Published : 29 Aug 2017 12:16 PM
Last Updated : 29 Aug 2017 12:16 PM
திருவாரூர் மாவட்டம் மூனாற்றுத் தலைப்பு வெண்ணாற்றில் பிரிந்து நீடாங்கலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை வழியாக பாய்ந்து சென்று முத்துப்பேட்டை கடலில் கலக்கிறது பாமணி ஆறு. இந்த ஆறு 36,757 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களின் பாசனத்துக்குப் பயன்பட்டு வருகிறது. மேலும், மழைக்காலங்களில் பல நூற்றுக்கணக்கான கிராமங்களின் வடிகாலாக இந்த ஆறு பயன்படுகிறது. அந்த வகையில் 24 வடிகால்கள் இந்த ஆற்றில் வந்து கலக்கின்றன.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆறு கடுமையாக சிதிலமடைந்து வருவதோடு ஆற்றில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துவிட்டன. கருவை மரங்கள், கோரைப்புற்கள், காட்டாமணக்குச் செடிகள் முளைத்து பல இடங்களில் பாமணி ஆறு இருப்பதே தெரியவில்லை. ஆக்கிரமிப்புகளால் ஆற்றின் பரப்பளவு குறைந்து வாய்க்கால் போல காட்சியளிக்கிறது. மேலும், கரைகள் முற்றிலும் வலுவிழந்த நிலையில் காணப்படுவதால், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கில் உடைப்பெடுக்கும் அபாயமும் உள்ளது. எனவே, பாமணி ஆற்றை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மானங்காத்தான் கோட்டகத்தைச் சேர்ந்த விவசாயி தெய்வமணி கூறியதாவது:
பாமணி ஆறு நாளுக்குநாள் மோசமாக தூர்ந்து வருகிறது. சேரன்குளம் தடுப்பணை, கடுக்காக்காடு, தலையாமங்கலம், குறிச்சி, பாளையூர் அக்ரஹாரம், பெருகவாழ்ந்தான், மரவாதி தடுப்பணை, சோத்திரியம் உட்பட பல இடங்களில் பாமணி ஆற்றில் காட்டுக்கருவை மரங்கள், நாணல், காட்டாமணக்குச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. அவை வெள்ளக் காலங்களில் தண்ணீர் வேகமாக வடியவிடாதபடி தடுக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்றபோதே ஆறு தாங்காமல் கரை உடைத்து வெள் ளப் பாதிப்பை ஏற்படுத்தியது. மானங்காத்தான் கோட்டகத்தில் சங்கரமூர்த்தி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு இன் னும் சரி செய்யப்படவில்லை இதுபோன்ற குறைகளை விரை வாக சரிசெய்ய வேண்டும் என்றார்.
எடஅன்னவாசல் பன்னீர்செல்வம் கூறியதாவது: நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் பாமணி ஆற்றில் பூவனூர், ராஜப்பையன் சாவடி, குறுவைமொழி மேலப்பாலம், மன்னை நகர் பாலம் என பல இடங்களில் ஆறுகள் இருப்பதே தெரியவில்லை. ஆற்றுப்படுகைகள் முற்றிலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
ஆறுகளை பராமரிக்கத் தவறியதன் காரணமாக கடந்த 2008-ம் ஆண்டில் ஆற்றில் மண்டிக்கிடந்த புதர்கள், காட்டாமணக்குச் செடிகளால் தண்ணீர் வேகமாக பாய முடியாமல் குறுவைமொழியில் கரை உடைப்பெடுத்து மன்னார்குடி,கோட்டூர், முத்துப்பேட்டை ஒன்றியப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிர்களை மூழ்கடித்தது. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வீடிழந்தனர். இதுபோன்ற நிலை இனியும் வராமல் தடுக்க பாமணி ஆற்றை முழுமையான புனரமைப்பு செய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது: அரசு கடந்தாண்டு பராமரிப்பு நிதியாக ரூ.1 கோடியை ஒதுக்கியது. அதில், ரூ.45.25 லட்சத்துக்கு பாமணி ஆற்றை ஒட்டியுள்ள ‘ஏ’ பிரிவு வடிகால் வாய்க்கால்கள் பராமரிக்கப்பட்டன. மீதித்தொகையில் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
ஆனால், நடப்பாண்டில் பராமரிப்பு நிதியாக ரூ.60 லட்சம் மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது. அதைக்கொண்டு ரூ.29 லட்சத்தில் தூர் வாரும் பணிகளும், மீதமுள்ள தொகையைக் கொண்டு கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தக் குறைந்த தொகை கடலில் கரைத்த பெருங்காயத்தைப் போலவே காணாமல் போய்விடுகிறது” என்றனர்.
எனவே, பாமணி ஆற்றை தூர் வாருவதற்கென சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்து, விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT