Published : 16 Aug 2017 12:07 PM
Last Updated : 16 Aug 2017 12:07 PM

39 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலம் கட்டும்போது மூழ்கிய இழுவை படகு தென்பட்டது

39 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலம் கட்டும் போது மூழ்கிய இழுவைப் படகு மன்னார் வளைகுடா கடலில் நேற்று தென்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பாம்பன் சாலை பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் ராமேசுவரம் தீவை இந்திய நிலப்பரப்புடன் இணைக்கிறது.

இந்தியாவில் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றான இது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1973-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் இரண்டே கால் கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் கடலில் அமைக்கப்பட்டுள்ள 79 தூண்களால் தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது 2.10.1988 அன்று இப்பாலத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில், பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதி நேற்று உள்வாங்கியது. அப்போது 1978-ம் ஆண்டு பாம்பன் பாலம் கட்டும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு புயலால் மூழ்கிய இழுவைப் படகு முழுமையாகத் தென்பட்டது. இதை ராமேசுவரம் வந்த சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து கடலியல் ஆய்வாளர் தாகிர் சைபுதீன் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலை துறையினரால் பாம்பன் சாலை பாலப் பணிகள், தூத்துக்குடியை சேர்ந்த நீலமேகம் அன்ட் கோ என்ற நிறுவனம் சார்பாக நடைபெற்றன. ராமேசுவரத்தை 1978-ம் ஆண்டு புயல் தாக்கியது. அப்போது பாம்பன் சாலை பாலம் கட்டும் பணி வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

விலை உயர்ந்த தளவாடங்கள் கடலுக்குள் மூழ்கின. இதற்காக நீலமேகம் அன்ட் கோ நிறுவனம் மத்திய அரசிடம் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டது. ஆனால் நிவாரணம் வழங்கப்படாததால் அந்த நிறுவனம் பாம்பன் பாலம் கட்டும் பணியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டது. அதைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த கேமன் இந்தியா என்ற நிறுவனம் பாம்பன் சாலை பாலத்தை முழுமையாகக் கட்டி முடித்தனர். பாம்பனில் மன்னார் வளைகுடா கடல் பகுதி உள்வாங்கும்போது 1978-ம் ஆண்டில் ராமேசுவரத்தை தாக்கிய புயலில் மூழ்கிய தனியார் நிறுவனம் பயன்படுத்திய தளவாடங்களில் சில தென்படக்கூடும். ஆனால் மூழ்கிய இழுவைப் படகின் முழுப்பாகமும் தெரிவது இதுவே முதல் முறை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x