Published : 20 Aug 2017 10:23 AM
Last Updated : 20 Aug 2017 10:23 AM
இலங்கை விடுவித்த விசைப்படகுகள் பராமரிப்பின்றி சேதமடைந்திருப்பதால் அவற்றை மீட்க முடியாமல் தமிழக குழுவினர் ஏமாற்றத்துடன் இன்று நாடு திரும்புகிறனர்.
இலங்கை கடற்படையினரால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 160க்கும் அதிகமான படகுகளை கைப்பற்றி 1,000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் அவ்வப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரண்டு மாத சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்படுகின்றனர்.
ஆனால் படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இந்திய இலங்கை இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 2015-ம் ஆண்டில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியதற்காக கைப்பற்றப்பட்ட 42 படகுகளை மட்டும் விடுவிக்க இலங்கை அரசு கடந்த ஜுன் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இலங்கை விடுவித்த 42 படகுகளின் நிலை பற்றி ஆய்வு செய்ய புதன்கிழமை தமிழக மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஜெ.எஸ்.சமீரன் தலைமையில் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரி மணிகண்டன், பாம்பன் மீன்வளத்துறை அதிகாரி கவுதமன், ராமேசுவரம், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டங்களின் மீனவர் பிரதிநிதிகள் ஜேசுராஜா, எழில்அரசன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழு கடந்த வியாழக்கிழமை கொழும்பு சென்றனர்.
இந்த படகுகள் மீட்புக்குழு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைநகர், கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி மற்றும் திருகோணமாலை ஆகிய கடற்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி கரையோரங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெரும்பான்மையான படகுகள் சேதமடைந்துள்ளதாகவும், இவற்றை மீண்டும் செப்பனிட்டு தமிழகம் கொண்டு வருவதற்கு சுமார் ரூ. 2 கோடிக்கும் மேலாக செலவாகும் என மீட்புக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதனால் உடனடியாக படகுகளை மீட்க முடியாததால் ஏமாற்றத்துடன் மீட்பு குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாயகம் திரும்புகிறனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT