Published : 01 Aug 2017 10:10 AM
Last Updated : 01 Aug 2017 10:10 AM
கூப்பிடு தூரத்தில் விநாயகர் சதுர்த்தி வந்துகொண் டிருக்கிறது. சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பதில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக் கிறார்கள் சிலை செய்யும் தொழிலாளர்கள்.
பெரும்பாலான ஊர்களில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரோ அல்லது ஒரு பிரிவினரோ தான் காலங்காலமாக விநாயகர் சிலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். பிழைப்புக்காக தமிழகம் வந்திருக்கும் வட இந்தியர்களும்கூட இப்போது விநாயகர் சிலைகள் தயாரிப்பில் போட்டி போடுகிறார்கள். என்றாலும் இயற்கையை மாசுபடுத்தாத வகையில் பாரம்பரிய முறைப்படி சிலை செய்பவர்கள் சொற்பமே.
கடவுளுக்குச் செய்யும் சேவை
செங்கல்பட்டு அருகே திருமணி பகுதியில் தலை முறைகள் கடந்து, ஏராளமான குடும்பங்கள் பாரம்பரிய முறைப்படி விநாயகர் சிலைகளைச் செய்து வருகிறார்கள். கடவுளுக்குச் செய்யும் சேவையாக நினைத்து தாங்கள் விநாயகர் சிலை களை படைப்பதாக பயபக்தியுடன் சொல்கிறார்கள் இவர்கள்.
இதுகுறித்து இன்னும் விரிவாகப் பேசினார் அங்கே விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பிடித்துக் கொண்டி ருந்த சங்கர். ”சதுர்த்திக்கு விநாயகர், நவராத்திரிக்கு கொலு பொம்மைகள், கிருஷ்ணர் சிலைகள் என மழைக்காலங்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் நாங்கள் சிலை செய்வதில் பிஸியாக இருப்போம். விநாயகர் சதுர்த்திக்காக மே மாதமே சிலைகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டோம். 3 இன்ச் தொடங்கி 5 அடி உயரம் வரை பலவிதமான விநாயகர் சிலைகளை செய்கிறோம். நாங்கள் செய்யும் சிலைகளில் எவ்வித ரசாயனக் கலப்பும் இருக்காது; முழுக்க முழுக்க களிமண் மட்டுமே பயன்படுத்துவோம்.
சீசன் நேரத்தில் இரவு பகலா வேலை செஞ்சாத்தான் சிலைகளுக்கான டிமாண்டை சமாளிக்க முடியும் இங்கிருந்து கோவை, திருச்சி, மதுரை மட்டுமில்லாம கர்நாடகா, மும்பைன்னு வெளிமாநிலங்களுக்கும் விநாயகர் சிலைகள் போகுது.” என்றார் சங்கர்.
அரசின் ஆதரவு இல்லை
20 ரூபாயிலிருந்து 3,500 ஆயிரம் ரூபாய் மதிப்பு வரை இங்கு விநாயகர் சிலைகள் கிடைக்கின்றன. திருமணியில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் விநாயகர் சிலைகள் தயாராகின்றன. என்றாலும் இந்தத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு தரப்பில் உதவிகள் இல்லை என்கிறார்கள் இந்தத் தொழிலில் இருப்பவர்கள்.
இதுகுறித்தும் பேசிய சங்கர், “அரசு குறைந்த வட்டியில் எங்களுக்குக் கடன் கொடுக்கலாம். மழைக்காலங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது தலைமுறையாக நான் இந்தத் தொழிலில் இருக்கிறேன். பொறுமையும், அமைதியும், மன உறுதியும் இருந்தால் மட்டுமே சிலைகளை நேர்த்தியாக பிடிக்க முடியும். ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சிலைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், களிமண் உள்ளிட்ட மூலப் பொருட்கள் சரிவரக் கிடைக்காததால் தேவையைச் சமாளிக்கும் வகையில் சிலைகளை தயாரிக்க முடியவில்லை.
மண்ணும் தரங்கெட்டுவிட்டது
அப்போதெல்லாம் வாய்க்கால்களில் தண்ணீர் வளமாக ஓடியதால் வண்டலும் களியும் வற்றாமல் கிடைத்தது. மாட்டு வண்டிகளில் வண்டல் மண்ணும் களி மண்ணும் வீடு தேடி வந்தது. ஆனால் இப்போது, எங்கு பார்த்தாலும் குப்பைப் கழிவுகளால் பூமி மாசடைந்து கிடப்பதால் மண்ணும் தரங்கெட்டு விட்டது. அதுமாத்திரமல்ல.. நுட்பமான இந்த வேலையைச் செய்வதற்கான ஆட்களும் இப்போது கிடைப்பதில்லை. இதுபோன்ற காரணங்களால் இந்தத் தொழில் சற்று தடுமாற்றத்தில் இருக்கிறது.
இப்படியே போனால், எதிர்காலத்தில் இந்தத் தொழில் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படு கிறது. எனது பிள்ளைகளுக்கு இந்தக் கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், அவர்களுக்கு இதில் ஆர்வமிருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் கடவுளுக்குச் செய்யும் இந்தச் சேவை எங்களின் அடுத்த தலைமுறைக்கும் தொடருமா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT