Published : 21 Aug 2017 12:13 PM
Last Updated : 21 Aug 2017 12:13 PM

மலிவு விலை காய்கறி விற்பனையால் பசுமை கடைகளில் விற்பனை இரட்டிப்பானது

சென்னையில் பண்ணை பசுமை கடைகளில் 4 வகையான காய்கறிகள் மலிவு விலையில் விற்கப்பட்டு வருவதால் அந்த கடைகளில் விற்பனை இரட்டிப்பாகி யுள்ளது.

சென்னையில் டியூசிஎஸ், சிந்தாமணி, வடசென்னை உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 2 நகரும் கடைகள் உட்பட 43 பண்ணை பசுமை காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காய்கறிகள் மலிவு விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

தற்போது வெளிச்சந்தையில் தக்காளி மற்றும் வெங்காயம், சாம்பார் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகளில் கடந்த ஒரு மாதமாக, தக்காளி, வெங்காயம், சாம்பார் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை மலிவு விலையில் விற்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது.

10 நிமிடத்திலேயே விற்பனை

இது தொடர்பாக திருவல்லிக்கேணி பண்ணை பசுமை கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, “கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்து வெளிச்சந்தையில் ரூ.40-க்கு விற்கப்பட்டது. அப்போது பண்ணை பசுமை கடையில் கிலோ ரூ.18-க்கு விற்கப்பட்டது. அப்போது 10 நிமிடங்களிலேயே வெங்காயம் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டது. தற்போது வெங்காயம், தக்காளி, சாம்பார் வெங்காயம் ஆகியவை இங்கு விலை குறைவாக இருப்பதால், உடனே விற்று தீர்ந்துவிடுகிறது” என்றார்.

கடைக்கு காய்கறி வாங்க வந்த கிருஷ்ணவேணி கூறும்போது, “விலை மலிவாக இருப்பதால் சில நேரங்களில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி கள் உடனடியாக விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டியுள்ளது. அதனால் அந்தந்த கடைகளுக்கான தேவையை அறிந்து, கூடுதல் கொள்முதல் செய்து காய்கறிகளை வழங்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது வெளிச்சந்தையில் தக்காளி, வெங்காயம், சாம்பார் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்ந்து வருவதால், அவற்றின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, இந்த 4 காய்கறிகளை மிகக் குறைந்த விலையில் விற்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால் பண்ணை பசுமை கடைகளில் தக்காளியை ரூ.48-க்கு (வெளிச்சந்தையில் ரூ.60) விற்கிறோம். அதேபோல பெரிய வெங்காயம் ரூ.30-க்கும் (வெளிச்சந்தையில் ரூ.45), சாம்பார் வெங்காயம் ரூ.80 (வெளிச்சந்தையில் ரூ.110), உருளைக் கிழங்கு ரூ.15-க்கும் (வெளிச்சந்தையில் ரூ.24) விற்கிறோம். மேலும் நகரும் கடைகளை, பல்வேறு குடியிருப்பு வளாகங்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருகி றோம்.

மாத விற்பனை ரூ.30 லட்சம்

இந்த 4 காய்கறிகளையும் மலிவு விலையில் விற்கும் திட்டத்தால், இக்காய்கறிகளை வாங்க வருவோர், மற்ற காய்கறிகளையும் சேர்த்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு மொத்த கடைகளும் சேர்த்து, மாத விற்பனை ரூ.15 லட்சமாக இருந்தது, தற்போது ரூ.30 லட்சமாக உயர்ந்துள்ளது.

சில கடைகளில் மாத விற்பனை ரூ.30 ஆயிரமாக இருந்தது, தற்போது ரூ.80 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. மலிவு விலை காய்கறி விற்பனை திட்டத்தை மேலும் வலுப்படுத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x