Published : 03 Aug 2017 08:36 AM
Last Updated : 03 Aug 2017 08:36 AM
தமிழகத்தில் முதல்முறையாக முன்கட்டுமான (ப்ரீ காஸ்ட்) திட்டத்தின் கீழ் ரூ.385 கோடியில் கார் பார்க்கிங் மற்றும் 10 மாடிகளுடன் 1,500 வீடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டி முடித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக அதிநவீன தொழில்நுட்பமான முன்கட்டுமானத் திட்டத்தின் கீழ் சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் 1,500 வீடுகள் கட்டப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். முன்கட்டுமானத் திட்டம் என்பது கட்டிடத்துக்கான தூண்கள், பீம்கள், ஸ்லாப்புகள் ஆகியவை தனித்தனியாக தயாரித்து எடுத்து வரப்பட்டு, பின்னர் அவற்றைப் பொருத்தி கட்டிடம் கட்டுவதாகும்.
இந்த நவீன முறைப்படி சோழிங்கநல்லூரில் 14.4 ஏக்கரில் குறைந்த வருவாய் பிரிவினர், மத்திய வருவாய் பிரிவினர், உயர் வருவாய் பிரிவினருக்கு 1 படுக்கையறை, 2 படுக்கையறை, 3 படுக்கையறைகளுடன் 1,500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி 2015-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்துக்காக ரூ.385 கோடி ஒதுக்கப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பு களுக்காக தூண்கள், பீம்கள், ஸ்லாப்புகள் தயாரிப்பதற்காக சோழிங்கநல்லூரிலேயே தொழிற் சாலை அமைக்கப்பட்டு, கட்டு மானப் பணிகள் துரிதமாக நடை பெற்றன. 40 வீடுகள், 60 வீடுகள், 80 வீடுகள், 140 வீடுகள் கொண்ட 26 பிளாக்குகள் தரைத்தளத்தில் கார் பார்க்கிங் மற்றும் 10 மாடிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இங்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களிடம் இருந்து பணம் பெற்று சுயநிதித் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு வரவேற்பு இல்லாததால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமே தனது சொந்த நிதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் மாத தவணையில் 10 ஆண்டுகளில் பணம் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 300 வீடுகள் சுயநிதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,200 வீடுகளுக்கு மாதத் தவணையில் பணம் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
650 சதுர அடி 1 படுக்கையறை வீடு ரூ.27 லட்சத்துக்கும், 850 சதுர அடி 2 படுக்கையறை வீடு ரூ.41 லட்சத்துக்கும், 1,180 சதுர அடி 3 படுக்கையறை வீடு ரூ.58 லட்சத்துக்கும் விற்கப்பட்டுள்ளது. சுற்றுச் சுவருடன் கூடிய இந்த வளாகத்தில் அடிப்படை வசதிகளுடன் கூட்ட அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், திருமண மாளிகை, பூங்கா உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒருங்கிணைந்த வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முதன்முறையாக முன்கட்டுமானத் திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்புகளை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளோம். மின் இணைப்பும், குடிநீர் வசதியும் செய்து தர வேண்டியுள்ளது. ஒதுக் கீடு பெற்றவர்களுக்கு அடுத்த 2 மாதங்களில் வீடுகள் வழங்கப்படும். இங்கு ஒதுக்கீடு பெற்ற பலர் பணம் செலுத்த முடியவில்லை என்று கூறி வீடுகளை சரண்டர் செய்துள்ளனர். அந்த வீடுகளுக்கு தனியாக குலுக்கல் நடத்தப்படும். இதுபோல சோழிங்கநல்லூரில் மேலும் 2 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. குறைந்த வருவாய் பிரிவு வீடு விலை ரூ.20 லட்சத்துக்கும், மத்திய வருவாய் பிரிவு வீடு ரூ.30 லட்சத்துக்கும் விற்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT