Published : 18 Aug 2017 11:17 AM
Last Updated : 18 Aug 2017 11:17 AM

காலத்துக்கும் கழைக்கூத்தாட வேண்டுமா? - பரிதாப நிலையில் தொம்பன் குடிகள்

தெ

ருவோரம் கூட்டம் கூட்டி, சாகசங்கள் செய்யும் கழைக்கூத்தாடிகள் தமிழகத்தில் பத்தாயிரம் பேர் இருக்கிறார்கள். நாடோடிப் பிழைக்கும் இவர்களின் வாழ்க்கை அதலபாதாளத்தில் கிடக்கிறது. ஆனாலும் தங்களுக்கென ஒழுக்க நெறிகளை வகுத்துக் கொண்டு கண்ணியமாய் நாட்களை கடத்துகிறார்கள் இவர்கள்.

தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், உளுந்தூர்பேட்டை, மதுராந்தகம், விழுப்புரம், காரைக்கால், சிவகங்கை, விராலிமலை, கோவில்பட்டி, சிங்கம்புணரி, மானாமதுரை, கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட 40 இடங்களில் கழைக்கூத்தாடிகள் வசிக்கிறார்கள். இவர்கள், நாடோடிகளாய் வாழ்ந்தாலும் ஆண்டுக்கு இரண்டுமுறை தங்களின் சொந்த ஊருக்குக் கட்டாயம் வந்தே ஆகவேண்டும். அதில், ஒன்று ஆடிப்பெருக்கு, இன்னொன்று போகிப் பண்டிகை.

கம்பத்தடி மாரியம்மன்

தங்களது குலதெய்வமான கம்பத்தடி மாரியம்மனுக்கு விழா எடுக்கவே இவர்கள் இப்படிக் கூடுகிறார்கள். கூடவே, ஆண் பிள்ளைகளுக்கு பெண் பார்த்துப் பேசிமுடிக்கவும் இந்தத் திருவிழாக்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் திருவிழாவின் போது அத்தனை பேரும் கட்டாயம் வரவேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள் போலும். இதை மீறுபவர்கள், தங்களது 15 நாள் வருமானத்தை கம்பத்தடி மாரியம்மனுக்கு காணிக்கையாகத் தந்துவிட வேண்டும்!

தங்களது பழக்கவழக்கங்கள் குறித்து மேலும் பேசினார் பெரம்பலூரைச் சேர்ந்த கழைக்கூத்தாடி ரவி. “கம்பத்தடி மாரியம்மனுக்கு மார்கழி 15-ல் காப்புக்கட்டி போகியன்று கிடா வெட்டி விமரிசையா திருவிழா கொண்டாடுவோம். காப்புக் கட்டியாச்சுன்னாலே யாரும் தொழிலுக்குப் போகமாட்டோம். 15 நாளும் கலை நிகழ்ச்சி, கச்சேரின்னு ஊரே களைகட்டும். போகியன்னிக்கு அம்மனுக்கு கிடா வெட்டி மிகவும் தடபுடலா விருந்து வைப்போம்.

kazhaikoothaadi_1.jpg ரவி right

எங்க இனத்துல பெண் குழந்தைங்க பிறப்பு குறைவு. அதனால, மாப்பிள்ளைதான் சீதனம் குடுத்து பெண்ணைக் கட்டிட்டுப் போகணும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்போதே, அந்தப் பொண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தால் இன்னாருக்குத்தான் குடுக்கணும்னு உறுதி வாங்கிக்கிறதும் உண்டு” என்றார் ரவி.

தடபுடல் விருந்துவைத்து பெண்களைக் கட்டிக் கொடுக்கும் இவர்கள், மண முறிவுகளைத் தடுக்க சூப்பர் கடிவாளம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார்கள். எந்த மாப்பிள்ளையாவது மனைவியோடு சுமூகமாக குடும்பம் நடத்தாமல் பிரச்சினைகள் செய்தால், அந்த மாப்பிள்ளையையும் பெண்ணையும் பெண்ணின் பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள்.

அதன்பிறகு, ஆறு மாத காலம் மாமியார் வீட்டில் தங்கியிருந்து அவர்களுக்கும் சேர்த்து அந்த மாப்பிள்ளை உழைத்துப்போட வேண்டும். தேவைப்பட்டால் இந்த கடிவாளத்தை கூடுதலாக இன்னும் ஆறு மாதத்துக்கு இறுக்குவார்களாம். இதற்குப் பயந்தே, சில மாப்பிள் ளைகள் மூன்றே மாதத்தில் வாலைச் சுருட்டி, வழிக்கு வந்துவிடுவார்கள். பலர், இந்தத் தண்டனைக்குப் பயந்து, மனைவியை கண்ணுக்கு இமையாய் கவனித்துக் கொள்கிறார்கள்.

துரத்திவிடுறாங்க

யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லாமல் தாமுண்டு தம் பிழைப்புண்டு என வாழும் இவர்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. அதுகுறித்தும் பேசிய ராமு, ”நாங்கபாட்டுக்கு ஊர் ஊராப் போய் பொழைச்சுட்டு இருந்தோம். பொழப்பு பாக்கபோற இடத்துல எங்க புள்ளைங்கல பிடிச்சுட்டுப்போய் பள்ளிக்கூடத்துல சேர்க்குறாங்க. சரி, நம்ம பிள்ளைகளாச்சும் ஊர் ஊரா நாடோடியா அலையாம, படிச்சு முன்னேறி வரட்டும்னு நினைச்சா, ஒன்பதாம் வகுப்புல, சாதி சான்றிதழ் கேட்டு எங்க புள்ளைங்கள பள்ளிக்கூடத்துலருந்து துரத்திவிடுறாங்க.

நாங்க தொம்பன் சாதி. எங்க புள்ளைங்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டா, பெத்தவங்களோட. படிப்பு அல்லது சாதி சான்றிதழ் இருந்தா கொண்டாங்கன்னு அதிகாரிங்க இழுத்தடிக்கிறாங்க. பள்ளிக்கூடத்துப் பக்கமே போகாத எங்களுக்கு ஏது சான்றிதழ்? இதை யாருமே யோசிக்க மாட்டேங்குறாங்க. இதனால எங்க புள்ளைங்க படிப்பை பாதியில விட்டுட்டு, அங்கிட்டும் இல்லாம இங்கிட்டும் இல்லாம நிக்கிறாங்க.” என்று வேதனைப்பட்டார்.

செவிகொடுக்க ஆளில்லை

kazhaikoothaadi_2.jpg சுப்பிரமணியன்

கழைக்கூத்தாடிகள் நலனுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பு. அதன் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், “தொம்பன் சாதி, பட்டியல் இனத்தில் வருகிறது. இவர்களில் சரிவரப் படித்தவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த தலைமுறையாவது படித்து முன்னுக்கு வர வேண்டும் என இவர்கள் நினைக்கிறார்கள். ஆனா, சாதிச் சான்றிதழை தர மறுத்து இவர்களின் முன்னேற்றத்துக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே இவர்களின் இந்தப் போராட்டம் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது; செவிகொடுத்துக் கேட்கத்தான் ஆளில்லை” என்கிறார்.
 

பாவப்பட்ட இந்த சமூகம் காலம் முழுவதும் கழைக்கூத்தாடிகளாகவே இருக்க வேண்டுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x