Last Updated : 27 Aug, 2017 01:21 PM

 

Published : 27 Aug 2017 01:21 PM
Last Updated : 27 Aug 2017 01:21 PM

அமெரிக்காவில் இருந்து இணையம் வழி ஆங்கிலப் பயிற்சி: அதிநவீன வசதிகளுடன் அசத்தும் கந்தம்பட்டி நடுநிலைப் பள்ளி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து ‘ஸ்போக்கன் இங்கிலீஸ்’ பயிற்சி வழங்கப்படுகிறது என்ற தகவலை கேட்கும்போது ஆச்சரியம் எழாமல் இருக்காது. சேலத்தை அடுத்துள்ள கந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குதான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 1926-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக உருவான இந்த பள்ளி 2004-ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சேலம் மாநகராட்சி எல்லையில் இருக்கும் இந்த பள்ளியைச் சுற்றிலும் ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. இருந்தும் கூட, கந்தம்பட்டி பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையும் மாணவர்களால் நிரம்பி வழிகிறது.

தனியார் பள்ளிக்கு இணையாக

முழுமையான அடிப்படை வசதிகளும், தரமான கல்வியும் வழங்கப்படுவதால் தனியார் பள்ளிகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் இந்தப் பள்ளி திகழ்கிறது. இதனால், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் விரும்பி சேர்த்துள்ளனர்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் அகலமான மேசையுடன் கூடிய இருக்கை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிவறை, வளரிளம் மாணவிகளுக்காக கழிவறையில் ‘நாப்கின்’ எரியூட்டி இயந்திரம், பளபளக்கும் டைல்ஸ் தரைத்தளம் என அடிப்படை வசதிகள் நிறைந்துள்ளன. நடுநிலைப் பள்ளியாக இருந்தாலும் கூட இங்கு சிறிய அளவிலான அறிவியல் ஆய்வகம் செயல்படுவது பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட நூல்களுடன் கூடிய நூலகம் செயல்படுவது இந்தப் பள்ளியின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி

“இவை மட்டுமல்ல; எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு அமெரிக்காவில் இருக்கும் டீச்சர் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கற்றுக் கொடுக்கிறார்” என்று பள்ளியைப் பற்றி பெருமிதத்தோடு கூறுகிறார் தலைமை ஆசிரியர் எம்.சுபலட்சுமி. “இங்குள்ள மாணவர்களுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் ஈரோடு தமிழரான மித்ரா என்னும் பெண், வாரத்தில் 3 நாட்கள் இணையதளம் மூலமாக ஆங்கிலத்தில் உரையாடுவது பற்றி வகுப்பெடுக்கிறார். 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்கள் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி பெறுகின்றனர். இது எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த அரியதொரு வாய்ப்பு” என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, “எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பின் சுவரிலும் அந்தந்த வகுப்புக்கான பாடங்களை விளக்கும் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களைப் பார்க்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர் போதிக்கும் பாடம் மனதில் பசுமரத்தாணி போல பதியும். அதற்காக செலவைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து வகுப்பறைகளிலும் இதுபோன்ற ஏற்பாடுகளை செய்துள்ளோம். இது தவிர மாணவர்களுக்கு படக் காட்சிகள் மூலமாக பாடங்களில் ஆர்வம் ஏற்படுத்த ‘4டி அனிமேஷன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்” என்று பள்ளியின் சிறப்பம்சங்கள் பற்றி விவரித்தார்.

4டி அனிமேஷன் செயலி

பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடையே அமர்ந்து, காகிதத்தில் இருக்கும் ‘4டி அனிமேஷன்’ ஓவியத்தை தமது செல்போனில் ‘ஸ்கேன்’ செய்கின்றனர். பேப்பரில் இருந்த ஓவியங்கள் செல்போன் திரையில் முழுமையாய் உருவம் பெற்று நேரில் நிற்பது போல அசைந்தாடுகிறது. இது குறித்து ஆசிரியர் வெண்ணிலா கூறுகையில், “4டி அனிமேஷன்’ தொழில்நுட்பத்தில் விலங்குகள் உள்ளிட்ட உருவங்களை மாணவர்கள் நேரில் காண்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியால் நாங்கள் பாடங்களை எளிதாக கற்பிக்கவும், மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஆகவே, ஆசிரியர்கள் அனைவரும் எங்கள் செல்போனில் ‘4டி அனிமேஷன் செயலி’ வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

பெரிய அளவில் பிரம்மாண்ட ‘தொடு திரை’, புரொஜக்டர், இணைய வசதி என நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் ஸ்ரீ.பார்வதி கூறுகையில், “பாடங்களை புரொஜக்டர் மூலமாக தொடுதிரையில் காண்பித்து, மாணவர்களுக்கு போதிக்கிறோம். குறிப்பாக, அறிவியல் பாடங்களை நடத்தும்போது, உருவங்களை இணைத்தல், வண்ணம் தீட்டுதல் என்பவை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மாணவர்கள் தொடுதிரையில் எளிதில் செய்முறையாக அறிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற தொடுதிரை வசதி தனியார் பள்ளிகளில் கூட அரிதாக சில பள்ளிகளில்தான் காண முடியும்” என்றார்.

மாடித் தோட்டம்

வகுப்பறையின் மொட்டை மாடியில் மற்றொரு ஆச்சரியமாக மூலிகைச் செடிகள், காய்கறி செடிகள், கீரைகள் என மாடித் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஓரிலைத் தாவரம், ஈரிலைத் தாவரம் முதலானவை பற்றிய அடிப்படை தாவரவியல் கல்வியும், மூலிகைகளின் பயன், காய்கறிகளின் சத்துகள், மண்புழு உரம் போன்றவை பற்றியும் நேரடி செயல் விளக்கக் கல்வி அளிக்கப்படுகிறது. தோட்டத்தில் அவ்வப்போது கிடைக்கும் காய்கறிகள், கீரை மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஆரோக்கியமான சூழல் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் சிறப்பாக உள்ளது. ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் கூறுவதை புரிந்து கொண்டு, அதற்கு ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் கூட உடனுக்குடன் பதிலளிப்பதை காணும்போது இதனை அறிய முடிகிறது. வழக்கமான பாடங்களைத் தவிர சிறப்பாசிரியர்களைக் கொண்டு தையல் கலை, ஓவியம், விளையாட்டு போன்றவை மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன. தினமும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருபவர்கள், விடுமுறை எடுக்காதவர்கள், அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் என மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இத்தகைய பல சிறப்புகளின் காரணமாக இந்த அரசுப் பள்ளி தமக்கென தனித்துவ அடையாளத்தைப் பெற்றிருப்பதுடன், மக்களின் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்று வளர்ந்து வருகிறது. கந்தம்பட்டி பள்ளி சேலம் மாவட்டத்துக்கு மட்டுமல்ல; மாநிலத்துக்கே வழிகாட்டும் முன்மாதிரி அரசுப் பள்ளிகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 74027 20931

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x