Published : 30 Aug 2017 04:29 PM
Last Updated : 30 Aug 2017 04:29 PM

புகழேந்திதான் குழப்பத்தில் இருக்கிறார்; தொண்டர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்: மைத்ரேயன்

புகழேந்திதான் குழப்பத்தில் இருக்கிறார்; தொண்டர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்று மைத்ரேயன் கூறியிருக்கிறார்.

அதிமுக அணிகள் ஓபிஎஸ் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அணி என்றும் , எடப்பாடி தரப்பினர் அம்மா அணி என்ற பெயரிலும் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. அம்மா அணியில் தினகரன் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார்.

இடையில் அதிமுக அம்மா அணியிலேயே தினகரன் தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் மோதல் ஆரம்பமானது. இதில் தினகரன் பலரை கட்சியிலிருந்தும் , நிர்வாக பொறுப்பிலிருந்தும் நீக்கினார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரு அணியினரும் இணைந்தனர். இதையடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக பிரிந்தனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டினார். அந்த கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நேற்று முன் தினம் டெல்லி சென்று தேர்தல் ஆணையரை சந்தித்து தீர்மான நகலை அளித்து, பிரமாண பத்திரங்களை இருதரப்பும் வாபஸ் வாங்குவது என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்திய மூன்று அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முடிவெடுத்திருந்தனர்.

இதற்கிடையே அதிமுகவினர் கொடுக்கும் மனு மீது எந்த விசாரணை என்றாலும் எதிர்மனுதாரர் என்ற முறையில் எங்களையும் கலந்தாலோசிக்க வேண்டும் என தினகரன் தரப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மனு அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தரப்பை சேர்ந்த புகழேந்தி நாங்கள் தான் உண்மையான அம்மா அணி, யாரும் இணைய வில்லை, அம்மா அணியினர் நாங்கள் இன்னும் தனியாகத்தான் செயல்படுகிறோம். என்று தெரிவித்து சென்றார்.

இது குறித்து அதிமுக அணி எம்பி மைத்ரேயனிடம் கேட்டபோது:

டெல்லிக்கு சென்றது தேர்தல் ஆணையரை சந்திக்கவா?

அப்படி எதுவும் இல்லை. அதற்கு அவசியமே இல்லை.

தேர்தல் ஆணையரை சந்தித்து பிரமாண பத்திரங்களை வாபஸ் வாங்கத்தான் டெல்லி வந்ததாக சொல்கிறார்களே?

அந்த மாதிரி எதுவும் இல்லை.

அதிமுக அணிகள் இணையவில்லை, நாங்கள் தான் உண்மையான அம்மா அணி என்று புகழேந்தி சொல்கிறாரே?

நாங்கள் அதிமுக புரட்சித்தலைவி அணி. இந்த கேள்வியை அம்மா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அல்லது ஜெயகுமாரிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் ஒன்றாக இருந்தார்கள் அவர்களைத்தான் கேட்கவேண்டும்.

அணிகள் இணைந்தது உண்மையென்றால் புகழேந்தி கூறுவது குழப்பத்தை தானே ஏற்படுத்தும்?

அணிகள் இணைந்தது உண்மைதான், ஒரு குழப்பமும் இல்லை , அவர் தான் குழம்பி இருக்கிறார். தொண்டர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x