Published : 10 Aug 2017 09:47 AM
Last Updated : 10 Aug 2017 09:47 AM
தண்ணீரின்றி டெல்டா கதறுகிறது. இனிவரும் ஆண்டுகளிலும் வறட்சியின் தாக்கம் எப்படி இருக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இந்த நேரத்தில், தண்ணீர் சேமிப்பு குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் மாரியம்மாளுக்கு ‘தண்ணீர் தூதர்’ விருது வழங்கிக் கவுரவித்திருக்கிறது நபார்டு வங்கி. மாரியம்மாளும் டெல்டாவின் மகள் என்பது கவனிக்கத்தக்கது!
தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகாவிலுள்ள நடுப்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜே.மாரியம்மாள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 25 கிராமங்களில் இவர் மேற்கொண்டு வரும் தண்ணீர் சிக்கன விழிப்புணர்வு பிரச்சாரங்களே இவரை ‘தண்ணீர் தூதர்’ விருதுக்கு தேர்வு செய்திருக்கிறது.
சமூகப் பணிகளில் ஆர்வம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கையால் விருது பெற்ற களிப்பில் இருந்த மாரியம்மாளிடம் பேசினோம். “அடிப்படையில் நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். தொண்டு நிறுவனத்தில் களப்பணியாளராக இருப்பதால் சமூக பணிகளில் ஆர்வமாய் இருப்பேன். இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் தண்ணீர் சிக்கன விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு என்னையும் தேர்வு செய்தது நபார்டு.
இதற்காக நபார்டு வங்கி தரப்பில் எங்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அந்தப் பயிற்சிகளில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 40 பேர் கலந்துகொண்டோம். நீர் மேலாண்மை, நீரை பாதுகாத்தல், நீர்நிலைகள் குறித்த தகவல்களைச் சேகரித்தல், மழைநீர் சேகரிப்பு முறைகளை கையாளுதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வழிகள், நீர்வள வரைபடம் தயாரித்தல், சொட்டுநீர் பாசன முறைகள், மாற்றுபயிர் சாகுபடிகள் உள்ளிட்டவை குறித்து எங்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தகவல்களைச் சேகரித்தோம்
அதன் அடிப்படையில், கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள நீர் நிலைகள் விவரங்கள், எத்தனை குளம், ஏரிகளை தூர்வார வேண்டும், தடுப்பணைகள் எத்தனை உள்ளன; அவற்றில் ஏதேனும் சேதம் அடைந்துள்ளனவா? வரத்துக் கால்வாய்கள் எத்தனை உள்ளன; அவற்றில் எத்தனை சேதம் அடைந்துள்ளன என்பது உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை வரைபடங்கள் உதவியுடன் சேகரித்தோம்.
இவற்றை வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட கிராமங்களில் குளங்களை தூர்வாருதல், நீர் நிலைகளைப் பாதுகாத்தல். மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தி, அதன் மூலம் எப்படியெல்லாம் நிலத்தடி நீரை உயர்த்த முடியும் என்பது குறித்தெல்லாம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டோம். பிரச்சாரங்கள் மக்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்களை கண்காணிப்பதும் எங்கள் வேலைதான்” என்று சொன்ன மாரியம்மாள், அந்த மாற்றங்களையும் விவரித்தார்.
நல்ல பலன் கிடைத்திருக்கிறது
தஞ்சை மாவட்டத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களில் எங்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்களை விதைப்பதில் மக்கள் முன்னைவிட அதிக நாட்டம் காட்டுகிறார்கள்.
திருவையாறு ஒன்றியத்தில் உள்ள கடமங்குடி, ஐம்பதுமேல்நகரம் கிராமங்களில் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியை அந்தக் கிராமத்தினரே தூர்வாரத் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், நபார்டு எனக்கு அளித்திருக்கும் ‘தண்ணீர் தூதர்’ விருது என்னை இன்னும் ஊக்கப்படுத்தும். வரும் காலங்களில் இன்னும் அதிகமான மக்களிடம் தண்ணீர் சிக்கனம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்” என்கிறார் மாரியம்மாள்.
இந்த ஆண்டு தமிழகத்தில் இருவருக்கு ‘தண்ணீர் தூதர்’ விருது வழங்கியிருக்கிறது நபார்டு வங்கி. அதில் ஒருவர் மாரியம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT