Published : 13 Aug 2017 12:33 PM
Last Updated : 13 Aug 2017 12:33 PM

காலாவதி பேருந்துகளால் 7 மாதங்களில் 1,300 விபத்துகள்.. 300 உயிரிழப்புகள்: அவதிப்படும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், பயணிகள்

தமிழகத்தில் காலாவதியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் சாலை விபத்துகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 7 மாதங்களில் 1,300 விபத்துகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா முதல்வரானதும் 1967-ல் போக்குவரத்தை நாட்டுடமை ஆக்கினார். இத்திட்டம் தமிழகத்தில் பெரும் வெற்றிகண்டது. இதனால் கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி, வேலைவாய்ப்பு, தொழிலாளருக்கு தரமான பணியிடச் சூழல், குறைந்த பேருந்துக் கட்டம் போன்ற வசதிகள் கிடைத்தன. போக்குவரத்து தொழிலாளர்களின் அயராத உழைப்பும், சிறந்த நிர்வாகமும் அரசுக்கு அதிக வருவாயைப் பெற்றுத் தந்தன. தொடர்ந்து 20 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கியது.

நாட்டுடமைக் கொள்கையின்படி சுமார் 3,500 தனியார் பேருந்துகள் மட்டுமே அரசுடமை ஆக்கப்பட்டன. ஆனால், அரசு நிதியுதவி இல்லாமலேயே இவை 18 ஆயிரம் அரசுப் பேருந்துகளாக அதிகரித்தன. ஏராளமான பணிமனைகள், தலைமையகக் கட்டிடங்கள் உருவாகின.

ஆனால், இன்றைய நிலை பரிதாபமாக இருக்கிறது. தற்போது ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது அரசுப் போக்குவரத்து துறை.

மாதந்தோறும் 200 விபத்துகள்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆண்டுதோறும் 20 சதவீத பேருந்துகளை நீக்கி புதிய பேருந்துகளை சேர்க்க வேண்டும். ஆனால், கடந்த 2001-ல் இருந்து மிக சொற்பமான பழைய பேருந்துகள் மட்டுமே நீக்கப்படுகின்றன. புதிய பேருந்துகளை வாங்காமல் காலம் தாழ்த்துவதால், பேருந்துகள் சேதமடைகின்றன. மழைகாலத்தில் பேருந்துகளின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே கொட்டுகிறது. காலாவதிப் பேருந்துகள் இயக்கப்படுவதாலும், உதிரி பாகங்கள் முறையாக மாற்றப்படாததாலும், அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதந்தோறும் சராசரியாக 50 விபத்துகள் நடக்கும். தற்போது இது 200 ஆக அதிகரித்துதுள்ளது. குறிப்பாக, கடந்த 7 மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளால் சுமார் 1,300 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

17 ஆயிரம் பேருந்துகள் காலாவதி

இது தொடர்பாக ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும்போது, ‘‘வல்லுநர்களின் பரிந்துரைப்படி, ஒரு பேருந்தை அதிகபட்சம் 8 லட்சம் கி.மீ. வரை ஓட்டலாம் அல்லது 6 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். அதன்பிறகு அந்த பேருந்து காலாவதி ஆகிவிடுகிறது. தமிழகத்தில் இயக்கப்பட்டுவரும் 23,500 பேருந்துகளில் 17,000 பேருந்துகள் 6 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுபவை. சுமார் 65 சதவீத பேருந்துகள் காலாவதியானவை. இவற்றில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும். பிரேக் ஒழுங்காகப் பிடிக்காது. இன்ஜின் திடீரென மக்கர் செய்யும். கூரை பழுதாகும். இந்தப் பேருந்துகளை உடனுக்குடன் சரிசெய்ய உதிரிபாகங்கள் இல்லை. இதுதான் விபத்துக்குக் காரணமாகிறது’’ என்றார்.

6,000 பணியிடங்கள் காலி

தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘அரசுப் பேருந்துகளை தினசரி, வாராந்திர, மாதாந்திர என 3 வகையாகப் பிரித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆள் பற்றாக்குறையால், இந்தச் சோதனைகள் நடப்பதில்லை. தமிழகம் முமுவதும் மாதந்தோறும் தீ விபத்தால் மட்டும் 12-க்கு மேற்பட்ட அரசுப் பேருந்துகள் சேதம் அடைகின்றன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்பப் பிரிவில் உள்ள 6,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண்டுதோறும் 20 சதவீத பழைய பேருந்துகளை நீக்க வேண்டும். முறைகேடுகளைத் தவிர்த்து, பேருந்துகளின் இயக்கத்தை முறைப்படுத்தி இயக்கினால் போக்குவரத்துக் கழகங்களை மீண்டும் லாபத்தில் இயங்கச் செய்யமுடியும்’’ என்றார்.

விபத்துக்கு முக்கிய காரணம்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை, சென்னை, கோவை, மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் 2.5 நிமிடங்களில் 1 கி.மீ. தொலைவும், மாவட்டங்களில் 2 நிமிடங்களில் ஒரு கி.மீ தொலைவும் இயக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இது 45 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட நடைமுறை. இதுதான் இப்போது வரை தொடர்கிறது. சென்னையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அவர்களது பணி நேரத்தில் மொத்தம் 6 ட்ரிப் செல்லவேண்டும். ஆனால், தற்போதுள்ள நெரிசலான சூழலில், 4 முறை மட்டுமே சென்று வர முடிகிறது. ஆனாலும், 6 ட்ரிப் அடிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதால், வேகமாகப் பேருந்துகளை இயக்குகின்றனர். இதுவும் விபத்துக்கு முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியபோது, ‘‘ஆரம்ப காலங்களில் பணிமனைகளில் 24 பேருந்துகளை தினமும் ஆய்வு செய்ய 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 80 பேருந்துகளுக்கும் அதே 2 பேர்தான். 80 பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கே நேரம் சரியாக இருந்தால், எப்படி ஆய்வு செய்வது?’’ என்கின்றனர் ஊழியர்கள்.

விபத்தைக் குறைக்க வழி

சாலை விபத்துகளைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் கீதகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்து ஓட்டுவது சவாலானது, கடினமானது. ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி இருக்கக் கூடாது. பேருந்துகளை இயக்க அவர்களுக்குப் போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அப்போதுதான் அவர்களது மனநிலை நன்றாக இருக்கும். மேலும், காலாவதி பேருந்துகளை இயக்கவே கூடாது. ஓட்டுநர்கள் கண் சிமிட்டினாலேயே அலாரம் அடிக்கும் தொழில்நுட்ப வசதியை செயல்படுத்தலாம். ஓட்டுநர்களின் பணிச்சுமையைக் குறைக்க, மாற்று ஓட்டுநர்களை பணியில் அமர்த்தலாம். இதற்கான ஆய்வுகள் கோரக்பூர் ஐஐடியில் நடந்து வருகிறது என்றார்.

விரைவில் மாறும் என நம்பிக்கை

போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நாட்டிலேயே தமிழகத்தில்தான் பேருந்துக் கட்டணம் குறைவு. சிறந்த சேவைக்காக நாட்டிலேயே அதிகமாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்தான் அதிகபட்சமாக 9 விருதுகள் பெற்றுள்ளன. டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வு, சுங்கச்சாவடிகள் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.7 கோடி இழப்பு ஏற்படுகிறது. கட்டணத்தை உயர்த்தாமல், வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் சுமார் 500 பேருந்துகளின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தியுள்ளோம். போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான இடங்களை வணிகப் பயன்பாட்டுக்கு விட இருக்கிறோம். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2,000 புதிய பேருந்துகள் விரைவில் சேர்க்கப்பட்டு, பழைய பேருந்துகள் நீக்கப்படும்’’ என்றனர்.

டை குறைப்பால் விபரீதம்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தேவையான பேருந்துகள், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்பட்டன. அவை தரமாக, பாதுகாப்பானதாக இருந்தன. முதல் 5 ஆண்டுகளுக்கு பெரிதாக சேதம் எதுவுமின்றி ஓடும். பேருந்து சுமார் 10 டன் எடை இருக்கும். தற்போது தனியார் நிறுவனங்களிடம் பேருந்துகள் வாங்கப்படுகின்றன. அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேருந்து எடையை 7.5 டன்னாக குறைத்துவிட்டனர். இதனால்தான், விபத்து நேரிடும்போது, பேருந்துகள் உருத்தெரியாமல் நொறுங்கிவிடுகின்றன. அதிக சேதம் ஏற்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

காப்பீடு இல்லாததால் முடக்கம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏசி பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகளுக்கு காப்பீடு வசதி கிடையாது. இதனால், இந்த ஆண்டில் மட்டும் விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற உத்தரவால் 300 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு பிரீமியம் தொகையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்கின்றனர் துறை வல்லுநர்கள்.

காலாவதி, நஷ்டத்தில் 3-வது இடம்

நாட்டிலேயே பிஹாரில்தான் காலாவதிப் பேருந்துகள் அதிகம் (80 சதவீதம்) இயக்கப்படுகின்றன. 2-வது இடத்தில் வடக்கு பெங்கால் மண்டல போக்குவரத்துக் கழகமும் (63 சதவீதம்), 3-வது இடத்தில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் (63 சதவீதம்) இருப்பதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் மொத்தம் 53 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 1.47 லட்சம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 51 போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது. இதிலும் 3-வது இடத்தில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இருக்கின்றன. லாபத்தில் இயங்கும் முதல் மற்றும் 2-வது இடத்தில் கர்நாடகப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. டீசல் விலை உயரும்போதெல்லாம் கர்நாடகாவில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x