Last Updated : 11 Aug, 2017 02:00 PM

 

Published : 11 Aug 2017 02:00 PM
Last Updated : 11 Aug 2017 02:00 PM

தினகரன் தலைமையிலான மேலூர் பொதுக்கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை மேலூரில் வரும் 14-ம் தேதி டிடிவி தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியும் போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், தங்களுடைய செல்வாக்கை காட்ட மதுரை மேலூரில் வரும் 14-ம் தேதி டிடிவி தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த அவரது ஆதரவாளர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

அழைப்பிதழ் அடித்து போலீஸாரிடம் அனுமதி பெறுவது வரை இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் போலீஸார் இந்த கூட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், மேலூர் அதிமுக நகரச் செயலாளர் சரவணன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மாவட்ட மேலூரில் அழகர் கோயில் சாலையில் ஆற்றுக்கால் பிள்ளையார் கோயில் பகுதியில் அதிமுக அம்மா அணியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி எஸ்.என்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை மேலூரில் வரும் 14-ம் தேதி டிடிவி தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியும் போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட்டார்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே மதுரை மேலூரில் தினகரன் பொதுக்கூட்டம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x