Last Updated : 23 Aug, 2017 10:04 AM

 

Published : 23 Aug 2017 10:04 AM
Last Updated : 23 Aug 2017 10:04 AM

கடலையைச் சாப்பிடுங்க.. கவலையில்லாம இருங்க!

பி

ரியாணிக்கு திண்டுக்கல், அசோகாவுக்கு திருவையாறு, அல்வாவுக்கு திருநெல்வேலி, முறுக்குக்கு மணப்பாறை என நம்மவர்கள் தின் பண்டங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வெறும் நிலக்கட லையையும் கொண்டைக்கடலையையும் மட்டுமே உணவாக உட்கொண்டு ஆரோக்கியமாய் இருப்பதாய் சொல்கிறார் ஒரு தலைமை ஆசிரியர்.

வெந்ததெல்லாம் விஷம்

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஜோசப். வலங்கைமான் அருகே கிளாக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவர்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடலைகளை மட்டுமே உணவாக உட்கொண்டு வரும் அந்த அதிசய மனிதர். ”சமைத்த உணவுகள் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்?” என்று கேட்டால், “வெந்ததெல்லாமே விஷம்” என பட்டெனப் பதில் சொல்கிறார் ஜோசப்.

“சின்ன வயதிலிருந்தே நான் ஓட்டப் பந்தயங்கள் மற்றும் விளையாட்டுக்களில் ஆர்வமாகப் பங்கேற்று விளையாடி வருவேன். அப்போதெல்லாம் கொண்டைக்கடலையை விரும்பிச் சாப்பிடுவதுண்டு. தற்போது, நமக்கு வரும் பெரும்பாலான நோய்கள் உண்ணும் உணவால் தான் வருகிறது. வழக்கமான நமது சமைத்த உணவுகள் ஒருபக்கம் இருக்க.. அண்மைக்காலமாக, நமக்கு கொஞ்சமும் ஒத்துவராத துரித உணவுகளையும் தெருக்களில் வண்டிபோட்டு விற்று உடம்பில் விஷத்தை ஏற்றுகிறார்கள்.

மருந்தையும் சாப்பாடு போல..

இதனால் வரும் நோய்களைக் குணப்படுத்த தினமும் மருந்து, மாத்திரைகளையும் சாப்பாடு போல் சாப்பிட வேண்டியுள்ளது. இப்போது உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள்கூட விஷமாகத்தான் விளைவிக்கப்படுகின்றன. இதனால் தான், நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரிசி உள்ளிட்ட மாவுப் பொருட்களை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன். டீ, காபி, பால் போன்ற எதையும் அருந்துவதும் கிடையாது.

இவைகளுக்குப் பதிலாக தினமும் அரை கிலோ நிலக்கடலை, கொண்டைக்கடலை இவை இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, எங்கு சென்றாலும் அதை பையில் போட்டு எடுத்துச் செல்வேன். பசி எடுக்கும் போதெல்லாம் கடலையை சாப்பிடுவேன். அவ்வப்போது உடற்பயிற்சி செய்து வருவதால் இதுவரை எந்த நோயும் என்னை அண்டவில்லை. ஜலதோஷம்கூட பிடிக்காத அளவுக்கு உடலைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறேன்.

கடலையைத் தவிர்த்து, சீசனில் வரும் பழங்களை மட்டும் அவ்வப்போது எடுத்துக் கொள்வேன். நோயற்ற வாழ்வு வேண்டும் என்கிறோம். ஆனால், அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை கடைபிடிப்ப தில்லை. கடலையைப் போல ஆரோக்கியமான உணவு வெறெதுவும் கிடையாது. அதைச் சாப்பிடுவதால் என்னால் மற்றவர்களைவிட எந்நேரமும் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது” என்கிறார் ஜோசப்.

கடலை மட்டும் போதுமா?

“கடலையை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானதுதானா?” கும்பகோணத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பொது மருத்துவர் ராஜேஷ்ராமிடம் கேட்டோம். “மனித உடலுக்கு சமச்சீரான உணவு அவசியம் தேவை. கடலை, கொண்டைக் கடலை சாப்பிடுவதன் மூலம் புரதச்சத்து அதிகமாகவும் நார்ச்சத்து மிதமாகவும் கொழுப்பு சிறிதளவும் கிடைக்கும். இதுதவிர, வைட்டமின் மற்றும் தாதுச் சத்துக்களும் மனித உடலுக்கு தேவை. எனவே, இந்தச் சத்துக்களைக் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்வதே நல்லது. கடலை வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால் உயிர் வாழலாம். ஆனால், எதிர் காலத்தில் பார்வை குறைபாடுகள் வரலாம்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x