு பிடித்திருக்கிறது. இதை 7 நண்பர்கள் மட்டுமே சேர்ந்து செய்திருக்கிறார்கள் என்பது இன்னமும் நெகிழ வைக்கும் சமாச்சாரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT