Last Updated : 27 Aug, 2017 05:33 PM

 

Published : 27 Aug 2017 05:33 PM
Last Updated : 27 Aug 2017 05:33 PM

யாரை ஆதரிப்பது?- புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் இடையே பிளவு

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியா, டிடிவி அணியா என்று முடிவு எடுக்காமல் புதுச்சேரி அதிமுகவினர் குழப்பத்தில் இருந்தனர். அதே நேரத்தில் ஒரு எம்எல்ஏ மட்டும் டிடிவி ஆதரவை உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ தரப்பு இதை ஏற்கவில்லை இதனால் புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எந்தப்பக்கம் செல்வது என்று தெரியாமல் குழம்பி இருந்தனர். டிடிவி தினகரன் ஆதரவு அணி என்று இணைந்து செயல்பட்டு வந்தனர். ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பு முன்பாக அன்பழகன் தலைமையில் அவரும், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் புதுச்சேரி வழியாக கடலூர் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். ஓபிஎஸ் பற்றி கடுமையான கருத்துகளை முன்வைத்தனர். அதன்பின்னர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து துணை முதல்வர் பதவியும் பெற்றார்.

இதனை அடுத்து அன்பழகன் எம்.எல்.ஏ, டிடிவி தினகரனை சந்தித்ததுடன், பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்தார். இந்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்தாலும் தங்களுக்குத்தான் அதிமுகவில் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க டிடிவி தினகரன் 19 எம்.எல்.ஏ.க்களை பிரித்து புதுச்சேரிக்கு கொண்டுவந்து தங்க வைத்தார்.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. அந்நிகழ்வில் புதுச்சேரி எம்எல்ஏக்கள் நால்வரும் பங்கேற்கவில்லை.

புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகர் (ஓபிஎஸ் ஆதரவாளர்), டிடிவி தினகரன் மற்றும் புதுச்சேரியில் தங்கியிருக்கும் தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.

அப்போது சட்டப்பேரவைக்குழு தலைவர் எம்எல்ஏ அன்பழகனின் சகோதரரான எம்எல்ஏ பாஸ்கர் ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசார்ட்டில் முன்பதிவு செய்தோர் விடுமுறை நாட்களில் வந்ததால் தமிழக எம்எல்ஏக்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

அப்போது புதுச்சேரியில் முக்கிய ஹோட்டல்களில் அவர்களை தங்க வைத்துக்கொள்ள முன்வரவில்லை. இதனால் பாஸ்கர் எம்.எல்.ஏ, தனது தொகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறைகளை பெற்று தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.. மேலும் ஹோட்டலுக்கு வந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சால்வை அணிவித்து வரவேற்றார். அதே நேரத்தில் அவரது சகோதரரான அன்பழகன் எம்எல்ஏ இதுதொடர்பாக கருத்து ஏதும் கூறவில்லை.

இந்நிலையில் புதுச்சேரியிலுள்ள மற்றொரு எம்எல்ஏவான வையாபுரி மணிகண்டன் தரப்பில் கூறுகையில், "ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் இணைந்து பேசினர். அப்போது கட்சியும், சின்னமும் எங்கு இருக்கிறதோ அங்கு இருப்பது என முடிவு எடுக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து எம்எல்ஏ அன்பழகன் சட்டப்பேரவை அதிமுக தலைவர் என்ற முறையில் சில முடிவுகள் எடுத்தார். அதில் வையாபுரி மணிகண்டனுக்கு உடன்பாடு இல்லை. இந்நிலையில் அன்பழகன் சகோதரர் எம்எல்ஏ பாஸ்கர் தற்போது டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியுள்ளார். வையாபுரி மணிகண்டன் எந்த அணியிலும் இல்லை. கட்சியும், சின்னமும் யாருக்கு கிடைக்கிறதோ அங்கு இருப்பார்" என்று குறிப்பிடுகின்றனர்.

இதனால் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் இதுவரை இருந்த ஒற்றுமை தற்போது விலகி பிளவு ஏற்பட்டுள்ளது..

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x