Published : 29 Aug 2017 05:47 PM
Last Updated : 29 Aug 2017 05:47 PM

முதல்வர் பதவியை ஏற்காதீர்கள் என்று சசிகலாவிடம் வலியுறுத்தினேன்: சைதை துரைசாமி பேட்டி

ஓபிஎஸ்ஸை நீக்கி விட்டு தான் முதல்வராக பதவியேற்க சசிகலா முடிவெடுத்தபோது முதல்வர் பதவியை ஏற்கவேண்டாம், ஓபிஎஸ்ஸை மீண்டும் முதல்வராக்குங்கள் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினேன் என்று சைதை துரைசாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைந்த சில நாட்களில்  சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியவர்  சைதை துரைசாமி. அதன் பின்னர் கட்சி பிளவுபட்டபோது முழு செயல்பாட்டிலிருந்து ஒதுங்கி விட்டார்.

நீண்ட மவுனத்துக்குப் பிறகு இன்று தனது கருத்தை பேட்டியாக அளித்தார். அவரது பேட்டி வருமாறு:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும் என்று முதன் முதலில் வலியுறுத்தியவர் நீங்கள் தான், தற்போது தினகரனை விமர்சிக்கிறீர்களே?

ஜெயலலிதா மறைந்த சில நாட்களில் சசிகலாவை சந்தித்து கட்சியின் மையப்புள்ளியாக நீங்கள் இருங்கள், என்று முதன் முதலில் நான்தான் சொன்னேன். நீங்கள் முறைப்படி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும். திமுகவை எதிர்க்க வேண்டும். இதற்குத்தான் கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும். யாரும் திமுகவை விமர்சிக்கவில்லை என்று கூறினேன். எந்த அமைச்சருக்கும் மறைமுக செயல்பாடு இருக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தேன்.

இந்த கோரிக்கைகளை நீங்கள் பகீரங்கமாக வைத்தீர்களா?

ஆமாம் நான் 9/2/2017 அன்று ஒரு கடிதத்தை எழுதினேன்.

அந்தக் கடிதத்தில் தாங்கள் பொதுக்குழுவில் பேசியதை வைத்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். என்று குறிப்பிட்டு எழுதினேன்.

அதில்  ''தமிழகம் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் இயக்கமான நம் இயக்கம் பிளவுபட்டு விடுமோ என்று மக்கள் பயந்து கிடக்கின்றனர். எதிரிகள் அப்படி நிகழாதா என்று காத்துக் கிடக்கின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு, முன்னரே இரண்டு முறை முதல்வராக ஜெயலலிதாவால் அடையாளம் கட்டப்பட்ட ஓபிஎஸ்ஸை, மூன்றாம் முறை முதல்வராக்க தாங்கள் ஒத்துழைத்து ஜெயலலிதா  எண்ணத்தை பிரதிபலித்தீர்கள்.

ஆட்சிக்கு ஓபிஎஸ்ஸும், கட்சிக்கு நீங்களும் பொறுப்பேற்று கட்சியும் ஆட்சியும் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த கால கசப்பை மறந்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்தேன்.

கட்சி கட்டுகோப்புடன் இருக்க வேண்டும் , ஆனால் எதிர்பாராத விதமாக சட்டமன்ற கட்சித்தலைவராக உங்களை தேர்வு செய்த ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. கட்சிக்கும் ஆட்சிக்கும் பிரச்சினை வந்தால் அது எதிரிகளுக்கு வாய்ப்பாக வந்துவிடும்.

தாங்கள் கவுரவம் பார்க்காமல் விலகி ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்ட ஓபிஎஸ்ஸை மீண்டும் முதல்வராக நியமிக்க வேண்டும். பொதுச் செயலாளராக தாங்கள் முறைப்படி தேர்வு பெற வேண்டும்.

மேற்கண்ட முடிவை தாங்கள் எடுக்கும் பட்சத்தில் அனைத்து பிரச்சினைகளும் ஒரு நொடியில் தீர்ந்து விடும். கட்சி வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துவது ஒன்றும் புதியதல்ல அதுதான் சிறப்பாக இருக்கும். இந்த நெருக்கடியான நேரத்தைல் கவுரவம் பார்க்காமல் நல்ல முடிவு எடுத்தால் வரலாறு உங்களை வாழ்த்தும்''  என்று எழுதியிருந்தேன்.

இந்த கடிதத்திற்கு உங்களுக்கு பதில் வந்ததா?

ஒரு பதிலும் வரவில்லை.

அப்படியானால் ஓபிஎஸ்ஸுக்காக குரல் கொடுத்த நீங்கள் ஓபிஎஸ் பக்கம் நிற்காமல் ஒதுங்கியது ஏன்?

நான்தான் பிளவு பட்ட கட்சியில் போக மாட்டேன் என்று சொல்லிட்டேனே. எனக்கு எதற்கு அரசியல்?

நீங்கள் 1988 ல் இதே போல் அதிமுக பிளவு பட்டபோது ஒரு அணியில் இருந்தீர்களே?

ஆமாம், அன்று வி.என்.ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் போன்ற தலைமையின் கீழ் இருந்தேன். அன்று இரண்டு அணிகள் இருந்தது உண்மைதான். அன்று கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில்தான் இப்போது இந்த முடிவை எடுத்துள்ளேன்.

தற்போது ஓபிஎஸ், எடப்பாடி ஒன்றுபட்டுவிட்டார்களே?

ஆமாம் இரண்டு பேரும் ஒன்றாக இணைந்துள்ளனர், உண்மைதான். எல்லாம் நடக்கட்டும். எனக்கு அரசியல் வேண்டுமா வேண்டாமா என்பது அடுத்த கட்டம் . முதலில் கட்சி ஒன்றுபடட்டும்.

அப்படியானால் அவர்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா?

என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும் அல்லவா? எல்லாம் நல்லபடியாக முடியட்டும். அது பற்றி பிறகு யோசிப்போம். நான் முதலில் சமூக அக்கறையாளன். அப்புறம் தான் அரசியல். அதனால் இதற்கு இப்போது முன்னுரிமை கொடுக்க மாட்டேன். என்னைத் தேவை இல்லாமல் தினகரன் தரப்பில் சீண்டினார்கள் அதனால் தான் இப்போது வாய் திறந்தேன்.

இதன் பின்னணியில் செந்தமிழன் இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா?

அவரை எல்லாம் ஒரு ஆளாக நான் நினைப்பதில்லை.

இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கும்?

ஒன்றும் ஆகாது, தினகரன் தரப்பு எந்த காரணத்தை கொண்டும் அதிகாரத்திற்கு வரவே முடியாது.

12-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் சசிகலா தரப்பினர் நீக்கப்பட வாய்ப்பு உண்டா?

அப்படி எல்லாம் தேவையே இல்லை, தேர்தல் ஆணையமே அறிவித்துவிடுவார்கள். பொதுக்குழுவில் தீர்மானம் போடவேண்டிய அவசியமே இல்லை.

தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளர் இல்லை என்று சொல்லிவிட்டால் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் அல்லவா?

மூன்று பேர் கட்சியை நடத்தலாம் என்கிற விதி ஏற்கெனவே இருக்கிறதே. அவைத்தலைவர், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் சேர்ந்து கூட்டம் நடத்தலாம் என்று கட்சி விதி உள்ளது அதனால் பொதுச்செயலாளர் தேர்வு தேவை இல்லையே.

ஒரு வேலை பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால் யார் சரியான நபர் என்று நினைக்கிறீர்கள்?

இனி பொதுச்செயலாளர் என்கிற பதவியே இல்லை என்று முடிவு செய்தாச்சு. ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் இணைந்து கட்சியை வழி நடத்துவார்கள் என்ற நிலைப்பாடு தான் வரும் அப்போது தான் கட்சியை வழி நடத்த முடியும்.

ஒருவேலை இதெல்லாம் சாத்தியமானால் அரசியலில் ஈடுபடுவீர்களா?

நான் தான் ஏற்கெனவே சொன்னேனே, தற்போது எந்த அணியிலும் சேராமல் இருக்கிறேன். கட்டாயம் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாளில் என் முடிவை சொல்லுவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x