Published : 27 Aug 2017 01:59 PM
Last Updated : 27 Aug 2017 01:59 PM

தமிழக காவல்துறையில் இரண்டாவது திருநங்கையாக நஸ்ரியா தேர்வு

தமிழக காவல்துறையில் இரண்டாவது திருநங்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் உடலில் ஏற்பட்ட மாறுதல்களை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். திருநங்கையாக மாறிய பின்னர் நஸ்ரியா எனவும் பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார் நஸ்ரியா. கடந்த மாதம் 31-ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்கச் சென்றபோது திருநங்கைக்கான சான்றிதழ் இல்லை எனக் கூறி அவரை உடல் தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்த நஸ்ரியா திருநங்கைக்கான சான்றிதழை வழங்காமல் சமூக நலத்துறையினர் கடந்த 3 ஆண்டுகளாக தாமதம் செய்வதாகவும், சான்றிதழ் வழங்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன் என கூறியதைத் தொடர்ந்து சமூக நலத்துறையினர் அன்று மாலையே நஸ்ரியாவுக்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் மூலம் திருநங்கைக்கான அடையாள அட்டையை வழங்கினர். திருநங்கைக்கான அடையாள அட்டை பெற்ற பின்னர் நஸ்ரியா நீதிமன்றத்தில் ஆஜர் ஆனதைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வுக்கு அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வியாழக்கிழமை நடைபெற்ற உடல் தகுதித் தேர்விலும், சனிக்கிழமை நடைபெற்ற சான்றிதழ்கள் சரிபார்ப்பிலும் பங்கேற்று தேர்ச்சி அடைந்ததை தொடர்ந்து சனிக்கிழமை காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து நஸ்ரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இரண்டாம் நிலை காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தப் பணி கிடைக்க உதவிய நீதிமன்றம் மற்றம் ஊடகத்தினருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி தமிழக காவல்துறையில் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட துணை ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x