Published : 27 Aug 2017 02:21 PM
Last Updated : 27 Aug 2017 02:21 PM
வைகை ஆற்றுக்குள் கடந்த வாரம் கபடி மைதானம் அமைத்து போட்டி நடத்த முயற்சி நடந்த நிலையில் கடந்த சில நாட்களாக கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் ஏரியாவாக மாறியுள்ளது.
தென்னிந்தியாவின் குறிப்பிடத்தகுந்த ஆறுகளில் காவிரிக்கு அடுத்து வைகை ஆறுக்கு முக்கிய சிறப்பு உண்டு. வைகை ஆற்றின் கரையோரம் செழித்திருந்த நாகரிகத்தை அதன் வாழ்வியல் செழிப்பையும், அழகையும் சங்க இலக்கியங்கள் பெருமையாக குறிப்பிடுகின்றன. கடந்த கால் நூற்றாண்டு முன் வரை ஆண்டு முழுவதும் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய காலத்தில் மதுரை மாவட்டம் செழிப்புடன் மகிழ வைகை ஆறு முக்கிய பங்காற்றியது. தற்போது வைகை ஆறு வறண்டுபோக இயற்கை ஒரு புறம் காரணமாக இருந்தாலும் கழிவுநீர் கலப்பதற்கும், கரையோரம் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதற்கு தனி நபர்களும், அதற்கு நடவடிக்கை எடுக்காமல் துணை போகும் அதிகாரிகளுமே காரணம் என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
வறண்டு கிடக்கும் வைகை ஆற்றில் கடந்த ஆண்டு மைதானம் அமைத்து கபடி விளையாட்டு நடந்தது. உள்ளூர் அமைச்சர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆண்டும், மதுரை வைகை ஆற்றை சமப்படுத்தி கபடி மைதானம் அமைக்கப்பட்டது. இதற்கு இந்த முறை பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கபடி போட்டி கைவிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது மதுரை நகரப்பகுதியில் முக்கிய வணிக வளாகங்கள் இருக்கும் பகுதியில் வைகை ஆறு பார்க்கிங் ஏரியாக மெல்ல மெல்ல பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஏவி மேம்பாலம் அருகே கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனத்துக்கு வரும் கார்கள், இரு சக்கர வாகனங்கள், வைகை ஆற்றுக்குள் நிறுத்தப்படுகின்றன. இதை அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறுகையில்,
வைகையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை தற்போதுள்ள இளம் தலைமுறையினர் பார்க்க முடியவில்லை. தண்ணீர் இல்லாததால் அதிகாரிகள், மக்கள் வைகையை கண்காணிப்பதை விட்டுவிட்டனர். அதனால், ஆக்கிரமிப்பாளர்கள், மெல்லமெல்ல கரையோரங்களையும் மாற்றுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை ஆற்றுக்குள் பாரம்பரியமாக நடக்கும் கள்ளழகர் விழா தவிர மற்ற விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பார்க்கிங் நிறுத்துவதை தடுத்து நிறுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து வைகையை மீட்க சட்டப் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் வைகை ஆற்றுக்குள் நிறுத்தியுள்ளனர். அது தவறுதான். உடனே அவற்றை அப்புறப்படுத்திவிட்டோம். நகரில் வைகையை காக்க கரையோரங்களில் தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT