Published : 29 Aug 2017 07:55 AM
Last Updated : 29 Aug 2017 07:55 AM

அம்மா உணவகம், பண்ணை பசுமை காய்கறி கடைகளால் கடும் நிதி நெருக்கடியில் டியூசிஎஸ் கூட்டுறவு சங்கம்: அரசு மானியம், இழப்பீடு தராமல் இழுத்தடிப்பு

அம்மா உணவகங்கள் மற்றும் பண்ணை பசுமை கடை திட்டங்களுக்கு பொருட்களை வழங்கும் டியூசிஎஸ் கூட்டுறவு சங்கத்துக்கு, சென்னை மாநகராட்சி வழங்க வேண்டிய நிலுவை தொகை மற்றும் அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டு நிலுவை மதிப்பு உயர்ந்துகொண்டே செல்வதால், டியூசிஎஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி, கடந்த 2012-ல் 15 அம்மா உணவகங்களைத் திறந்தது. இவை இன்று 407 உணவகங்களாக அதிகரித்துள்ளன. இவற்றுக்கு காய்கறி, மளிகை, சமையல் காஸ் ஆகியவற்றை மலிவு விலையில் டியூசிஎஸ் கூட்டுறவு சங்கம் வழங்குகிறது. மேலும் சென்னையில் உள்ள 43 பண்ணை பசுமை கடைகளுக்கும் இந்நிறுவனம்தான் காய்கறிகளை விநியோகிக்கிறது.

சென்னை மாநகராட்சி டியூசிஎஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை நாளுக்குநாள் அதிகரிப்பதாலும், பண்ணை பசுமை கடைகளில் விற்காமல் வீணாகும் காய்கறிகளால் ஏற்படும் இழப்பீட்டை அரசு வழங்காததாலும், டியூசிஎஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இது தொடர்பாக ஏஐடியூசி தமிழ்நாடு கூட்டுறவு தொழிலா ளர் கூட்டமைப்பு பொருளாளர் வி.முத்தையா கூறியதாவது:

பண்ணை பசுமை கடைகள் மூலம் காய்கறிகளை விற்றால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்கும் என்று அரசு உத்தரவாதம் அளித்து, சில மாதங்கள் இழப்பீடு வழங்கியது. இதனால் டியூசிஎஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை சுமார் ரூ.3 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

ரூ.26 கோடி நிலுவை

அம்மா உணவகங்களுக்கு காய்கறி, மளிகை, காஸ் வழங்க, 1 மாத முன்பணம் வழங்க வேண்டும். 3 மாதங்களுக்கு பொருட்களை விநியோகித்த பிறகு, அதற்கான தொகையை 4-வது மாதம் வழங்கிவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படிதான், டியூசிஎஸ் ஒப்புக்கொண்டது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் காலத்தோடு வழங்காமல், டியூசிஎஸ் நிறுவனத்துக்கு, வழங்க வேண்டிய நிலுவை ரூ.26 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

இது மட்டுமல்லாது, பொது விநியோக திட்டத்தின் கீழ், ரூ.11 கோடிக்கு மேல் மானியம் வழங்க வேண்டியுள்ளது. அதனால் டியூசிஎஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

ஊதியத்தில் பிடித்தம்

இந்நிர்வாகத்தால் காஸ் வாங்கவும், மளிகை பொருட்களை வாங்கவும், அம்மா மருந்தகங்களுக்கு மருந்து பொருட்களை வாங்கவும் பணம் இல்லை. பொருட்கள் இல்லாததால், விற்பனை குறைந்து, வருவாயும் குறைந்துவிட்டது. பண்ணை பசுமை காய்கறி கடையில் ஏற்படும் இழப்பு, விற்பனையாளர் கணக்கில் சேர்க்கப்பட்டு, அவர்களது ஊதியத்தில் பிடிக்கப்படுகிறது.

நிறுவனத்தின் நிதியாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பணிப் பலன்களையும், ஊழியர்களுக்கு பணப் பலன்களையும் வழங்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால், ஊழியர்களுக்கு மாத ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, இந்த விவகாரத்தில், நிதித்துறையை கையில் வைத்திருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலையிட்டு, தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x