Last Updated : 29 Aug, 2017 12:16 PM

 

Published : 29 Aug 2017 12:16 PM
Last Updated : 29 Aug 2017 12:16 PM

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 2 ஆண்டாக அலையும் பஞ்சாலைத் தொழிலாளி: 100 முறைக்கும் அதிகமாக மனு அளித்தும் தீர்வு இல்லை

பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அளித்த மனு மீது வட்டாட்சியர் உத்தரவிட்டு 2 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனம் நொந்துள்ளார் பஞ்சாலைத் தொழிலாளி ஒருவர்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தா.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட மாவிலிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் வீ.ராமச்சந்திரன் (57). பஞ்சாலைத் தொழிலாளி. இவர், தன் வீட்டுக்குச் செல்லும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 2015-ம் ஆண்டு மனு அளித்தார். முசிறி வட்டாட்சியர் ஆக்கிரமிப்பை உறுதி செய்து, அதை அகற்றக் கோரி உத்தரவிட்டு 2 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்தநிலையில், ‘பொதுப்பாதையைக் காணவில்லை’ என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையுடன் திருச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த ராமச்சந்திரன் ‘தி இந்து’விடம் கூறியது:

அரசின் தொகுப்பு வீடு திட்டத்தில் வீடு கட்டி வருகிறேன். எனது வீட்டுக்குச் செல்லும் பொதுப்பாதையில் ஒருவர் தடுப்புச்சுவர் எழுப்பி ஆக்கிரமித்ததால், வீட்டுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தேன்.

முசிறி வட்டாட்சியர் ஆய்வு செய்து 2015 செப்.9-ம் தேதி ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தா.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரூ.3 லட்சம் வரை செலவிட்ட நிலையில், வீடு கட்டுமானப் பணிகள் அப்படியே கிடப்பில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 100 முறைக்கும் மேலாக மனு அளித்துவிட்டேன். முசிறி வட்டாட்சியர் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த மாதம்கூட மீண்டும் உத்தரவிட்டார். ஆனால், அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பஞ்சாலையில் மாதம் ரூ.5,500 ஊதியத்துக்கு பணியாற்றி வரும் நிலையில், மாதத்துக்கு 3 முறையாவது ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தும் பலனில்லை” என்றார்.

இதுதொடர்பாக தா.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது, “பொதுப்பாதை ஆக்கிரமிப்பு என்று கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உறுதிப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள நோட்டீஸ் கொடுத்துள்ளோம். 3 நோட்டீஸுக்கு பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் நாங்களே அகற்றுவோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x