Published : 12 Aug 2017 09:00 AM
Last Updated : 12 Aug 2017 09:00 AM

தென் மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் யார் பக்கம்? - தினகரன் பொதுக்கூட்டத்தில் 8 எம்எல்ஏக்கள் பங்கேற்பது உறுதி

தென் மாவட்டங்களைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் வரும் 14-ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், தினகரன் நியமனம் செல்லாது என முதல்வர் பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதனால் தினகரனின் பின் னால் இதுவரை இருந்த எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து இருப்பார்களா, புதிய நிர்வாகிகள் யாரும் இணைவார்களா என்கிற பரபரப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மதுரை உட்பட ஆறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

மதுரை மாவட்டத்தில் உள்ள 8 அதிமுக எம்எல்ஏக்களில் 2 பேர் அமைச்சர்கள். 2 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். மீதமுள்ள 4 பேரில் வி.வி.ராஜன்செல்லப்பா, நீதிபதி, பெரியபுள்ளான் ஆகியோர் இதுவரை எந்த கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் கூறுகையில், ‘அதிமுகவில் 2 அணிகள் இணைய வாய்ப்பில்லை. சசிகலாவை சிறைக்கு சென்று சந்தித்து, அவரது சொல்படி நடந்து கொள்வேன். கட்சி டிடிவி தினகரனிடமும், ஆட்சி எடப்பாடி பழனிசாமியிடமும் இருப்பதே சரியாக இருக்கும். மேலூரில் தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் நான் நிச்சயம் பங்கேற்பேன் என்றார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் உள்ளனர். இவர்களில் சீனிவாசன் அமைச்சராக உள்ளார். வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நிலக்கோட்டை தொகுதி எம்எல்ஏ தங்கதுரை கூறுகையில், நான் ஆரம்பம் முதலே தினகரன் ஆதரவாளர். மேலூர் கூட்டத்தில் பங்கேற்பேன்’ என்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 2 எம்எல்ஏக்களில் பாஸ்கரன் அமைச்சராக உள்ளார். மானாமதுரை எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி கூறுகையில், ‘கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். இந்த ஆட்சியை காப்பாற்றியதே தினகரன்தான். மேலூர் பொதுக்கூட்டத்துக்கு 100 வாகனங்களில் கட்சியினருடன் சென்று பங்கேற்பேன்’ என்றார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 எம்எல்ஏக்களில் ஓ.பன்னீரசெல்வம் தவிர மற்ற 3 பேருமே தினகரனுக்கு ஆதரவாகவே உள்ளனர். பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமு கூறுகையில், மேலூர் கூட்டத்தில் பங்கேற்பேன்’ என்றார்.

தங்கதமிழ்ச்செல்வன், ஜக்கையன் ஆகியோர் தஞ்சையில் தினகரனுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்கள் 2 பேரும் தினகரனுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே செயல்படுகின்றனர். மேலும், தங்கதமிழ்ச்செல்வன் மேலூரில் கூட்ட ஏற்பாடுகளை நேற்று பார்வையிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக உள்ளார்.

சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் கூறுகையில், ‘மேலூர் கூட்டத்தில் பங்கேற்பேன். திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபாவும் பங்கேற்பார் என நம்புகிறேன்’ என்றார்.

சந்திரபிரபாவிடம் கேட்போது, தினகரன் கூட்டத்துக்கு செல்லலாமா என்பது குறித்து கட்சியினருடன் ஆலோசித்து வருகிறேன் என்றார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 எம்எல்ஏக்களில் மணிகண்டன் அமைச்சராக உள்ளார். பரமக்குடி எம்எல்ஏ டாக்டர் கே.முத்தையா கூறியதாவது:

தினகரன் கூட்டத்தில் 100 வாகனங்களில் அதிமுக தொண்டர்களுடன் சென்று பங்கேற்பேன். கட்சி, ஆட்சியை காப்பாற்றும் திறமை சசிகலா, தினகரனுக்கு மட்டுமே உண்டு. மக்களும் இவர்கள் 2 பேரை மட்டுமே ஏற்றுக்கொள்வர். எந்த தேர்தல் வந்தாலும் ஓபிஎஸ், அமைச்சர்களை அழைத்துச் சென்று வாக்கு கேட்க முடியாது.

கூவத்தூரில் சசிகலாவால் மட்டுமே அனைத்து எம்எல்ஏக்களையும் ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். சசிகலா யாரை கை நீட்டியிருந்தாலும் அவரே முதல்வராகியிருப்பார். இதை மறந்து முதல்வர் செயல்படுகிறார் என்றார்.

பல எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகவும், மேலூர் கூட்டத்தில் பங்கேற்பதாகவும் அறிவித்திருப்பது பரபரப்பை அதிகரிக்கச் செய் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x