Published : 31 Aug 2017 09:05 AM
Last Updated : 31 Aug 2017 09:05 AM

ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தமிழக அரசின் புதிய உத்தரவு விபத்துகளை குறைக்க உதவுமா?

தமிழகத்தில் 90 சதவீத சாலை விபத்து, உயிரிழப்புகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த 16,092 சாலை விபத்துகளில் 17,218 பேர் இறந்துள்ளனர். இதில், 16,011 விபத்துகளுக்கு ஓட்டுநர்களே காரணமாக இருந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த 9,231 விபத்துகளில் 9,881 பேர் இறந்துள்ளனர். 90 சதவீத விபத்துகளுக்கு ஓட்டுநர்களே காரணம் என தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஓட்டுநர்களின் கவனக்குறைவு, வாகனங்களின் வேகம் அதிகரிப்பு, பாதசாரிகளின் கவனக்குறைவு, மோசமான சாலைகள், வாகனங்கள் அதிகரிப்பு, போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குதல் உள்ளிட்டவையே விபத்துகளுக்கு காரணங்களாக இருக்கின்றன

புதிய உத்தரவு கைகொடுக்குமா?

இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தின் அசலை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு விபத்துகளை குறைக்க உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் தினமும் 6,210 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 620 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனங்களின் பெருக்கம், மோசமான சாலைகள் என பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஓட்டுநர்களின் கவனக்குறைவே அதிக விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

குறிப்பாக, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், அதிக வேகமாக செல்லுதல், சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் வாகனம் ஓட்டுதல் ஆகியவை அதில் அடங்கும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்த உள்ளோம். மேலும், விதிமுறைகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமம் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அதற்காகத்தான் செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது, அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும், போக்குவரத்து போலீஸாரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

15% போலி ஓட்டுநர் உரிமம்?

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் ஓட்டுநர் உரிமங்களில் சுமார் 10 முதல் 15 சதவீத உரிமங்கள் போலியாக இருக்கின்றன. வேறொருவரின் ஓட்டுநர் உரிமத்தில் இருந்து புகைப்படம் ஒட்டி நகல் எடுத்துக் கொள்வது, போலி ஓட்டுநர் உரிமங்களை தயாரிப்பது போன்ற காரணங்களால் போலிகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிதாக வழங்கும் ஓட்டுநர் உரிமங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகின்றன. வரும் 1-ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் ஆய்வின்போது போலி ஓட்டுநர் உரிமங்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x