Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM
மயிலாடுதுறை தொகுதியில் இந்தமுறை மணிசங்கர் ஐயருக்கு பதிலாக ஜி.கே.வாசன் போட்டியிடலாம் என காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கிறார்கள்.
கட்சியின் மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக இருப்பவர்களும் இந்தமுறை கட்டாயம் மக்கள் ஓட்டு மூலமே நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். ராஜ்யசபா மூலம் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று ராகுல் திட்ட மாகச் சொல்லி இருக்கிறார். இதையடுத்து, இதுவரை குறுக்கு வழியில் டெல்லிக்கு பயணமாகிக் கொண்டிருந்த பெருந்தலைகள் சிலர் தங்களுக்கு சாதகமான தொகுதிகளைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தனது சொந்தத் தொகுதியான மயிலாடுதுறையை தனக்காக தயார்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.
மயிலாடுதுறை தொகுதிக்குள் காங்கிரஸ் செல்வாக்காக இருந் தாலும் இதுவரை மூப்பனார் குடும்பம் இங்கு போட்டியிட்ட தில்லை. தங்களுக்கு விசு வாசமானவர்களையே நிறுத்தி இருக்கிறார்கள். ஒரே ஒரு முறை இங்குள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட்டு சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை எட்டிப் பிடித்தார் மூப்பனார். இந்த நிலையில் முதன்முறையாக மயிலாடுதுறை தொகுதியில் களமிறங்க காய் நகர்த்துகிறது கிங் மேக்கரின் குடும்பம்.
வாசன் மயிலாடுதுறையில் போட்டியிட வேண்டும் என 18 பேர் காங்கிரஸ் தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குடவாசல் தினகரன், “அரசியலுக்கு அப்பாற்பட்டு மூப்பனார் குடும்பத்துக்கு இங்கு அனைத்துக் கட்சிகளிலும் விசுவாசிகள் இருக் கிறார்கள். ஐயா வாசன் இங்கே போட்டியிட்டால் கட்டாயம் வெற்றி பெறுவார்’’ என்று சொன்னார்.
மரகதம்சந்திரசேகர், பக்கீர்முகமது, கிருஷ்ணமூர்த்தி, பி.வி.ராஜேந்திரன், மணிசங்கர் அய்யர் என காங்கிரஸுக்கே தொடர்ந்து வாழ்வளித்திருக்கிறது மயிலாடுதுறை. வாசன் இந்தத் தொகுதியை குறிவைப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள். ’அப்படியானால் மணிசங்கர் ஐயர் எதிர்காலம்?’ என்று கேட்டால், ’’அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலம் முடிவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே’’ என்று தயாராக பதில் வைத்திருக்கிறது வாசன் வட்டாரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT