Last Updated : 23 Aug, 2017 10:08 AM

 

Published : 23 Aug 2017 10:08 AM
Last Updated : 23 Aug 2017 10:08 AM

அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டியது ஆளுநரின் கடமை: சட்ட நிபுணர்கள் கருத்து

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்திருப்பதால் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டியது ஆளுநரின் கடமை என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன்: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழ்ந்துவிடும். எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். இந்த அரசுக்கு தலைமை தாங்குபவர் முதல்வர்தான். அவர் சொல்பவர்கள்தான் சட்டப்படி அமைச்சர்களாக ஆகின்றனர். முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றால் தமிழக அமைச்சரவை மீதே நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம். எனவே, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆளுநர் தாமதமின்றி சட்டப்பேரவையைக் கூட்டி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை நிரூபிக்கச் சொல்ல வேண்டும். குதிரை பேரத்தைத் தவிர்ப்பதற்காக இதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: 19 எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதால் இந்த அரசுக்கு பெரும்பான்மை இருக்காது. எனவே, சட்டப்பேரவையில் இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிரூபிக்காவிட்டால் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்துவிட்டு, மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும். யார் முதல்வர் என்பது இங்கு முக்கியமில்லை. அது தனிப்பட்ட விஷயம். தற்போது இந்த அரசுக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பதையே முதலில் பார்க்க வேண்டும். இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுவது ஆளுநரின் கடமையாகும்.

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி: முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை என்றே பொருள்படும். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டாக வேண்டும். இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்பும் நடந்துள்ளது. அதிமுகவின் இரு அணிகள் ஒன்றாக இணைந்துள்ள நிலையில் அவர்களின் அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நல்லசூழலில் அரசை நடத்த முடியும். நியாயப்படி, சட்டப்படி பார்த்தால், சட்டப்பேரவையைக் கூட்டி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கு ஆளுநர் விரைவில் உத்தரவிடுவார் என நினைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x