Published : 03 Aug 2017 11:25 AM
Last Updated : 03 Aug 2017 11:25 AM
மதுரையில் அதிக வாடகைக்கு வீடு பிடித்து, கஞ்சா பதுக்கி விற்பது தெரியவந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் 300 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன், செல்லூர் போலீஸார் தத்தனேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, காரில் கடத்திய 225 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மதுரை திருவாதவூர் அய்யம்பிள்ளை மகன் கார்த்திக் (20) என்பவரை போலீஸார் கைது செய்தனர். காரில் இருந்து தப்பிய அய்யம்பிள்ளை, விஜயகுமார், சையது இப்ராகிம் ஆகியோரை தேடினர். கைதான கார்த்திக் கொடுத்த முக்கிய தகவலின்பேரில், மதுரை-நத்தம் ரோட்டிலுள்ள திருப்பாலை மாடக்கோன் நகரில் ஒரு வீட்டில் தல்லாகுளம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் உள்ளிட்ட போலீஸார் நேற்று முன்தினம் மதியம் சோதனை நடத்த திட்டமிட்டனர். ஆனால், சம்பந்தப்பட்ட வீடு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே ஆட்கள் நடமாட்டம் இருந்துள்ளது.
இதையடுத்து வேறு வழியின்றி வீட்டின் கதவை உடைத்தனர். வீட்டில் சாக்கு மூட்டையில் 75 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி போலீஸார் கூறியதாவது: தத்தனேரியில் தப்பி ஓடிய ஒருவர் மாடகோன் நகரில், அதிக வாடகைக்கு வீடு எடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வீட்டில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. ஆந்திரா உட்பட பிற இடங்களில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து பதுக்கி இருக்கலாம்.
இரவு நேரங்களில் இந்த வீட்டுக்கு அடிக்கடி கார்கள் வந்து சென்றுள்ளன. இதன்மூலம், வெளியூர்களுக்கும் கஞ்சா கடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
மதுரை நகரில் சில இடங்களுக்கும் இங்கிருந்து கஞ்சா விநியோகம் செய்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். நேற்று முன்தினம் தப்பிய மூவரை பிடித்தால் மேலும், பல தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்றனர்.
கஞ்சா புழக்கம் அதிகரிப்பு
மதுரை நகரில் ஆரப்பாளையம், கரிமேடு, வில்லாபுரம், யாகப்பா நகர், வண்டியூர், ஆனையூர், கீரைத்துறை, செல்லூர், தல்லாகுளம் உட்பட நகரின் எல்லையில் உள்ள சில பகுதிகளில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கூலித் தொழிலாளர்கள், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை கிராம் கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கிலோ கணக்கில் கஞ்சா சிக்குவது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே, யாகப்பா நகரில் கஞ்சா விற்பனையில் இரு கோஷ்டிகள் செயல்படுகின்றன. இரு தரப்பிலும் அடிக்கடி உருவாகும் மோதலில், இதுவரை பழிக்குப் பழியாக 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகளவில் நகரில் கஞ்சா சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கஞ்சா விற்பனையால் உருவாகும் பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கவும் காவல் ஆணையர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT