Published : 27 Aug 2017 07:12 PM
Last Updated : 27 Aug 2017 07:12 PM
சிறுவாணி, பவானி ஆறுகள் இணையும் கூடப்பட்டியில் தண்ணீரின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதற்கு மழையின்மை காரணமா, கேரள அரசு கட்டிய தடுப்பணைகள் காரணமா என்பது இப்பகுதி விவசாயிகளிடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், பாசனத் தேவைக்கானதாகவும் விளங்கி வருவது சிறுவாணி மற்றும் பவானி நதிகள். மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் முத்திக்குளம் என்ற இடத்தில் உருவாகும் சிறுவாணி ஆறு பல்வேறு மலை, பள்ளத்தாக்குகளைக் கடந்து கேரளா பகுதியில் கோவையின் குடிநீர் ஆதாரமாக அமைந்திருக்கும் சிறுவாணி அணையை நிரப்பி கூடப்பட்டி என்ற இடத்தில் பவானியுடன் இணைகிறது.
நீலகிரியில் உருவாகும் பவானி கேரள பகுதியான சைலண்ட்வேலி, அட்டப்பாடி காடுகளில் நுழைந்து முக்காலி, தாவளம், மஞ்சிக்கண்டி, பாடவயல், தேக்குவட்டை, புதூர், சாவடியூர், தேக்கு மொக்கையூர் என கடந்து கூட்டப்படி வந்து சேருகிறது. இங்கே சிறுவாணியை தன்னுடன் இணைத்துக் கொண்டு அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு வருகிறது. இதில் கூடப்பட்டி, அத்திக்கடவு என்பவை தமிழக பகுதி கிராமங்கள். அதற்கு முன்னே உள்ள கோட்டத்துறை, தேக்கு மொக்கையூர் உள்ளிட்டவை கேரள கிராமங்கள்.
பருவமழை இல்லை
கேரளப் பகுதிகளில் பரவலாக மழை பெய்திருக்க, மலம்புழா, பாரதப்புழா போன்ற ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் கூடப்பட்டியில் வந்து சேரும் சிறுவாணி, பவானி ஆறுகளின் வெள்ளம் சிறுத்தே வந்து இணைகிறது. இதற்கு காரணம் பல பகுதிகளில் கேரளத்தில் மழை பெய்தாலும், அட்டப்பாடி பகுதியில் பருவ மழை எதிர்பார்த்தபடி இல்லை. சென்ற ஆண்டை விடவும் குறைவாகவே பெய்துள்ளது. சைலண்ட் வேலி சோலைக்காடுகளில் பெய்த மழையால் மட்டுமே ஓரளவு தண்ணீர் பவானியில் வந்து கொண்டிருக்கிறது. சிறுவாணிக் காடுகளிலும் எதிர்பார்த்தபடி மழை இல்லை. எனவேதான் அதிலும் தண்ணீர் குறைவாக வருகிறது என்கிறார்கள் அட்டப்பாடி, அகழி, சோலையூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள்.
உறிஞ்சப்படும் நீர்
ஆனால் கூட்டப்பட்டி, புதூர், தேக்கு மொக்கையூர், கூடப்பட்டி விவசாயிகளின் கருத்தோ வேறுமாதிரி உள்ளது. சிறுவாணி ஆறு வரக்கூடிய பாதையில் 40 கிமீ தூரத்துக்கும் மோட்டார் பம்ப் செட்டுகள் ஏராளமாக வைத்துநீரை உறிஞ்சுகிறார்கள். அங்கிருந்து பல கிமீ தூரம் கூட குழாய் வழியே நீரைக் கொண்டு போய் விவசாயம் செய்கிறார்கள். அதேபோல் பவானி வரும் வழியிலும் ஆயிரக்கணக்கில் மோட்டார் பம்ப் செட்டுகள் நீர் இறைக்கின்றன. அரசு நிர்வாகம் இப்படி செய்வது சட்டவிரோதம் என்று தெரிவித்தும் கூட அப்படியேதான் நடக்கிறது. போதாக்குறைக்கு பவானிக்கு குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்டிவிட்டனர். எனவேதான் இங்கே நீர்வரத்து குறைவாகி, சிறுத்தும் போய்விட்டது என்கிறார்கள்.
வறண்டுபோகும் ஆறுகள்
இதுகுறித்து தேக்குமொக்கையூர் சேர்ந்த விவசாயி மகேந்திரன் என்பவர் கூறும்போது, ''கூடப்பட்டியில் ஆறுகள் சேரும் இடத்தில் 200 மீட்டர் அகலத்துக்கு வெள்ளம் வரும். இப்பவெல்லாம் மழைக்காலத்தில் கூட இரண்டு ஆறுகளும் சேர்ந்து 20 மீட்டர் அகலத்துக்கு கூட செல்வதில்லை. வருடத்தில் நான்கு மாதங்கள் ஆறுகள் வறண்டே விடுகிறது எனவே இங்கு நாங்கள் கடந்த சில வருடங்களாகவே ஆற்று நீரை தவிர்த்து மானம் பார்த்து விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது'' என்றார்.
தேக்குவட்டை ராதாகிருஷ்ணன் கூறும்போது, ''பாடவயலில் தற்போது 3-வது அணை கட்டுவதாக தமிழகத்தில் செய்திகள் வருவதாக சொல்கிறார்கள். அப்படியெதுவும் இங்கே நடக்கவில்லை. தேவையில்லாமல் அங்கே அதை அரசியல்படுத்துகிறார்கள்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT