Published : 19 Nov 2014 10:10 AM
Last Updated : 19 Nov 2014 10:10 AM
வண்டலூர் பூங்காவில் உள்ள புதருக்குள் மறைந்திருந்த வித்யா என்ற பெண் புலி, பூங்கா ஊழியர்கள் வைத்தக் கூண்டில் நேற்று அதிகாலை சிக்கியது. இதன் மூலம், கடந்த நான்கு நாட்களாக நிலவி வந்த பீதி நீங்கியது.
சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் 14 வெள்ளைப் புலிகள், 12 மஞ்சள் புலிகள் என மொத்தம் 26 புலிகள் உள்ளன. கடந்த 14ம் தேதி காலை புலிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுகள் திறக்கப்பட்டன. புலிகள் அதில் இருந்து வெளியேறி அகழிக்குள் இருக்கும் பாதுகாப்பான காட்டுப் பகுதிக்குள் சென்றன. அச்சமயத்தில், எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்த அகழியின் சுற்றுச்சுவர் வழியே வித்யா என்ற இரண்டு வயது பெண் புலி மட்டும் தப்பியது.
இதையடுத்து, முதற்கட்டமாக, புலி வாழிடப் பகுதியில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி (சிசிடிவி), 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்ததில் பூங்காவின் வாழிடப் பகுதியிலேயே புலி நடமாடுவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வித்யா புலியை பிடிக்க ஊழியர்கள் சிறப்புக் கூண்டு அமைத்தனர். அதில், மாட்டிறைச்சியை வைத்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை உணவு தேடி வந்த வித்யா புலி, கூண்டில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை சாப்பிட வந்த போது, கூண்டில் சிக்கிக் கொண்டது.
புலியை பிடித்த விதம் குறித்து, வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி, பூங்கா வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிடிபட்ட வித்யா என்ற பெண் புலி, விஜய் என்ற ஆண் புலிக்கும், அக்சரா என்ற பெண் புலிக்கும் பிறந்தது. இதனுடன், நேத்ரா, ஆர்த்தி ஆகிய இரு புலிகளும் பிறந்தன. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவற்றுக்குப் பெயர் சூட்டினார். பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆன இப்புலிகளுடன் ருத்ரா மற்றும் பத்மா ஆகிய இருபுலிகளும் உள்ளன. இந்நிலையில், கடந்த 14ம் தேதியன்று பெய்த பலத்த மழை காரணமாக அகழியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. புலிகள் தப்பிவிடாமல் இருக்க மற்ற புலிகளை பிடித்து கூண்டில் அடைத்தபோதும் வித்யா என்ற புலியை மட்டும் பிடிக்க முடியவில்லை. புலி பூங்காவை விட்டு தப்பிச் செல்லவில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இதைக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் உறுதி செய்தன.
இதையடுத்து, புலியைப் பிடிக்க மருத்துவர்கள் குழு, பூங்கா ஊழியர்கள் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டனர். கூண்டு வைத்து புலியை பிடிக்க முடிவு செய்தோம். இதற்காக நேற்று இரவு (நேற்றுமுன்தினம்) 9.00 மணிக்கு கூண்டை அமைத்தோம். அதில், ஏழு கிலோ எடையுள்ள மாட்டிறைச்சி மற்றும் அரைக் கிலோ கல்லீரலையும் வைத்தோம். இறைச்சியைக் கவ்வியதும் கூண்டு தானாகவே மூடிக் கொள்ளும் வகையில் கூண்டை அமைத்திருந்தோம்.
இன்று (நேற்று) அதிகாலை 4.30 மணிக்கு உணவு சாப்பிடு வதற்காக புலி கூண்டிற்குள் வந்தது. அப்போது, இறைச்சியைக் கவ்வியதும் கூண்டு தானாகவே மூடிக் கொண்டதால் புலி சிக்கியது. புலி பிடிக்கப்பட்டுள்ளதன் மூலம், கடந்த சில நாட்களாக நிலவி வந்த பீதி அடங்கி அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இவ்வாறு ரெட்டி கூறினார்.
பெயர் மாறியதால் குழப்பம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 14ம் தேதி கூண்டில் இருந்து தப்பிய புலியின் பெயர் நேத்ரா என தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், நேற்று பிடிபட்ட புலியின் பெயர் வித்யா என அறிவிக்கப்பட்டது.
இதனால் பிடிபட்ட புலியின் பெயர் என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இது பற்றி பூங்கா இயக்குநர் ரெட்டியிடம் கேட்டபோது, “தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புலியின் பெயர் வித்யா என்பதே சரியானது. காணாமல் போன புலியின் பெயர் நேத்ரா என்பது சரியல்ல” என்று தெரிவித்தார்.
அடுத்த பீதி
இதற்கிடையே மதுராந்தகம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியுள்ளது. அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்த தகவலையடுத்து, சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரூ.4 கோடி செலவில் பட்டர்பிளை பூங்கா
ரெட்டி மேலும் கூறுகையில், வண்டலூர் பூங்காவில் ரூ.4 கோடி செலவில் பட்டர்பிளை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் இப்பணி நிறைவடையும். மேலும், பூங்காவின் குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக ரூ.1 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதேபோல், நாட்டில் முதல் முறையாக ரூபாய் ஒரு கோடி செலவில், புலிகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டின் கதவுகள் 304 கிரேடு கொண்ட துருப்பிடிக்காத ஸ்டீல் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கம்பிகள் துருப்பிடித்து அதன் மூலம், விலங்குகளுக்கு தீங்குகள் ஏற்படுவது தடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT