Published : 23 Aug 2017 10:05 AM
Last Updated : 23 Aug 2017 10:05 AM
“பு
ல்லாங்குழலில் இருந்து எழும் இசையே ஆதி இசை; ஆதிமொழி. அதுவே தெய்வங்கள் எங்களோடு பேசும் மொழி” என்கிறார்கள் பழங்குடிகளான பளியர்கள்.
கோவை - ஆனைமலை, திண்டுக்கல் - பழனிமலை, சிறுமலை, தேனி - போடிமெட்டு, குரங்கனி, வருசநாடு, விருதுநகர் - மகாலிங்கமலை என செழிப்பான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பளியர்கள் குழுக்களாக வசிக்கின்றனர். பழனி மலையில் மட்டுமே நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பளியர் மக்கள் உள்ளனர். இயற்கை கொடுக்கும் வளங்களைப் பெற்று எளிய வாழ்க்கை வாழும் இந்த ஆதிக்குடிகள், தங்களை வாழவைக்கும் வனங்களையே தெய்வமாக போற்றுகின்றனர்.
இசை மட்டுமே பொழுதுபோக்கு
பொழுதெல்லாம் வனத்துக்குள் சுற்றும் இவர்களின் ஒரே பொழுதுப்போக்கு இசை மட்டுமே. புல்லாங்குழல், சத்தக்குழல், கொம்பு, மேளம், மத்தளம், தப்பு, தமுக்கு உள்ளிட்ட பழமையான இசைக்கருவிகளும் அவை சார்ந்த ஆதி இசையும் இன்றளவும் இவர்களிடம் மட்டுமே உயிர்ப்போடு உலா வருகின்றன. இந்த இசைக்கருவிகளை இவர்களே உருவாக்கி இசைக்கின்றனர். மலைவனம் முழுவதும் வனதேவாதிகள் (தெய்வங்கள்) நிறைந்திருக்கின்றன என்பதும் இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
இசையால், வனதேவாதிகளை தங்களின் வாழ்விடத் துக்கே வரவைத்துப் பேசமுடியும் என்பதும் இவர்களது நம்பிக்கை. எழுகரை நாடன், பளிச்சியம்மன் இவை இவர்களின் முதன்மைத் தேவாதிகள். தெய்வ வழிபாட்டின் போது ஒவ்வொரு விதமான இசை வாசிக்கப்படும். அப்போது, ஆணோ, பெண்ணோ யாராவது ஒருவர் தானாக முன்வந்து ஆடுகிறார். தெய்வங்கள் தங்களுக்குப் பிடித்த இசையை கேட்கும்போது, யாராவது ஒருவருக்குள் வந்திறங்குவதாக இவர்கள் நம்புகிறார்கள். தெய்வங்களை இசையால் வரவழைக்கும் திறன் பெற்றவர்களே இந்த இசையை இசைக்கின்றனர்.
வனதேவாதிகளை அழைக்க..
இசைக்கும் அந்த அனுபவம் குறித்து நம்மிடம் பேசினார் பழநி மலையில் உள்ள தாண்டிக்குடி கடுகுதடிப்புதூரைச் சேர்ந்த பொன்னுச்சாமி. ‘‘வனதேவாதிகளை வரவழைக்கணும்ன்னா அதுகளுக்குப் பிடித்த குழலை மட்டும்தான் ஊதணும். குழல் வாசிச்சு வனதேவாதிகளை வரவைக்கிறத நாங்க ‘வெறியாட்டு’ன்னு சொல்லுவோம். பளிச்சியம்மன், உள்ளிட்ட 12 வனதேவாதிகள் இருக்கு.
வெறியாட்டுல ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொருவிதமா குழல் வாசிக்கணும். அந்தச் சத்தத்தக் கேட்டொடன எங்கயிருந்தாலும் அதுக மயங்கி ஓடிவந்துரும். அதேமாதிரி, ஒவ்வொரு தேவாதிக்கும் ஒரு ஆட்டம் இருக்கு. அருள் வந்து ஆடுறவங்க அந்தந்த தேவாதிக்கான ஆட்டத்தைத்தான் ஆடுவாங்க. அதைவச்சே இன்ன தேவாதி வந்திருச்சின்னு தெரிஞ்சுக்கலாம். சில தேவாதிக ஒடனே வந்திரும். சிலதை மணிக்கணக்குல ஊதித்தான் கொண்டு வரணும். எல்லாத் தேவாதிகளும் வரும் வரைக்கும் வாசிச்சுக்கிட்டே இருக்கணும்’’ என்கிறார் பொன்னுச்சாமி.
பளியர்களிடம் படிக்கவேண்டும்
‘‘ஆண்டு முழுவதும் வனப்பகுதிகளில் கடினமாக உழைத்துத் திரியும் பளியர் இன மக்களுக்கு இசைதான் புத்துணர்வை அளிக்கிறது. அவர்களின் இசைக் கொண்டாட்டங்களை சிறிதுநேரம் பார்த்தாலே ஆடாதவர்களும் ஆடிவிடுவார்கள். அடர்ந்த வனப்பகுதியில் எழில் சூழ்ந்த பின்னணியில் இரவுப் பொழுதில் ஏகாந்தமாய் வெளிப்படும் பளியர்களின் இசையானது ஒரு புதுவித அனுபவத்தைத் தரும். தமிழர்களின் ஆதி இசை மரபுகள் பற்றி அறிய பளியர்களிடம்தான் நாம் பாடம்படிக்க வேண்டும்” என்கிறார் ஆதிவாசிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவரும் காந்திகிராம பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் முத்தையா.
இசைக்கு வசமாகாத இதயம் இருக்க முடியாது. பழங்குடிகளின் இசை மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT