Published : 02 Aug 2017 09:43 AM
Last Updated : 02 Aug 2017 09:43 AM
காவிரி நதி நீர் சிக்கல், தொடர்ச்சியான வறட்சி, பயிர்க் கடன் என பல்வேறு பிரச்சினைகளில் விவசாயம் சிக்கித் தவிக்கும் சூழலில், இலவச மின்சார பயன்பாட்டுக்கு மின் மீட்டர் பொருத்தும் பணியை மின்வாரிய அதிகாரிகள் தொடங்கியுள்ளதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பெரிய வடவாடி மற்றும் சின்னவடவாடி ஆகிய கிராமங்களில் 6 விவசாயிகளின் விவசாய பயன்பாட்டுக்கான இலவச மின்சாரத்தை அளவீடு செய்ய நேற்று முன்தினம் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், ‘சோதனை முறையில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதால் இந்த மின் மீட்டரை பொருத்துவதாக’ மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். விருத்தாசலம் வட்டத்தில் 600 விவசாய மின் இணைப்புகளுக்கு இதேபோல் மின் மீட்டர் பொருத்த திட்டம் இருப்பதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விவசாயி கூறும்போது, ‘நான் 1991-ம் ஆண்டு முதல் மும்முனை இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறேன். நேற்று திடீரென 4 மின்வாரிய ஊழியர்கள் வந்து பம்ப் செட்டில் மின் மோட்டாரை பொருத்தினர். தற்போது மீட்டர் மட்டும் வைத்து, உங்களது பயன்பாடு எவ்வளவு என்பதை அறிந்து கொள்வோம். சில மாதங்களுக்குப் பின் நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். செலுத்திய பின், உங்களுக்கான மானியம் வங்கி மூலமாக திருப்பித் தருவார்கள் என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இலவச மின்சாரத்தை நிறுத்தி விடுவார்களோ என அச்சமாக உள்ளது’ என்றார்.
இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் சக்திவேல் என்பவர் கூறும்போது, ‘எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை அடியோடு ரத்து செய்யும் முதல்படிதான் இந்த மீட்டர் பொருத்துவது. கடந்த 25 ஆண்டுகளாக இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவந்த சிறு, குறு விவசாயிகள் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாகும்.
மானியமாக பின்னர் தருவோம் என்பார்கள். பின்னர் தர மாட்டார்கள். இதுபோன்று தான் எரிவாயுவுக்கும் கூறினார்கள். ஆனால் தற்போதைய நிலை என்ன? படிப்படியாக மானியம் ரத்து என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மின் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும். இல்லையெனில் இதற்காக போராட்டத்தில் இறங்குவோம்' என்றார்.
இதுதொடர்பாக மாவட்ட மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சத்தியநாரயணனிடம் கேட்டபோது, 'இலவச மின்சாரத்துக்கு மீட்டர் பொருத்துவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் விவசாயிகளின் மின் பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிய பரிசோதனைக்காக சில இடங்களில் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கலாம். அந்த அளவீட்டைக் கொண்டு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT